

அச்சு ஊடகம் வழியாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்துத் தொடர்ந்து எழுதிவருவதற்காக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் பணியாற்றும் சுபஸ்ரீ தேசிகன், மத்திய அரசின் ‘தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பியல்’ விருதைப் பெற்றுள்ளார். காந்தவியல் கோட் பாட்டில் ஆய்வுப்பட்டம் பெற்ற சுபஸ்ரீ தேசிகன், பிட்ஸ் பிலானி கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் பணியிலிருந்து அறிவியல் இதழிய லாளராக மாறியவர். அறிவியல் மூலமாகப் பிரபஞ்சத்தின் ரகசியங்களை நெருங்கிப் பார்ப்பதற்கான ஆசை இவரது எழுத்துகளில் உண்டு.
அறிவியல்தான் எல்லா நன்மைக்கும் காரணம்; அறிவியல்தான் இந்த உலகின் சகல தீமைகளுக்கும் பொறுப்பு என்று பொது மக்களிடம் அறிவியல் பற்றி இருக்கும் தவறான எண்ணங்களைக் களைவதற்காகவே தான் அறிவியல் குறித்து எழுத வந்ததாகச் சொல்கிறார் சுபஸ்ரீ.
“பூமியில் உள்ள பத்து லட்சம் உயிரினங் களில் மனித உயிரியும் ஒன்று. அதனால் இந்த பூமி எல்லா உயிரினங்களுக்கும் உரிமையானது என்றும் அறிவியல் சொல்கிறது. ஆனால் மனிதர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி உயிரினங்களின் பிரமிடில் மேல் நிலையையும் அதிகாரத்தையும் தெரிந்தோ தெரியாமலோ எட்டிவிட்டார்கள்.
மனிதர்கள் அனுபவிக்கும் அந்தஸ்துடனேயே பொறுப்பும் சேர்ந்துவிடுகிறது. இந்நிலையில் ஜாக்கிரதையுடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாவிட்டால் பூமியையும் நம்மையும் சேர்த்து அழித்துவிடக் கூடிய சூழ்நிலை உள்ளது. அறிவியல் பற்றி எளிய மனிதர்களும் தெரிந்துகொள்ளும்போதுதான் வளர்ச்சியையும் முரண்பாடுகளையும் புரிந்துகொள்ள முடியும். அதைத்தான் எனது கட்டுரைகள் மூலம் எடுத்துச் சொல்ல முயன்று வருகிறேன்’ என்கிறார்.
அறிவியலை எளிய மக்களுக்கு எடுத்துச் செல்வதோடு பள்ளிக் கல்வியி லிருந்து உயர்மட்ட ஆய்வுப் படிப்புவரை அறிவியலை முதலீடு செய்வதும் நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதும் அவசியம் என்கிறார். ஒரு லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட இந்த விருது தனக்கு ஒரே சமயத்தில் பெருமிதத்தையும் சுயபரிசீலனை செய்வதற்கான அவசியத்தையும் உணர்த்துவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
“இந்த ஊக்குவிப்பின் மூலமாக எனது எழுத்துகளுக்குக் கூடுதலான வாசிப்பு கிடைக்குமானால் மிகுந்த மகிழ்ச்சி” என்கிறார். சுபஸ்ரீ ஒரு கவிஞரும்கூட. பிரபஞ்சம் குறித்துத் தோன்றும் விந்தையுணர்வு தரும் அழகிய அமைதியிலிருந்து இவரது கவிதைக்கான சொற்கள் இருப்ப தாகச் சொல்கிறார். எழுத்தின் மீதான இவரது நேசம் விரிவானது. குழந்தைகள் பதிப்பகமான தூலிகாவுக்காக, ‘ஒரு பறவையை நேசித்த மலை’என்ற புத்தகத்தையும் மொழி பெயர்த்திருக்கிறார் சுபஸ்ரீ.