

ஆண் பெண் சமத்துவம், பெண் முன்னேற்றம், பெண் ஆற்றல் என்றெல்லாம் உரக்கப் பேசுகிறோம். ஆனால் வேலை செய்யும் இடங்களில் பெண்கள் இவற்றையெல்லாம் பெற்றிருக்கிறார்களா?
வேலைக்குச் செல்லும் பெண்கள் சமையல், வீட்டுப் பராமரிப்பு, கணவனுக்கு உதவுதல், குடும்ப ஆரோக்கியம் சுய ஆரோக்கியம் போன்றவற்றைப் பேணுதல், போக்குவரத்துச் சவால்கள், அலுவலக வேலைகளில் சவால்கள், வேலைச் சுமைகள், சுய விருப்பு வெறுப்புகள், சமூக எதிர்பார்ப்புகள் போன்ற பன்முனைத் தாக்குதல்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
தொடரும் ஊதிய வேறுபாடு
ஆண், குடும்பப் பொருளாதாரத்துக்காகச் சம்பாதிப்பவன். எனவே, அவன் சம்பாத்தியம் குடும்பத்துக்கு அடிப்படை வருமானம். பெண் சம்பாதிப்பது கூடுதல் வருமானமே என்ற எண்ணம்தான் சமூகத்தில் இன்றும் நிலவுகிறது. அதனால், பெண் சம்பாத்தியத்துக்கு உரிய மதிப்பு சமூகத்தில் இல்லை. பல குடும்பங்களில் பெண் சம்பாத்தியம் குடும்பத்துக்கு அடிப்படை வருமானமாக அமைந்துவிட்டாலும் சமூகம் அதை முன்னிறுத்திப் பேசுவதில்லை.
வேலைத் தளத்தைப் பொறுத்தவரை, பெண்கள் ஆண்களைவிடத் திறமை குறைந்தவர்களாகவே மதிப்பிடப்படுகின்றனர். இதன் காரணமாக, அமைப்பு சாராப் பணிகளில் ஆண், பெண் கூலியில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. ஒரே பணி, ஒரே வேலை நேரம் என்றாலும் பெண் பணியாளர்களின் கூலி ஆண் பணியாளர்களைவிடக் குறைவாகவே நிர்ணயிக்கப்படுகிறது. அமைப்பு சார்ந்த பணியிடங்களில் சம கூலி, சம வேலை நேரம் என்ற நிலைப்பாடு இருந்தாலும், பெண்களின் மகப்பேறு, குழந்தை பராமரிப்பு போன்றவற்றுக்காக எடுக்கும் விடுப்பின் காரணமாகப் பணி மூப்பில் அவர்கள் சக ஆண் பணியாளர்களைவிடப் பின்தங்கி விடுகின்றனர். வேலைக்காக நடத்தப்படும் நேர்முகத் தேர்வுகளில் இளம் பெண்கள் சந்திக்கும் சில வினாக்கள் திருமணம், குழந்தைப் பேறு குறித்தனவாக இருக்கின்றன. பல பெண்களுக்கு இதன் காரணமாகவே பணி நிராகரிப்படுவது இயல்பானதாக இருக்கிறது.
பதவிஉயர்விலும் மகிழ்வில்லை
பெண் உயரதிகாரிகளுக்கு, அவர்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் ஆண் ஊழியர்கள் உரிய மதிப்பு கொடுப்பதில்லை. அந்த அதிகாரி எப்பொழுது தன் வேலையில் தவறு செய்வார் என்று காத்திருந்து, குறை சொல்பவர்களே அதிகம். இதனால், எப்பொழுதும் இரட்டிப்பு விழிப்புடன் செயலாற்ற வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு ஏற்படுகிறது. நிறையப் பெண்கள் கல்வித்தரம், திறமை இருந்தும் உயரதிகாரி பதவியை விரும்புவதில்லை. வேலைத் தளத்தில் உள்ள இந்தச் சிக்கல் காரணமாகப் பெரும்பான்மையான பெண்கள், அலுவலகத் தேர்வுகளை எழுதி, தங்களை உயர்த்திக்கொள்ளவும் விரும்புவதில்லை.
ஆண்களால் தடைபடும் பயணம்
வேலை பார்க்கும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் ஏராளம். என் தோழி ஒருவர் தான் கனவு கண்ட பெரும் நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். இரண்டே மாதங்களில் தன்னோடு வேலை பார்க்கும் சக ஆண், நேரடியாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் தொடுத்த பாலியல் சீண்டல்களைப் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் வழிகாட்டலுடன் அலுவலக மேலதிகாரியிடம் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டு, தோழி வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அவனோடு அவன் நண்பர்களும் இணைந்து கொடுத்த தொல்லையில் ஆறே மாதங்களில் வேலை பார்க்கும் ஆர்வத்தை இழந்தார் என் தோழி. வெளியே வர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்.
அதில் ஒரு சிக்கல். ஒப்பந்தப்படி, அவரே வேலையை விட்டுச் சென்றால் ஒரு பெருந்தொகையை நிறுவனத்துக்கு இழப்பீடாகக் கட்ட வேண்டும். பணம் கட்டும் சூழலில் அவர் குடும்பம் இல்லாததால் முறைப்படி பணியை விடாமல், நீண்ட விடுமுறை எடுத்தார். இதன் காரணமாக அவருக்கும் நிறுவனத்துக்குமான போராட்டம் தொடங்கியது. அவர் சட்டச் சிக்கலைச் சந்திக்க நேரிட்டது. அது அவரின் அடுத்த வேலை வாய்ப்பை முடக்கியது. பெரும் மனஉளைச்சலை எற்படுத்தியது. பொருளாதார அடிப்படையிலும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் எதிர்காலம் அல்லவா இந்தப் போராட்டத்தில் பணயம் ஆக்கப்பட்டது! இதில் சம்பந்தபட்ட ஆணுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதுதான் ஆணாதிக்க உலக யதார்த்தம்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com