எங்க ஊரு வாசம்: எட்டிப் பார்த்த வெண்ணிலா!

எங்க ஊரு வாசம்: எட்டிப் பார்த்த வெண்ணிலா!
Updated on
2 min read

கருப்பு பூத்துக் கிடந்த வானவெளியில் நட்சத்திரங்களோடு ராஜ பவனி வந்துகொண்டிருந்த பவுர்ணமியை ஒட்டிய நிலா, வானமெங்கும் பால் சாய்த்த குடமாக வெளிச்சத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது.

அண்டா, அண்டாவாகக் காய்ச்சி நீண்ட ஓலைப் பாயில் பெரிய குவியலாய்க் குவித்திருந்த சோறு, அந்த நிலவின் ஒளியில் ஊரே சிரிப்பதுபோல் வெண்மை பூத்துக்கிடந்தது. பருப்பிலும், வெஞ்சனத்திலும், ரசத்திலும் கடுகு, கறிவேப்பிலையோடு தாளித்து ஊற்றிய வாசம் சிறுவர்களிலிருந்து பெரியவர்கள்வரை எப்போது பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுவோம் என்ற ஆவலை ஏற்படுத்தியது. என்னதான் கல்யாண சந்தோஷத்தில் அவர்கள் அங்கும் இங்கும் அலைந்தாலும் அவர்களின் எண்ணமெல்லாம் சாப்பாட்டின் மீதே இருந்தது.

சிறிய மணல் மேட்டுடன் உயர்ந்திருந்த மண மேடையின் பின்னணியில் மாவிலையோடு நீள, நீளமாய்ப் பூச்சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. மணவறையின் முன்னால் இரண்டு குத்து விளக்குகள் எண்ணெய் வாசத்துடன் ஐந்து திரிமுகம் கொண்டு காற்றுக்குப் படபடத்தவாறு எரிந்துகொண்டிருந்தன. அங்கே சிறிய, பெரிய அரிக்கேன் லைட்டுக்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் எரிந்தவாறு அடக்கமாய் வெளிச்சத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தன.

தாய்மாமனின் நடுக்கம்

அருணாச்சலம் எப்போதோ மணவறையில் வந்து உட்கார்ந்துவிட்டான். இனி மணமகள் வர வேண்டும். அவளைத் தாய் மாமனான கோதண்டம்தான் தூக்கிவந்து மணவறையில் உட்கார வைக்க வேண்டும். கோதண்டம் புது வேட்டி, துண்டோடு வெளியே நீளமாகப் போட்டிருந்த மரப்பலகையில் உள்ளுக்குள் நடுங்கியவாறு உட்கார்ந்திருந்தார். அவரோடு நான்கு பென்கள் உடன் பிறந்தவர்களாக இருக்க, ஒவ்வொரு தங்கச்சிக்கும் இரண்டு, மூன்று என்று பெண்களாகப் பிறந்து அவர்களையெல்லாம் தாய் மாமன் என்ற உறவில் மணமேடையில் தூக்கிக் கொண்டுபோய் உட்கார வைத்ததில் அவர் ரொம்பவும் நொந்துதான் போயிருந்தார். அதுவுமில்லாமல் அவருக்கு எப்போது வயதும் ஆகிவிட்டிருந்தது.

விடியற்காலையிலிருந்தே பூங்கோதையைப் பார்த்து, பார்த்து இப்படி ஓங்கு தாங்காக இருக்கும் இவளை எப்படித்தேன் மணவறையில் தூக்கிக்கொண்டு வைக்கப் போகிறோம் என்று நினைத்துப், நினைத்து பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். இப்போது அந்த நேரம் வந்துவிட அவரையறியாமல் அவர் தேகம் பதறியது.

துள்ளி விழுந்த மணமகள்

பூங்கோதை சமணம்கூட்டி உட்கார்ந்திருந்தாள். அவளுடைய வலதுகை, இடது கண்ணைப் பொத்தியிருக்க, இடது கை வலது கண்ணைப் பொத்தியிருந்தது. அப்படித்தான் உட்கார வேண்டும். அதுதான் சம்பிரதாயம். மாமனானவர், அப்படியே அவளை அலக்காகத் தூக்கிக்கொண்டு வந்து மணவறையில் உட்கார வைக்க வேண்டும்.

“பொண்ணு எப்பவோ சமணம்கூட்டி உட்கார்ந்தாச்சு. மாமன எங்கத்தா காணோம்” எ ன்று ஒருத்தி கேட்க, “அண்ணே, அண்ணே” என்று அலையக்கா கூப்பிட்டாள். இரண்டு வாலிபர்கள், “என்ன பெரியய்யா, இப்படி உட்கார்ந்திருக்கீரு. போய் மருமகளைத் தூக்கிட்டு வந்து மணாறயில உட்காரவையும்” என்று பிடித்துத் தள்ளாத குறையாகக் கோதண்டத்தைத் தள்ளிவிட்டார்கள்.

அவர் எழுந்து நடுங்கியவாறே வீட்டுக்குள் போனார். எப்படியோ மனதுக்குள் தெம்பை வரவழைத்துக் கொண்டு தம் பிடித்துப் பூங்கோதையைத் தூக்கினார். தூக்கிய உடனேயே, “பாவி மவ. செம கனமாவில்லா கனக்கா. இவளை என்னன்னுதேன் மணவாறையில தூக்கிக் கொண்டு உட்கார வைக்கப் போறேன்” என்று எண்ணியவாறே இரண்டெட்டு எடுத்துவைத்து வாசற்படிக்கு வந்தார். குறுகி, ஒடுங்கி இருந்த வாசற்படியைத் தாண்டுவதற்குக் காலைத் தூக்கியவர், சட்டென்று தடுமாறி விழ, பூங்கோதை அவர் கையிலிருந்தவாறே துள்ளி மணவறையின் அருகில் போய் விழுந்தாள். அவளுக்கு இடுப்பில் சரியான அடி பின்னியெடுத்தது. இப்போது எப்படி வலியால் முனங்குவது என்று வம்படியாக முகத்தில் சந்தோசத்தைக் காண்பித்துக்கொண்டிருந்தாள்.

மணவறையின் அருகில் விழுந்த பூங்கோதையை நான்கு பெண்கள் தூக்கி, அருணாச்சலத்தின் அருகில் உட்கார வைக்க, ஆசாரி வந்து இருவர் கைகளிலும் காப்பு கட்டினார். மணமக்களின் தந்தைகளை வரவழைத்து அவர்களின் பக்கமாக உட்கார வைத்தார். தாலியைத் தாம்பாளத்தில் வைத்துப் பெரியவர்களிடமும், ஊர் அம்மனிடமும் கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கி வந்தார்கள். பிறகு ஊர்ப் பெண்கள் எல்லாம் சேர்ந்து முழங்கிக் குலவையிட, பெரியவர்கள் கைதட்ட, சிறுவர்கள் பூவசர இலையில் செய்த குழலைப் பீ.. பீ.. என்று ஊத அருணாச்சலம், பூங்கோதையின் கழுத்தில் தாலி கட்டி முடித்தான். இவர்களின் கல்யாணத்தைப் பார்ப்பதற்காக ஆசைப்பட்டு வானத்து வெண்ணிலவு அங்கேயே நின்றது.

மணவறையின் அருகில் விழுந்த பூங்கோதையை நான்கு பெண்கள் தூக்கி, அருணாச்சலத்தின் அருகில் உட்கார வைக்க, ஆசாரி வந்து இருவர் கைகளிலும் காப்பு கட்டினார். மணமக்களின் தந்தைகளை வரவழைத்து அவர்களின் பக்கமாக உட்கார வைத்தார். தாலியைத் தாம்பாளத்தில் வைத்துப் பெரியவர்களிடமும், ஊர் அம்மனிடமும் கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கி வந்தார்கள். பிறகு ஊர்ப் பெண்கள் எல்லாம் சேர்ந்து முழங்கிக் குலவையிட, பெரியவர்கள் கைதட்ட, சிறுவர்கள் பூவசர இலையில் செய்த குழலைப் பீ.. பீ.. என்று ஊத அருணாச்சலம், பூங்கோதையின் கழுத்தில் தாலி கட்டி முடித்தான். இவர்களின் கல்யாணத்தைப் பார்ப்பதற்காக ஆசைப்பட்டு வானத்து வெண்ணிலவு அங்கேயே நின்றது.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in