வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: விளம்பரங்களும் வாடிக்கையாளர்களும்

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: விளம்பரங்களும் வாடிக்கையாளர்களும்
Updated on
2 min read

உங்கள் ஆன்லைன் அலுவலகத்தில் உள்ள தயாரிப்புகளுக்கான பிளாக், சவுண்ட் கிளவுட், யூடியூப் விளம்பரங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது எப்படி? வாடிக்கை யாளர்களை அதிகரிப்பது எப்படி?

விளம்பரத்துக்கே விளம்பரம்

விளம்பரமாக இருந்தாலும் அந்த விளம்பரமும் அதிக அளவில் மக்களைச் சென்றடைந்தால் மட்டுமே வெற்றிபெறும். உங்கள் ஆன்லைன் அலுவகத்தில் நீங்கள் காட்சிப்படுத்துகிற படைப்புகளுக்கான விளம்பரத்தை வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கும் உங்களுக்கான நட்பு (வாடிக்கையாளர்) வட்டத்தை உருவாக்கிக்கொள்வதற்கும் www.facebook.com உதவுகிறது.

சுருக்கமாகத் தகவல்களைப் பகிர www.twitter.com உதவுகிறது. டிவிட்டரில் பகிர்வதை உடனுக்குடன் ஃபேஸ்புக்கில் பகிரவும் முடியும். வியாபாரம் செய்பவர்கள், தொழிலதிபர்கள், திரைப்படத் துறையினர், இசைத் துறையினர், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள் என்று பல துறையினரும் ஃபேஸ்புக், டிவிட்டரைத் தங்கள் தொழிலை விளம்பரப்படுத்தும் நோக்கில் பயன்படுத்துகிறார்கள்.

பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களும் ஃபேஸ்புக், டிவிட்டரைப் பயன்படுத்தி செய்திகளைப் பரிமாறிக்கொள்வதால் மின்னணு ஊடகங்கள் வாயிலாகச் செய்திகளை அறிந்துகொள்கிறார்கள். தொலைக்காட்சிகளும் தங்கள் தயாரிப்புகளை யூடியூப் சேனல்களில் கொண்டுவந்துவிட்டதால், அவையும் ஃபேஸ்புக், டிவிட்டரில் பகிரப்படுகின்றன.

நட்புகளை வாடிக்கையாளர்களாக்கலாம்

ஃபேஸ்புக்கில் 5000 நண்பர்களுக்கும் குறையாமல் நட்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நீங்களே நட்பு அழைப்பு விடுத்து நண்பர்களாக்கிக்கொள்ளலாம். அதுபோல உங்களுக்கு வருகிற நட்பு அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாம். நாளடைவில் உங்கள் நட்பு வட்டம் பெருகும். நண்பர்களை அப்படியே உங்கள் தொழிலின் வாடிக்கையாளர்களாக்கிக் கொள்ளும் வசதியும் ஃபேஸ்புக்கில் உள்ளது.

ஃபேஸ்புக்கில் தனிநபர் அக்கவுண்ட், பிசினஸ் அக்கவுண்ட் என்று இருவகை உள்ளன. தனிநபர் அக்கவுண்ட்டில் நண்பர்களை இணைக்கலாம். உங்கள் தனிநபர் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி, பிசினஸ் அக்கவுண்ட்டை உருவாக்கிக்கொள்ள முடியும். தனிநபர் அக்கவுண்ட்டைப் போலவே பிசினஸ் அக்கவுண்ட்டும் இலவசமே.

யூடியூப் வீடியோக்கள், சவுண்ட் கிளவுட் ஆடியோக்கள், பிளாக் தகவல்கள் போன்றவற்றையும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து இலவச விளம்பரமாக்கிக் கொள்ளலாம். அவை வாடிக்கையாளர்களை நேரடியாகச் சென்றடையும்.

தனிநபர் அக்கவுண்ட், பிசினஸ் அக்கவுண்ட்

https://www.facebook.com/ நுழைந்து, Create New Account க்ளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, உங்களுக்கான யூசர் நேம், பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஃபேஸ்புக் திரையின் வலது மூலையில் உள்ள Create Page க்ளிக் செய்து, பிசினஸ் பக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

உங்கள் பிசினஸ் குறித்த தகவல்களை உங்கள் பிசினஸ் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் அப்டேட் செய்து, அதை ஃபேஸ்புக் பர்சனல் அக்கவுன்ட் மூலம் பிரபலப்படுத்திக்கொள்ளலாம்.

தனிநபர் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் சுமார் 5000 நண்பர்களை இணைத்துக்கொள்ளலாம். நீங்கள் பதிவிடும் தகவல்களின் சுவாரசியத்துக்கு ஏற்ப உங்களை எண்ணற்றவர்கள் பின்தொடரவும் (Followers) முடியும்.

அதுபோல உங்கள் பிசினஸ் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை சப்ஸ்க்ரைப் (Subscribe) செய்ய உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுங்கள். அவர்கள் உங்கள் பிசினஸ் பக்கத்தை லைக் செய்வதன் மூலம் உங்கள் பக்கம் பிரபலமாகும்.

இவை தவிர உங்கள் பிசினஸ் பக்கத்தில் பதிவிடும் தயாரிப்புகளைக் கட்டணம் செலுத்தியும் விளம்பரப்படுத்தலாம். மேலும் உங்கள் பிசினஸ் பக்கத்தையே கட்டணம் செலுத்தி விளம்பரப்படுத்தலாம். ஃபேஸ்புக்கே உங்கள் சார்பில் உங்கள் பக்கத்தை விளம்பரப்படுத்தி, நீங்கள் தேர்ந்தெடுக்கும் கட்டணத்துக்கு ஏற்பப் பார்வையாளர்களைப் பெற்றுத்தரும்.

தனிநபர் அக்கவுண்ட்டாக இருந்தாலும் சரி, பிசினஸ் அக்கவுண்ட்டாக இருந்தாலும் சரி, உங்கள் தயாரிப்புகள் குறித்த விளம்பரங்களைப் பதிவிடும்போது இடையிடையே அந்தத் தயாரிப்புகள் குறித்த சுவையான செய்திகள், சம்பவங்கள் போன்றவற்றைப் பதிவிட்டால் பார்வையாளர் களுக்குப் படிப்பதற்குச் சுவையாக இருக்கும். வெறும் விளம்பரமாக இருந்தால் ‘இது விளம்பரம்தானே…’ என்று பார்க்காமலேயே நகர்ந்து விடுவார்கள். பார்வையாளர்களை உங்கள் பதிவைப் பார்க்க வைப்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in