

டிராஃபிக் ஃபேஷன்
சின்னத்திரை தொகுப்பாளினி காயத்ரி கண்ணன் தன் குழுவினருடன் சேர்ந்து சாலைப் பாதுகாப்பை மையமாக வைத்து ‘கோ டிராஃபிக் ஃபேஷன் ஷோ’ என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.
“இந்த ஃபேஷன் ஷோவில் காஸ்ட்யூம் டிசைனிங் எங்களோட பொறுப்பு. நானும் நண்பர் சுகுமாரும் சேர்ந்து ‘காசு டிசைனிங்’ என்ற பெயரில் அதை ஒருங்கிணைக்கிறோம். மே 21-ம் தேதி சென்னையில் நடக்கும் இந்த ஃபேஷன் ஷோ போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருக்கும். இதற்காக ஃபேஷன் ஷோ நடக்கும் அரங்கத்தையே சாலையைப்போல உருவாக்க இருக்கிறோம். தலைக்கவசம், டிராஃபிக் யூனிபார்ம், போக்குவரத்து சமிக்ஞைகள் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து ஆடைகளை வடிவமைத்திருக்கிறோம். இதில் கிடைக்கும் பணத்தை ஈவா தொண்டு நிறுவனம் வழியே மக்களுக்குக் கொடுக்கப் போறோம்,’’ என்கிறார் காயத்ரி கண்ணன்.
பாலுமகேந்திராவில் தொடங்கி பாலா வரை
விஜய் டிவி சீரியல், பெப்பர்ஸ் டிவி நிகழ்ச்சித் தொகுப்பு என்று வட்டமடித்து வரும் ரம்யா, பாலா இயக்கத்தில் உருவாகிவரும் ‘நாச்சியார்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
“சின்னத்திரையோ சினிமாவோ சின்ன வேடமாக இருந்தாலும், அதில் நம்ம நடிப்பு தனியாத் தெரியணும். அதுல கொஞ்சம் சமூக அக்கறையும் இருக்கணும். அப்படித்தான் சரவணன் மீனாட்சி தொடர் தொடங்கி பாலுமகேந்திராவின் ‘தலைமுறைகள்’ வரைக்கும் எனக்கு அமைஞ்சது. இப்போ நண்பர் மூலம் இயக்குநர் பாலா படத்திலும் நடிக்கப் போறேன். எடுத்து வைக்கும் முயற்சிகள் நல்லதா இருக்கணும்னு விரும்பும்போது, அந்த வாய்ப்பு தானாகத் தேடி வருவதில் இருக்கும் சந்தோஷமே தனிதான். அப்படித்தான் ‘நாச்சியார்’ படத்தையும் பார்க்கிறேன்!’’ என்கிறார் ரம்யா.