Last Updated : 17 Jul, 2016 06:15 PM

 

Published : 17 Jul 2016 06:15 PM
Last Updated : 17 Jul 2016 06:15 PM

எங்க ஊரு வாசம்: மூணு மாச கல்யாண விருந்து!

கல்யாணம் பேசி முடிவானதும், கல்யாணத்துக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அதனால் மறுநாளும் இதேபோல் ஊர்க்கூட்டம் போடுவார்கள். அப்போது கல்யாண வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கான நெல் மூட்டைகளைக் கொண்டுவந்து ஊர் மந்தையில் போடுவார்கள்.

ஊரில் உள்ள பெண்கள் ஆளுக்கு ஒரு முப்பது படி பிடிக்கும் கடாப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய் நிற்பார்கள்.

மூன்று நாள் கல்யாணம்

நாட்டாமையின் உத்தரவுபடி ஒவ்வொரு பெட்டியிலும் ஏழு மரக்கால் நெல்லை அளந்து போடுவார்கள். ஊருக்குள் தள்ளாத கிழவிகள் தவிர்த்து மற்ற எல்லோரும் இந்த நெல்லை வாங்கிக்கொண்டு போய் அவித்து, காயப்போட்டு, புழுங்கலாக்கி அள்ளிக்கொண்டு மீண்டும் மந்தைக்குக் கொண்டுவர வேண்டும்.

அந்தக் காலங்களில் மூன்று நாள் கல்யாணம் நடந்தது. முதல் நாள் பெண் அழைப்பு, மறுநாள் கல்யாணம் முடிப்பது, மூன்றாவது நாள் ஒரு சேலை உடுத்திக் குளிப்பது, அழகர் பெருமாள் ஆட்டுவது என்று மூன்று நாள் கல்யாணம். அதோடு மாப்பிள்ளையைச் சேர்ந்த ‘தாயரிக்காரர்கள்’ பத்து இருபது பேர்வரை இருப்பார்கள். இவர்கள் ‘ஏழு முழுக்கு’ அதாவது கல்யாணமான நாளிலிருந்து ஏழு நாள் வரை மூன்று வேளையும் மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளையுடன்தான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். இதனால் கல்யாண வீட்டுக்காரர்களுக்கு அரிசி, பருப்பு, மசால் சாமான்கள் என்று அதிக செலவாகும்.

கல்யாணம் முடிந்த பின் மூன்று மாதம் வரையிலும் மாப்பிள்ளை பெண் வீட்டில் தங்கி, விருந்து சாப்பாடு சாப்பிட வேண்டும். தினமும் நெல்லுச் சோறுதான் போட வேண்டும். ஒரு அவசர ஆத்திரத்துக்கு வேறு ஏதாவது வரகரிசி, குதிரைவாலி அரிசிச் சோற்றை வைத்துவிட்டால் அந்த விஷயம் மாப்பிள்ளை மூலமாகவோ, வேறு யார் மூலமாகவோ ஊருக்குள் தெரிந்துவிட்டால் அவ்வளவுதான். காலத்துக்கும் கேவலமாகிவிடும்.

மூன்று மாத பிரிவு

அதோடு கல்யாணமான மூன்று மாதத்துக்கு கணவனும், மனைவியும் பிரிந்திருக்க வேண்டும். மூன்று மாதம் வரையிலும் மாமியாரோ அல்லது அத்தை, பாட்டி என்று வேறு யாராவது மாப்பிள்ளைக்குச் சோறு வைத்துக்கொள்வார்கள். அவர் மூன்று வேளையும் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, காடுகளுக்கு வேலைக்குப் போய்விடுவார்.

அதேபோலத்தான் அவர் மனைவியும். ஒரே வீட்டில் இரண்டு பேரும் இருந்தால்கூட ஒருவருக்கொருவர் சந்திக்க மாட்டார்கள். சந்திக்கவும் முடியாது. அந்தக் காலத்தில் வீடுகள் எல்லாம் சின்னச் சின்ன வீடுகளாக இருந்தன. அதோடு கூட்டுக் குடும்பத்தால் சித்தப்பா, பெரியப்பா என்று குழந்தைகளும் குட்டிகளுமாக வீடு நிறைய எப்போதும் ஆட்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.

அதனால் புது மணப் பெண் மூன்று மாதத்துக்குப் புது மணப்பெண்ணாகவே இருப்பாள். அவள் எப்போதும் போல் காடுகளுக்கு வேலைக்குப் போய்விட்டு வருவாள். வந்ததும் வீட்டில் உள்ள வேலைகளைப் பார்த்துவிட்டு தன் சேத்திக்காரர்களுடன் படுக்கப் போய்விடுவாள். அப்போதெல்லாம் எல்லோருக்கும் படுக்கை என்பது தெருக்களிலும், மந்தைகளிலும்தான். வீட்டுக்குள் யாரும் படுப்பதில்லை.

ஊர் கூடி நெல் குத்துதல்

இப்படி ஏழு நாளைக்கு தாயாரிச் சோறு, மூன்று மாதம் மாப்பிள்ளை விருந்து என்று வைப்பதோடு, மறு வீட்டுக்காக நிறைய சோறு ஆக்கி விருந்து வைக்க வேண்டும். இதனால் கல்யாண வீட்டுக்காரர்களுக்கு இரண்டு மூட்டை, மூன்று மூட்டை அரிசி செலவாகும். அதனால்தான் நெல்லை இப்படி எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து அவித்துக்கொண்டு வரச் சொல்வார்கள்.

கொஞ்சமாய் வளர்பிறை நிலவு வளர்ந்து வெளிச்சத்தைத் தரையில் சிந்திப் பரப்பும்போது அவித்த நெல்லை மந்தையிலிட்டுக் குத்த ஆரம்பித்துவிடுவார்கள். குந்தாணி என்ற ஒரு உரல் அப்போது இருந்தது. அது உரலைவிடப் பெரியதாகவும் அகலமாகவும் இருக்கும். அதில் ஒரு மரக்கால் நெல்லுக்கு மேலே போட்டுக் குத்தலாம். அதை ஊர் இளவட்டங்கள் பெரட்டிக்கொண்டு வந்து மந்தையில் போட்டுவிடுவார்கள்.

ஏழு, எட்டுக் குமரிகள் சேர்ந்து மாற்று உலக்கை போட்டுக் குத்த, நடுவயதுக்காரர்கள் பத்துப் பேர் குத்திய நெல்லை சொளகு (முறம்) கொண்டு புடைத்துப் போடுவார்கள். பத்து, பன்னிரெண்டு வயது சிறுவர், சிறுமிகள் சிறு சிறு நார்ப்பெட்டிகளில் நெல்லை அள்ளி, குத்துபவர்களுக்கும் குத்திய நெல்லைப் புடைப்பவர்களுக்குமாக கொண்டு போய் கொடுப்பார்கள்.

ஊர்ப் பெரியவர்கள் வெற்றிலை, பாக்கு, புகையிலை, பொடி என்று போட்டுக்கொண்டு அரச மரத்து மேடையில் உட்கார்ந்திருப்பார்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

ஓவியம்: முத்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x