

தினம் பத்துப் பக்கம் வாசிப்பதற்கே யோசிக்கிறவர்களுக்கு மத்தியில் தனித்து கவனம் ஈர்க்கிறார் லோகாம்பாள். இவர் மாதம் ஒரு புத்தகம் எழுதுவது என்ற கொள்கையுடன் செயல்பட்டுவருகிறார். கடந்த 29 மாதங்களில் 23 புத்தகங்களை எழுதியிருக்கிறார்! ஆய்வு நூல்கள் மட்டுமின்றி, தனது அனுபவங்களை இலக்கியங்கள், வரலாற்று நிகழ்வுகள், சமகாலச் சம்பவங்களுடன் ஒருங்கிணைத்து எழுதுவதில் இவர் தனித்துவம் பெற்றிருக்கிறார்.
“தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தாலும் படித்தது, பேராசிரியராக வேலை செய்தது எல்லாம் கேரளாவில். விருப்ப ஓய்வுக்குப் பிறகு பாளையங்கோட்டைக்கு வந்துவிட்டோம். என் பணிக்காலத்தில் இரண்டு புத்தகங்களை மட்டுமே எழுதினேன்” என்று சொல்லும் லோகாம்பாள், தன் மகள்களின் திருமணத்துக்குப் பிறகு முழு நேர எழுத்தாளராக அவதாரம் எடுத்தார். 2014-ம் ஆண்டு, ‘ராமன் கதை’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். “இதுவரை 23 புத்தகங்கள் வந்துவிட்டன!” என்று லோகாம்பாள் சொல்லும்போது மலைப்பாக இருக்கிறது.
கண்டேன் கம்பனை, ராவணன் வேட்டம், கொங்கன் படை, திருவள்ளுவர் வரலாறு, உலகத்துக்குத் தமிழர் காட்டிய நெறிகள், திருக்குறள் மறைக்கப்பட்ட உண்மைகள், உலகாயனம், கம்பக்கூத்து, தாண்டவக்கோன், நம்பினால் நம்புங்கள், சிலப்பதிகார காப்பியம் என்று சீனப் பெருஞ்சுவர் போல இவரது புத்தகங்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது.
எழுத்தே உந்துசக்தி
குறுகிய காலத்தில் புத்தகங்களை எழுதி வெளியிட்டாலும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். ‘ராமன் கதை’ புத்தகத்துக்காக ஒன்பது ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார்.
அசுர வேகத்தில் புத்தகங்கள் எழுதி வெளியிட்டாலும் பெரும்பாலான மக்களை இந்தச் செய்தி சென்று சேரவில்லையே என்று கேட்டால், “ஓய்வூதியத்திலிருந்துதான் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுகிறேன். குறைந்த எண்ணிக்கையில் அச்சிட்டு, தமிழ்ச் சங்கங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், நூலகங்கள் போன்றவற்றுக்கு மட்டும் அனுப்பி வைத்துவிடுவேன். என் புத்தங்களை வெளியிட எந்தப் பதிப்பகத்தையும் நான் நாடுவதில்லை. ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். என்னுடைய கருத்துகள் சிலருக்குச் சென்று சேர்ந்தாலே போதும். எனக்கு விளம்பரமோ, வியாபாரமோ தேவையில்லை” என்று தெளிவாகப் பதிலளிக்கிறார். தான் வளர்த்த எலி, பூனை, நாய், மாடுகள் போன்றவற்றுக்கும் தனக்கும் உள்ள அனுபவங்களைத் தொகுத்து, ‘என்னை வளர்த்த செல்லங்கள்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். தற்போது, ‘ஏழே சொற்களால் ஒரே நாளில் முடித்த வழக்கு கண்ணகியின் வழக்கு’ என்ற புத்தகத்தை எழுதி, அச்சுக்கு அனுப்பத் தயாராகிவருகிறார்.
“கழகம் என்றால் சூதாடும் இடம் என்று பொருள். கவறும் கழகமும் என்ற 935-வது குறளில் இதைத் திருவள்ளுவர் தெரிவித்திருக்கிறார். தற்போது கழகம் என்ற சொல்லையே பல்கலைக்கழகம் என்று பலவற்றுக்குச் சூட்டியிருக்கிறோம். திருக்குறளை உலகப் பொதுமறை என்று உயர்த்திப்பிடித்துக்கொண்டு, அதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறோம்” என்று வருந்துகிறார்.
“பத்தாண்டுகளுக்கு மேலாக இதய நோய்க்குச் சிகிச்சை பெற்றுவரும் எனக்கு, புத்தகங்கள் எழுதுவது மிகப் பெரிய மருந்தாக இருக்கிறது. எழுத ஆரம்பிக்கும் முன் வலது கை விரல்கள் மரத்துப்போயிருந்தன. எழுதத் தொடங்கியவுடன் விரல்கள் இயல்புக்குத் திரும்பிவிட்டன. புத்தகம் எழுதுவதுதான் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது” என்று சொல்லும் லோகாம்பாள், அடுத்த புத்தகத்துக்கான சிந்தனையில் மூழ்கிவிட்டார்.
படங்கள்:மு.லெட்சுமிஅருண்