

மகள், மருமகன், மகன், மருமகள், பேரக் குழந்தைகளோடு ஊட்டிக்குச் சென்றோம். போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக கோத்தகிரி வழியைத் தேர்ந்தெடுத்தோம். இரவு விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் அவலாஞ்சி, கீழ்பவானியைப் பார்க்க முடிவு செய்தோம்.
காலை நல்ல குளிரில் மழையும் சேர்ந்துகொண்டது. நாங்கள் சென்ற கார் ஓரிடத்தில் நின்றது. அடுத்து வருகிற பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பவை என்பதால் பேருந்திலோ, ஜீப்பிலோதான் பயணம் செய்ய வேண்டும். ஒருவருக்கு 150 ரூபாய் கொடுத்து ஜீப்பில் ஏறிக்கொண்டோம்.
சாலையின் இரு பக்கங்களிலும் அடர்த்தியான மரங்கள். மனிதர் நடமாட்டம் இல்லை. மாலையில்தான் விலங்குகள் வரும் என்றும் ஆறு மணிக்கு மேல் இங்கு வர அனுமதி இல்லை என்றும் ஓட்டுநர் சொன்னார். ஓரிரு கருங்குரங்குகளையும் காட்டுக் கோழிகளையும் பார்த்தோம். பவானி அம்மன் கோயிலில் வண்டி நின்றது. அருகில் இருந்த நீரோடையில் இறங்க வேண்டாம் என்ற எச்சரிக்கை இருந்தது.
பூட்டியிருந்தாலும் பவானி அம்மனின் தரிசனம் நன்றாகக் கிடைத்தது. மனம் குளிர வேண்டிக்கொண்டோம். எல்லோருக்கும் பயங்கரமான பசி. கையிலிருந்த பிஸ்கெட்கள் ஏற்கெனவே காலியாகியிருந்தன. நல்லவேளையாக மின் வாரிய விடுதியில் உணவு கிடைத்தது. பசியில் ருசியாக இருந்தது சாப்பாடு.
மறுநாள் தாவரவியல் பூங்காவுக்குச் சென்றோம். பூக்களைப் பார்த்துப் பிரமித்துப்போனோம். எல்லோரும் விதவிதமான பூக்களை கேமராக்களில் அடைத்துவிட்டனர். மேல் பவானிக்குச் செல்லும் பாதை நன்றாக இருந்தது. அணையில் நீர் அதிகம் இருந்தது. இதிலிருந்துதான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த அணை 1961-ல் ஆரம்பித்து 1967-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
பவானியின் எழிலைக் கண்டதும் ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘குறிஞ்சித் தேன்’ நாவல் நினைவுக்கு வந்தது. முற்றிலும் மலைவாழ் மனிதர்களைப் பற்றியது. ‘அவசரக்காரர்களுக்கு உகந்ததல்ல இந்த எழில் நகர். ஆழ்ந்த அமைதியின் இன்பத்தை அனுபவிக்க விழைப வருபவர்களுக்கு இந்த ஊர் மகிழ்ச்சியூட்டும்’ என்ற ராஜம் கிருஷ்ணனின் கூற்று முற்றிலும் உண்மையானது. அடர் வனத்துக்குள் கழிப்பறைகள் இல்லாததைத் தவிர இந்த ஊட்டிப் பயணம் நிறைவாக இருந்தது.
- லலிதா லட்சுமணன், சென்னை
இது எங்க சுற்றுலா! வாசகிகளே, நீங்களும் உங்கள் சுற்றுலா அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். பார்த்த இடங்கள், படித்த பாடங்கள், பட்ட அவஸ்தைகள், மகிழ்ந்த தருணங்கள், சுவைத்த உணவு வகை... இப்படி நினைத்துப் பார்க்க எத்தனையோ அனுபவங்கள் இருக்கும் அல்லவா? அவற்றை அங்கு நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களோடு எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மகிழ்வோம், அறிவோம்! மின்னஞ்சல்: penindru@thehindutamil.co.in |