

பச்சை காலிபிளவர் போலப் பெருநகர சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் புரோகோலியை ஒரு முறையாவது ருசித்திருக் கிறீர்களா? இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகம். ஒரு கப் நூடுல்சின் விலையைவிடக் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கிடைக்கும் ஆரோக்கியப் பலன்கள் அலாதியானவை. புற்றுநோய்க் கட்டிகளைப் பெருமளவு குறைப்பதற்குப் புரோகோலி உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய் தடுப்பு: புரோகோலியில் புற்றுநோயைத் தடுக்கும் சல்போரபேனை உற்பத்தி செய்யும் குளுகோரபேனின் உள்ளது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கொண்டது புரோகோலி. அத்துடன், கல்லீரலின் செயல் திறனையும் அதிகரிக்கிறது.
கொழுப்பைக் குறைக்கும்: புரோகோலி அதிக நார்ச்சத்து கொண்டது. கொழுப்பை விரட்டக்கூடியது. ஒவ்வாமை மற்றும் தோல் பாதிப்புகளைத் தடுக்கும். புரோகோலியில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவு உள்ளதால், தோல் எரிச்சலைத் தடுக்கும்.
ஆக்சிஜனேற்றத் தடுப்பான்: மற்ற எல்லாக் காய்கறிகளையும்விட அதிகளவு வைட்டமின் சி சத்துகளைக் கொண்டது புரோகோலி. அத்துடன் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டுகளான கரோட்டினாய்டு லூட்டின், ஸியாக்சாந்தேன் மற்றும் பீட்டா கரோட்டின் பொருட்கள் இதில் அடங்கியுள்ளன.
எலும்புக்குச் சத்து
கால்சியம், வைட்டமின் கே அதிகம் கொண்ட உணவுப் பொருளாகப் புரோகோலி உள்ளது. இந்த இரண்டும் எலும்பு நலத்துக்கு அவசியமானவை. எலும்புத் தேய்வைத் தடுக்க அடிக்கடி புரோகோலியைச் சாப்பிடுவது நல்லது.
இதயநலம்
புரோகோலியில் இருக்கும் சல்ப்ராபேன் ரத்தத் தமனிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தடுக்கும். அத்துடன் ரத்தச் சர்க்கரைப் பிரச்சினைகளும் வராமல் பாதுகாக்கும்.
நச்சுநீக்கம்
குளூக்கோபேனின், குளூக்கோநாஸ்டுரின் மற்றும் குளுக்கோப்ராசிசின் ஆகிய பொருட்கள் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதற்கு உதவுபவை. இவை மூன்றும் சரிசம அளவில் புரோகோலியில் கலந்துள்ளன. அத்துடன் மரபணு வரை சென்று நச்சு நீக்கும் திறனையும் கட்டுப்படுத்தும் ஐசோ தியோசயனைட்சையும் புரோகோலி கொண்டிருக்கிறது.
செரிமானத்திற்கு உதவும்
நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைச் சரிசெய்யும். ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும்.