

ஆண் மேலாண்மை சமூகத்தினரால் கட்டமைக்கப்படும் பெண் பிம்பங்களுக்கும் அசலான பெண் பிம்பங்களுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் வாழும் பெண்ணை இகழ்ச்சியாகக் கட்டமைத்துக் காட்டுவதில் ஆண் சமூகத்துக்கு அலாதியான இன்பம்.
மனைவி என்பவள் தன் இன்ப நுகர்வுக்காகவும் வாரிசுகளைப் பெற்றெடுத்து வளர்க்கவும் தனக்கான வேலைகளைச் செய்வதற்காகவும் மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறாள் என்று ஒவ்வோர் ஆணும் நினைக்கிறான். அவன் தன்னை முதன்மையானவனாக முன்னிறுத்தி, பெண்ணை இரண்டாம் நிலைக்குரியவளாகப் பார்க்கிறான். பல சமயங்களில் அவர்கள் அதற்கும் கீழானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பதை ஆண்கள் பரிமாறிக்கொள்ளும் நகைசுவைத் துணுக்குகளிலிருந்து அறியலாம்.
“சார், நீங்க ஆபீஸ்ல சிங்கம் போல இருக்கிறீங்க. வீட்ல எப்படி?”
“அங்கேயும் நான் சிங்கம்தான். ஆனா சிங்கத்து மேலே துர்கா தேவி உட்கார்ந்திருப்பா”
கணவனை அடிப்பதில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம் – செய்தி.
“அடேய், இதெல்லாம் ஏண்டா வெளியே சொல்லுறீங்க? இனி முதலிடம் வரவரைக்கும் அடிப்பாடா”
நகைச்சுவை என்ற பெயரில் இப்படிச் சமூக வலைதளங்களின் வழியாகப் பரப்பப்படுபவை ஏராளம். இவற்றின் மூலம் ஆண்கள் தங்கள் மனைவிக்கு அடிமைகளாக இருக்கிறோம் என்ற கருத்தையும் பெண்களெல்லாம் கொடுமைக்காரர்கள், தங்கள் கணவனை மதிக்காதவர்கள் என்ற பிம்பதையும் கட்டமைக்கின்றனர்.
நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் பெண்கள், குடும்பத்தைக் கட்டிக் காத்து, பாதுகாத்துவருகின்றனர். நாம் எத்தனையோ தலைவர்களின் வரலாற்றைப் படித்திருக்கிறோம். அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களும் அந்தப் போராட்டங்களில் அவர்கள் அனுபவித்த துன்பங்களும் இறுதியில் பெற்ற வெற்றிகளும்தான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளனவே தவிர, அந்தப் போராட்டங்களில் தோளோடு தோள் கொடுத்து, அவர்கள் இன்ப துன்பங்களில் பங்கெடுத்த துணைவிக்கு வரலாற்றில் இடம் இல்லை.
புரட்சியாளர் வ.வே.சு. ஐயரின் மனைவி பாக்கியலட்சுமி, இருபத்தைந்து வயதில் வீரமரணம் அடந்த வாஞ்சியின் மனைவி பொன்னம்மா இவர்களின் தியாகங்கள் மகத்தானவை. சுப்பிரமணிய சிவாவின் மனைவி மீனாட்சியம்மை, புரட்சியில் ஈடுபட்டுக் கணவன் பிரிந்து சென்ற பின், இளம் வயதிலேயே காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்ததை எந்த வரலாறு சொல்கிறது?
இப்படிப்பட்ட, யதார்த்தங்களுக்கு முற்றிலும் மாறாக, பெண்கள் ஆண்களை அடிமைப்படுத்தியும் துன்புறுத்தியும் வாழ்கின்றனர் என்பன போன்ற நகைசுவைத் துணுக்குகளைப் பதிவிடுவதன் மூலமாக ஆண்கள் தங்கள் இயலாமையை, குற்றவுணர்வை வெளிக்காட்டிக் கொண்டுள்ளனர். லஷ்மணனின் மனைவி ஊர்மிளை,
பரதனின் மனைவி மாண்டவி போன்றவர்களின் தியாகம் காலம் கடந்தாவது இன்று மக்களால் பேசப்படுகிறது. ஒவ்வோர் ஆணும் தம் மனைவியைப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் பற்றி அவர்கள் செயற்கையாகக் கட்டமைத்துள்ள பிம்பங்கள் உடைபடும்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com