

புல்லாங்குழலில் நுழைகின்றது காற்று. துளைகளை மூடித் திறக்கிற மாலாவின் லாகவத்தில் அது இசையாக வெளிப்படுகிறது. பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் துளிர்த்தவர் மாலா சந்திரசேகர்.
கர்நாடக இசை உலகில் சிக்கில் சகோதரிகள் என்று அழைக்கப்படுபவர்கள் குஞ்சுமணி - நீலா. இவர்களில் நீலாவின் மகள் மாலா. இருவரும் வழங்கிய வித்யா தானத்தால் செழித்து வளர்ந்தது மாலாவின் புல்லாங்குழல் பயணம். தன்னுடைய பதினைந்தாவது வயதில், புல்லாங்குழல் கச்சேரி செய்து முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்திய மாலா, அதன் பின் அனைத்திந்திய வானொலி நிலையம் இளைஞர்களுக்கு நடத்திய தேர்விலும் வெற்றிபெற்று, வானொலி நிலையத்தில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை அளித்தார்.
ஒரு முறை, தொலைக் காட்சியில் இளம் தென்றல் நிகழ்ச்சியில் வாசித்த இவரின் வேணு கானத்தை ரசித்த கிருஷ்ணகான சபாவின் நிறுவனர் யக்ஞராமன், வெகுஜன ரசிகர்கள் பார்க்கும் வகையில் தன்னுடைய சபா மேடையில் முதல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு மாலாவுக்கு வாய்ப்பளித்தார்.
வானொலி நிலையம் ஏற்பாடு செய்திருந்த, காற்றைப் பயன்படுத்தி வாசிக்கப்படும் வாத்தியங்களுக்கான போட்டி யில் புல்லாங்குழல் வாசித்து மாலா முதல் பரிசை, இசை மேதை எம்.எஸ்.ஸிடமிருந்து பெற்றார்.
லால்குடி விஜயலஷ்மி, மாலா, ஜெயந்தி ஆகியோர் இணைந்து முறையே வயலின்-வேணு-வீணை நிகழ்ச்சியை ஒரே மேடையில் வழங்கினர். இசைப் பயணத்தின் உச்சமாக, சிக்கில் சகோதரிகளுடன் இணைந்தும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.
இசையை ஆராதிக்கும் பிறந்த வீடு
இசையையே சுவாசிக்கும் புகுந்த வீட்டில் (ராதா விஸ்வ நாதனின் மருமகள்) திருமண பந்தம் ஏற்பட்டது, ஒரு கலைஞருக்கு எத்தகைய ஏற்றத்தைத் தரும் என்பதற்கு வாழும் உதாரணம் மாலா.
சண்முக சங்கீத சிரோமணி, வேணு கான சிரோமணி, நாதக் கனல், மியூஸிக் அகாடமியின் எம்.டி. ராமநாதன் விருது, இசைப் பேரொளி, யுவகலா பாரதி, கலைமாமணி, மியூஸிக் அகாடமியின் மாலி விருது போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார் மாலா.