

கேரளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை பதிவான 225 சைபர் குற்றங்களில் பெரும்பாலானவை பெண்களுக்கு எதிரானவை. ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் கேரள மாநிலத்தில் அதிகரித்துவருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எர்ணாகுளம், திருவனந்தபுரத்தில் அதிக குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பெண்களைப் பற்றி ஆபாசமாக ஃபேஸ்புக்கில் பதிவிடுவது, ஒளிப்படங்களை வெளியிடுவது தொடர்பான குற்றங்கள் 70 சதவீதம். கொச்சியைச் சேர்ந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, பெண்கள் மீதான இணைய ரீதியான தொந்தரவுகள் மிக சகஜமாக நடக்கும் மாநிலமாக கேரளம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பசுக்களுக்குத்தான் மரியாதையா?
இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும் நிலையில் மத்திய அரசு பசுக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதாக மாநிலங்களவை உறுப்பினர் ஜெயா பச்சன் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி மாநிலங்களவையில் பேசினார். சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஜெயா பச்சன், உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மாட்டிறைச்சிக் கூடங்களை மூடியதன் பின்னணியில் உள்ள அரசியலைக் குறித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர, பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் சந்தித்துக்கொள்வதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆண்ட்டி ரோமியோ படைகளையும் அவர் விமர்சித்தார்.
ராணுவத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
மணிப்பூரில் பெண்கள் மீது ராணுவம் நடத்திய பாலியல் வல்லுறவுகள், படுகொலைக் குற்றங்கள் தொடர்பாக மவுனம் காப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி கேள்வி எழுப்பியுள்ளது. 2003-ம் ஆண்டில் மைனர் பெண் ஒருவர், அசாம் ரைபிள் படை அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளானார். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கு தொடர்பாகவும் இன்னொரு பெண்ணை, வல்லுறவு செய்து கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் நீதிபதிகள் மதன்.பி.லோகூர் யு.யு.லலித் அடங்கிய அமர்வு, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கியிடம் கேள்வி எழுப்பினர்.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ராணுவத்தினர் தொடர்பான விவரங்களையும் ராணுவத்தினர் வேண்டுமென்றே மறைப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மணிப்பூர் மாநிலத்தில் அமல்படுத்தப்படுவதை வைத்து ராணுவம் செய்யும் குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பள்ளிக்குச் செல்லும் மூதாட்டிகள்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பங்கானே கிராமத்தில் மூதாட்டிகள் மணிச் சட்டகங்கள், சிலேட்டுகளுடன் தினமும் மதியம் பள்ளிக்குச் செல்கின்றனர். இந்த மாநிலத்தில் மூன்று ஆண்களுக்கு ஒரு பெண்தான் வாசிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களாக உள்ளனர். இந்த மூதாட்டிகளில் சிலருக்கு எழுத்துகளைத் துல்லியமாகப் பார்க்கும் திறன் குறைந்துவருகிறது. சிலருக்கு முதுமையின் காரணமாக நெஞ்சு வலியும் உள்ளது. கல்வியறிவை நோக்கி தினசரி பயணிக்கும் மூதாட்டிகளின் பயணத்தை ஒளிப்படக் கலைஞர் சாத்யகி கோஷ் படம் பிடித்துள்ளார்.
சம்பாரண் நூற்றாண்டில் பெண்கள்
பிஹாரில் உள்ள சம்பாரணில் மகாத்மா காந்தி நடத்திய போராட் டத்தின் நூற்றாண்டு நிகழ்வையொட்டி, மது இல்லாத இந்தியாவுக்கான பேரணி ஒன்றை பிஹார் மகளிர் படை (ராஷ்ட்ரிய மகிளா ப்ரிகேட்) நடத்தியது. சம்பாரணில் அவுரி விவசாயி களுக்கான நியாயம் கேட்டு மகாத்மா காந்தி நடத்திய போராட்டத்தில் கஸ்தூரிபாய் உள்ளிட்ட பெண்களும் கலந்து கொண்ட நிகழ்வு இந்தப் பின்னணியில் குறிப்பிடத் தக்கது. பிஹாரில் மது விலக்குச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு பிஹார் மகளிர் படை தொடர்ந்து பத்தாண்டுகள் நடத்திய போராட்டமும் காரணம்.