

படிக்கிற காலத்தில் பெண்களிடம் இருக்கும் திறமைகள், சாதிக்கும் ஆர்வம் எல்லாம் திருமணமானவுடன் முடங்கிவிடுகின்றன. வெகு சிலரே திருமணத்துக்குப் பிறகும் தங்களுடைய திறமைகளைப் பயன்படுத்தி, சாதனையாளர்களாக மாறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த செல்வி. சிறு வயதில் ஓவியம் தீட்டுவதில் இருந்த ஆர்வம் தற்போது இவரைச் சிறந்த ஓவியராக மாற்றியிருக்கிறது.
இவரது தஞ்சாவூர் பெயின்டிங், ஆயில் பெயின்டிங், வாட்டர் கலர் பெயின்டிங், மியூரல் பெயின்டிங், செராமிக் பெயின்டிங் போன்றவை உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. தஞ்சாவூர் ஓவியத்தில் முப்பரிமாணத்தில் புதுமையாக இவர் வரைந்த மீனாட்சியம்மன், கிருஷ்ணர், விநாயகர், லட்சுமி ஓவியங்கள்தான் கடல் கடந்த தமிழர்களின் பூஜை அறைகளைத் தற்போது அலங்கரிக்கின்றன.
மன்னர்கள் காலத்தில் சாதாரண தஞ்சாவூர் ஓவியங்களோடு பாக்ஸ் பெயின்டிங் எனப்படும் முப்பரிமாண ஓவியங்கள் பிரபலமாக இருந்தன. தற்போது அந்த வகை ஓவியங்கள் அதிகமாக இல்லை. அந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுத்துவருகிறார் செல்வி. தமிழகம், வட மாநிலங்கள், வெளி நாடுகள் என்று செல்வியின் படைப்புகள் எங்கும் பரவியுள்ளன.
அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா மற்றும் பல நாடுகளில் நடக்கும் சர்வதேச ஓவியக் காட்சிகளில் பங்கேற்று, தமிழகத்துக்கும் ஓவியத் துறைக்கும் கவுரவம் தேடித்தந்திருக்கிறார் செல்வி. அடுத்த தலைமுறையினருக்கு ஓவியங்களைக் கற்றுத்தரும் பணியையும் செய்துவருகிறார்.
“மருத்துவராக நினைத்து, கிடைக்காமல் வரலாறு படித்தேன். அப்பாவுடன் மருந்துக்கடையில் வேலைசெய்தபோது நிறைய நேரம் கிடைத்தது. பொழுதுபோக்காக ஓவியங்கள் வரைந்தேன். பலரும் பாராட்டியபோதுதான், என் திறமை எனக்கே தெரியவந்தது. இதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. அதற்கு முறையான பயிற்சி தேவைப்பட்டது. சிறந்த ஓவியர்களைத் தேடிச் சென்று பயிற்சிபெற்றேன். ஒவ்வொரு வருடமும் சிங்கப்பூரில் நடக்கும் ஆர்ட் எக்ஸ்போவில் பங்கேற்பேன்.
என் உழைப்புக்குக் கிடைத்த பலனாக டெல்லி, ஐதராபாத், மும்பை போன்ற நகரங்களில் இருந்து அதிக ஆர்டர்கள் கிடைக்கின்றன. 8 அடி முதல் 10 அடி உயரம்வரை ஓவியங்களை வரைகிறேன். 1000 ரூபாயிலிருந்து லட்சம் ரூபாய்வரை அவற்றை விற்பனை செய்கிறேன். மாதம் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய்வரை சம்பாதிக்கிறேன். என்னுடைய ஓவியங்களில் பெரும்பாலும் நமது கலாச்சாரத்தையே பிரதிபலிக்கிறேன். ஓவியம் எனக்குத் தன்னம்பிக்கையும் தனி அடையாளத்தையும் கொடுத்திருக்கிறது!” என்கிறார் செல்வி.