

நேரம், காலம் இல்லாமல் எப்போதும் இந்தக் கணினி முன் தவம் கிடக்கும் உருளைக் கிழங்குகளைப் பார்த்தால் எனக்கு வெறுப்புதான் வரும். அதைவிட பேருந்தில் சிலர் ஜன்னல் அருகே உட்கார்ந்து கொண்டு ஏன் தங்கள் உள்ளங்கையையே முறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கோபம் வரும். காதில் ஒரு குழாய், சதா சர்வ நேரமும் அதில் இசை என்று வெற்றிடத்தில் தொடர்பு கொள்வாளோ என்று என் மகளைப் பார்க்கும் போதும் தோன்றும். என் கணவருக்கோ நாள் இறுதி, வார இறுதியில் கணினிதான் அவருடைய மனைவியே. தொலைபேசி மேல் மட்டும் ஏனோ கடும் கோபம். அதைத் தொட மாட்டார். என் பெண்ணின் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மறைந்து, அலைபேசி அவளை ஆட்கொண்டுவிட்டது. மகன் மட்டும் இன்னும் எனக்கு அடங்கும் கைப்பிடியில். அதுவும் நான் கொஞ்சம் கண் அயர்ந்தால் என்னுடைய அலைபேசியை மைதானமாக்கி விடுவான் .
இவ்வளவு சொல்லி என்ன... நானும் பொழுதுபோக்காக கணினியை நாடுவது உண்டு. முகப்பக்கத்தில் இருக்கிறேன். ஆனால் என் பழக்கம், வழக்கமாகிவிடவில்லை. மற்றவரை உறுத்துவது, வாழ்க்கையைச் சிக்கலாக்குவது எதுவானாலும் சற்றுக் கைவிட வேண்டும் என்பது என் கொள்கை. பேசுவதற்கு மனிதர்கள் அருகில் இருக்கும் போது , பொருட்கள் பல நம்மைச் சுற்றி இருக்கும்போது எதற்கு இந்த இணைய மோகம்?
இங்கே சிங்கப்பூரில் வார இதழ்களை எப்போது புத்தகமாக படிப்பது? அதற்கு சிராங்கூன் ரோட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதால் இணணயத்தில் கட்டணம் செலுத்திப் படிக்கிறோம். ஆனால் நான் அவசர சமையல் போல், அதையும் குறைத்து நுனிப்புல் மேய்ந்து ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் ஒரு அலசு அலசி விட்டு நானும் படித்தேன் என்று பெயர் வாங்கி விடுவேன்.
செய்தித்தாளின் அச்சு மை வாசனையோடு தஞ்சாவூர் டிகிரி காபி ருசித்ததும், போட்டி போட்டுக் கொண்டு நாளிதழ்களைப் படித்ததும் மறக்குமா? இன்றைக்கு ஆளுக்கு ஒரு வசதி. ஆனால் அனைவருக்கும் ஒரே ருசி உள்ளதா? அலுத்துக்கொள்வதில்கூட ஒரு சிறு கர்வம் வருவது போல் இருக்கிறது.
புத்தகமாக, பிரதியாக எனக்கே எனக்காக வந்தவை இன்னும் ஞாபகத்தில் உள்ளன. சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிக் கொடுத்த ரஷ்ய நாட்டுச் சிறுகதை புத்தகங்கள், மற்றொரு சித்தப்பா கொடுத்த வால்ட் டிஸ்னி புத்தகம், அதில் இருந்த கண்ணைக் கவரும் ஓவியங்கள். என் மனதைத் தூண்டிய பல விஷயங்களை நினைத்துப் பார்க்கும்போது நாம் பலவற்றை தொட்டுப் பார்த்து, உணர்ந்து வாழ்ந்திருக்கிறோம் என்று புரிகிறது.
வாடகை புத்தகக் கடையில் தாத்தாவின் கட்டண உபயத்தில் நாங்கள் எடுத்த எனிட் பிளைடன் நாவல்கள், அம்புலிமாமாவையும் பொன்னியின் செல்வனையும் மதிய நேரத்தில் எங்களோடு பகிர்ந்த தமிழ் ஆசிரியையும் ஞாபகத்தை அவ்வப் போது தூண்டிச் செல்கின்றனர்.
மகனின் குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு வருகிறேன். அக்காவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பரிசு வாங்க ஜூரோங் பாயிண்ட் போக வேண்டும் என்றீர்களே, போகலாமா என்றவனின் ஆவலைப் புரிந்துகொண்டு வெயிலைப் பொருட்படுத்தாமல் பத்து நிமிட நடையில் ஜூரோங் பாயிண்ட் அடைந்தோம்.
பரிசுப் பொருள் கடைக்குள் நுழைந்தவுடன்தான் என் மகனின் முக வாட்டத்தைக் கவனித்தேன். அவன் கேட்ட 3.50 வெள்ளி விலையுள்ள பொம்மை காரை வாங்கித் தரவில்ல என்று ஒரே கோபம். எத்தனை கார் என்று என் மனம் ஒரு தடை போட்டது. ஆனால் அவன் விடாக்கண்டன். பத்து வெள்ளி புத்தகத்தைக் கொண்டு வந்து காண்பித்ததும் பத்து வெள்ளியா என்று யோசித்தேன். இதெல்லாம் லைப்ரரியில் கிடைக்கும் என்று சொல்ல வாய் திறந்தேன். எப்படி? புத்தகக்காட்சியில் வாங்கலாம் என்று நினைத்து, இன்றுவரை வாங்காமலேயே இருக்கும் கேக் செய்முறை புத்தகம் போன்றா? என்று மனம் பகுத்து ஆய்ந்தது. சரி வாங்கலாம் என்றேன்.
நாளை என் மகன் மறக்க முடியாதவை என்று இதை நினைக்கிறானோ, இல்லை இன்று அவன் தொலைக்காட்சியில் தொலைந்து போகாமல் இருக்க உதவுமோ அந்தப் புத்தகம்? இனி மாதம் ஒரு புத்தகம் வாங்கித் தரலாம் என்ற ரகசியத் திட்டம் வைத்துக் கொள்ளலாமா என்றும் தோன்றியது . அதை எல்லாம் எங்கே வைப்பது என்று மனம் 115 சதுர மீட்டர் வீட்டைப் பார்த்து அலசுகிறது. ஆசை பெரிது, ஆனால் மனது சிறியது. அப்படித்தான் எல்லாவற்றிலும் கோட்டை கட்டி விடுகிறேன் வாயிலை சின்னதாக்கி விட்டு. பார்ப்போம், எது ஜெயிக்கிறது என்று!
- துர்கா கார்த்திகேயன், சிங்கப்பூர்.