

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்கள் குறைவுதான். ஆனால், கிடைத்த குறைவான தகவல்களே விடுதலைப் போரட்டங்களில் பெண் போராளிகளின் பங்களிப்பைப் பெரிய அளவில் பறைசாற்றுகின்றன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாத இதழில் வெளிவந்த ‘விடுதலைப்போரில் பெண்கள்’ என்ற தொடரின் சுருக்கமான வடிவமே ‘விடுதலைப் போரில் பெண்கள் 1857 எழுச்சிகளின் பின்னணியில்’ என்ற இந்தப் புத்தகம். 1857 எழுச்சிகளின் பின்னணியில் நடந்த போராட்டங்களில் பங்கெடுத்தப் பெண் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை இந்தப் புத்தகம் விளக்குகிறது.
சிவகங்கை ராணி வேலு நாச்சியார், தன்னையே வெடிகுண்டாக மாற்றிக்கொண்ட அவருடைய பணிப்பெண் குயிலி, கிட்டூர் ராணி சென்னம்மா, ஜான்சி ராணி லட்சுமிபாய், அயோத்தியின் பேகம் ஹசரத் மஹல், ஜல்காரி பாய், ராம்காட் ராணி அவந்திபாய் போன்ற பெண் போராளிகளின் வீரத்தை அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது. இந்திய விடுதலைப் போரட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்களின் வீரத்தையும் தியாகத்தையும் முழுவதுமாகப் பதிவு செய்யாமல் போனதைப் பற்றி இந்தப் புத்தகம் வலுவான கேள்விகளை எழுப்புகிறது.
1857-ம் ஆண்டு நடந்த மாபெரும் எழுச்சியை சிப்பாய் கலகம் என குறிப்பிட்டிருப்பதையும், ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் காப்பாற்ற வந்தவர்களாகச் சித்திரிக்கப்பட்ட வரலாற்றையும் இந்தப் புத்தகம் பதிவுசெய்துள்ளது.
புத்தகம்: 1857 எழுச்சிகளின் பின்னணியில்
(விடுதலைப் போரில் பெண்கள்),
ஆசிரியர்: எஸ். ஜி. ரமேஷ் பாபு
வெளியீடு: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,
27, மசூதி தெரு, சென்னை - 600 005