

மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பொருளா தாரத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கபட்ட சூழலில், பணம் படுத்தும் பாட்டை அனைவரும் உணர்வோம். வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை நிர்ணயிப்பதில் பணம் முதன்மையானது என்பதை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் காலத்திலிருந்து விளங்கிக்கொண்டிருக்கிறோம்.
பணம் வைத்திருப்பவன் ஆண்டானாகவும் பணம் இல்லாதவன் அடிமையாகவும் இருக்கிறான். பணத்தைப் பெண்கள் சம்பாதிக்காதவரை, அதைச் சம்பாதித்துத் தரும் ஆடவனுக்கு அவர்கள் அடிமைதான். மார்க்சியவாதிகள் கூறிய இந்தக் கருத்தை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும்.
குடும்பத்தில், ஆண் மட்டும் சம்பாதிப்பவனாக இருந்த காலத்தில், அவன் ஆதிக்கம் எல்லாத் தளங்களிலும் ஓங்கி இருந்தது. கல்வி கற்ற பெண்கள் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கத் தொடங்கியவுடன், சுயமாகச் சிந்திக்கவும் செயல்படவும் ஆரம்பித்தனர். தங்கள் விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கத் தொடங்கிய அவர்கள், குடும்பத்தினரின் விருப்பு வெறுப்புகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை சாய்க்கத் தொடங்கினர். குழந்தைகளின் பொருளாதாரத் தேவைகளைத் தாங்களும் நிறைவேற்றத் தொடங்கியவுடன், அவர்கள் மத்தியில் பெண்கள் அந்தஸ்து உயரத் தொடங்கியது. கணவனின் பொருளாதாரச் சிக்கலுக்குக் கைகொடுத்தபோது, பெண்களின் மதிப்பு மேலும் உயரந்தது. சுய பொருளாதார விடுதலை பெண்களை அடிமை வாழ்க்கையில் இருந்து மீட்டெடுத்து அவர்கள் நிலையை உயர்த்தியது.
ஆண்களில் நடுத்தர வயதில் இறப்பைத் தழுவுவர்கள் அதிகம். குடி, புகையிலைப் போன்ற வேண்டாத பழக்க வழக்கங்களால் அவர்களின் இறப்பு விகிதம் பெண்களின் இறப்பு விகிதத்தைவிட அதிகம். வீட்டு ஆணின் திடீர் மரணம், அவர்கள் குடும்பத்தை நிலைகுலையச் செய்கிறது. கணவனின் இறப்புக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், குழந்தைகளோடு தற்கொலைக்குத் துணிந்த நல்லதங்காள் போன்ற பெண்கள்தான் யதார்த்தத்தில் ஏராளம். கணவனின் நிழலில் வாழ்ந்த பெண்கள், அவன் இறப்புக்குப் பின்,குடும்பத்தை மீட்டெடுப்பதற்காகப் போராடியது முற்காலத்தில் மிகக் குறைவு.
குடும்பத்தைக் காத்தச் சிறுவாடு
பெண்களின் அத்தகைய குடும்ப மீட்சிப் போராட்டங்கள், அவர்களின் பொருளாதார சுயசார்பால் குறைந்துவிட்டன; அத்துடன், அது அவர்களைக் கைம்மைக் கொடுமையிலிருந்தும் மீட்டெடுத்தது. பெண்களை அறியாமை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது கல்வியென்றால், அதை நிரந்தரமாகத் தக்க வைத்துக்கொள்ள அவர்கள் பெற்ற பொருளாதார சுயசார்பு மிகவும் உதவியது.
பணமதிப்பு நீக்கம் (Demonetization) செய்யப்பட்ட சூழலில், இந்தியக் குடும்பங்கள் நிலைகுலையாது தாக்குப் பிடித்து நிற்கிறது என்றால், அதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று பெண்கள் பெற்றுள்ள பொருளாதார சுயசார்பு. செலவழித்தே பழகிய ஆண்கள் மட்டுமே குடும்பப் பொருளாதாரத்தைத் தாங்கி இருந்தால், மத்திய அரசின் இந்தக் கொள்கை முடிவால், நிறைய இந்தியக் குடும்பங்கள் காணாமல் போயிருக்கும். ஆனால், நெருக்கடியான பொருளாதாரச் சூழலிலும் இந்தியக் குடும்பங்கள் நிலைபெற்று நிற்பதற்கான காரணத்தை ஒவ்வோர் ஆணும் உணர வேண்டும்.
முன்பெல்லாம் கணவன் தருகிற பணத்தில் ‘சிறுவாடு’ பிடித்து, அவன் பொருளாதார நெருக்கடியில் துணை நின்ற பெண்கள், இன்று கை நிறைய சம்பாதித்து, கணவனுக்கும் குடும்பத்துக்கும் உதவி செய்கின்றனர்.
ஒட்டு மொத்த ஆண் சமூகம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், குடும்பம் என்ற அடித்தளம் எந்தச் சூழலிலும் ஆட்டம் காணாமல் இருக்க வேண்டும் என்றால் பெண்களின் பொருளாதாரச் சுயசார்பு அதிமுக்கியம். பெண்களும் படித்துவிட்டு, வீட்டுக்குள் அடைந்து கிடப்பது நாட்டின் முன்னேற்றத்தைச் சீர் குலைத்துவிடும் என்பதை உணரவேண்டும். பெண் சமூகம் பெறும் பொருளாதார விடுதலை ஒட்டு மொத்த சமூக விடுதலையை விரைவுபடுத்தும்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com