Published : 28 Aug 2016 03:42 PM
Last Updated : 28 Aug 2016 03:42 PM

முகம் நூறு: நாம் கொண்டாடத் தவறிய பெருங்கலைஞர்

ஒடுங்கிய தேகம், இடுங்கிய கண்கள், எழுந்து நிற்பதற்கும் அடுத்தவரின் துணை தேவை. தட்டுத் தடுமாறி நடந்துவந்தவரிடம் பேசமுடியுமா என்ற யோசனையை பட்டென்று தகர்க்கிறது அந்த கணீர் குரல். தன் முன்னால் இல்லாத வில்லை மனதால் இசைத்தபடி பாடத் தொடங்குகிறார் எண்பது வயதை நெருங்கும் பூங்கனி. குரலின் உறுதியில் ஐம்பது வருடங்கள் மாயமாக மறைந்து போய்விடுகின்றன. இருபது வயதின் உற்சாகத்தோடும் துள்ளலோடும் வந்து விழுகின்றன வார்த்தைகள்.

கைலாயத்தில் வீற்றிருக்கிற பரமசிவனையும் பார்வதியையும் வழிபட்டு வில்லிசைக் கச்சேரியை ஆரம்பிக்கிறார். பொன்னை உருக்கி வார்த்த வனப்புடன் அவர்கள் கொலுவீற்றிருக்கும் காட்சியை, நம் மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார் பூங்கனி.

பட்டினிதான் வாராம

படியளக்க வேண்டுமென

நாடி நல்ல தினையெடுத்து

பகவான் உலகெல்லாம்

படியளந்தாரே

பாடல் முடிந்ததுமே சுருதியைக் குறைத்து, சட்டென்று உரைநடைக்குத் தாவுகிறார். “தனக்குத் தெரியாமல் சிற்றெறும்பைப் பிடித்து மரப்பெட்டிக்குள் மறைத்துவைத்த பார்வதிதேவியின் செயலைக் கண்டுபிடித்துவிட்டார் பரமசிவன். மண்ணுக்குள் மறைத்து வைத்திருந்தாலும் மகாதேவன் அறியாத மாயமில்லை” என்று சொல்லிவிட்டுக் கூட்டத்தை நோக்கி, “ஒரு கணவனாகப்பட்டவன் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்வான். மனைவி தன்னிடமிருந்து ஒரு விஷயத்தை மறைப்பதை எப்படித் தாங்குவான்?” என்று கேட்கிறார். அதன் போக்கில் பாயும் நதியாகப் பாட்டிசைத்துக் கொண்டிருந்தவரை நிறுத்த மனமின்றி கேட்டுக்கொண்டிருந்தோம். அந்தக் கதையைச் சொல்லி முடித்த பிறகு, “போதுமா, இன்னும் பாடணுமா?” என்று கேட்கிற பூங்கனியின் கண்களில் வில்லிசை மீதான பேரார்வம் கனலாகச் சுடர்விடுகிறது!

கல்வி தந்த குழிப்பள்ளி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகிலுள்ள சரவணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த நல்முத்துக்களில் முதன்மையானவர் பூங்கனி. வில்லெடுத்துப் பாட்டிசைத்த இரண்டாவது பெண் கலைஞர் இவர். தனக்கு முன்னால் இரட்டைச் சகோதரிகள் மட்டுமே வில்லிசை படித்ததாகச் சொல்கிறார் பூங்கனி. ஒரு அண்ணன், மூன்று அக்காக்களுக்குப் பிறகு பிறந்தவர் பூங்கனி. இவருடைய அப்பா, பனையேறி. அதில் கிடைக்கிற வருமானம் கைக்கும் வாய்க்குமே போதாத நிலையிலும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினார். பூங்கனியும் குழிப்பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படித்தார்.

“அப்போ எல்லாம் சிலேட்டு ஏது? வாத்தியாரு சுவடியைப் பார்த்து படிப்பிச்சித் தருவாரு. நாங்க தரையைக் கீறி அதுல எழுதிப் படிப்போம்” என்று எழுபது வருடங்களுக்கு முந்தைய நாட்களை நினைவுக்குக் கொண்டுவந்து புன்னகைக்கிறார் பூங்கனி. பூங்கனியின் அண்ணன் வில்லடிக் கலையைப் பழகினார். அவருடன் சேர்ந்து கச்சேரியைப் பார்க்க சிறுமியான பூங்கனியும் செல்வார். அப்படி ஒரு முறை கச்சேரிக்குச் சென்றபோது இரட்டைச் சிறுமிகள் வில்லடிக் கலையை அரங்கேற்றியதைப் பார்த்தார். பூங்கனியின் கண்களில் ஆச்சரியத்துடன் கலந்திருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்டார் வில்லடிக் கலை ஆசான். “உனக்கும் வில்லடி பழகணும்னு ஆசையா இருக்கான்னு கேட்டார். நான் ஆமாம்னு சொன்னேன். அப்படி ஆரம்பிச்சதுதான் என்னுடைய வில்லுப்பாட்டு” என்று தன் கலையின் ஆரம்பப் புள்ளி குறித்துச் சொல்கிறார் பூங்கனி.

தடைபடாத கலைப் பயணம்

ஒன்பது வயதில் பாட்டிசைக்கத் தொடங்கியவருக்கு பதினைந்து வயதில் திருமணம் ஆனது. மனம் போல வாழ்வு என்பார்களே அது பூங்கனியின் விஷயத்தில் மொத்தமாகப் பொருந்திப்போனது. பூங்கனியின் கணவர் குடம் (நாம் கடம் என்று சொல்வதை வில்லிசைச் கலைஞர்கள் குடம் என்கிறார்கள்) வாசிப்பவர் என்பதால், இவரது கலைப் பயணத்துக்குத் திருமணம் எந்த வகையிலும் தடையாக இருக்கவில்லை.

தென் தமிழகத்தில் வில்லடிக் கலை, கோயில் திருவிழாக்களுடன் தொடர்புடையது என்பதால் உள்ளூர், வெளியூர் என்று தொடர்ந்து பல கோயில் மேடைகளை பூங்கனி தன் சிம்மக் குரலால் அதிரவைத்தார். திரைப்பட நாயகர்களுக்கு இணையான ரசிகர்களையும் அவர் பெற்றிருந்தார். வில் வண்டியை விட்டு இறங்கக்கூட விடாமல் இளைஞர்கள் கூட்டம் இவரைப் பார்க்க முண்டியடித்து முன்னேறிய நாட்களின் நினைவுகளைப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.

“ஒரு முறை கச்சேரிக்குப் போகத் தாமதமாகிடுச்சு. பூங்கனி ஏன் இன்னும் வரலைன்னு ஊர் முழுக்க ஒரே பேச்சு. ஊர்ப் பெரியவங்களால கூட்டத்துக்குப் பதில் சொல்ல முடியலை. எங்க வண்டி போய் நின்னதுதான் தாமதம், மொத்தக் கூட்டமும் என்னைச் சூழ்ந்து நின்னுடுச்சு. அதுல இருந்து வெளியேறி மேடையேறவே நேரமாச்சு. சில ஊர்ல என்னைக் கடத்திக்கிட்டு போகிற அளவுக்கு தீவிரமான ரசிகர்களும் இருந்தாங்க” என்று சொல்லும்போதே வார்த்தைகளை உடைத்துக்கொண்டு வெளிப்படுகிறது சிரிப்பு. அந்தக் காலத்திலேயே ஊர்ப் பெரியவர்களின் சார்பில் தங்கப் பதக்கம் பெற்ற பெருமையும் பூங்கனிக்கு உண்டு.

ஊரெல்லாம் பரிசு மழை

தங்கப் பதக்கம் மட்டுமல்ல, பூங்கனியின் வில்லிசையில் மயங்கிய பலரும் பலவிதமாக பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் இளைஞர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய டிரங்குப் பெட்டியைப் பரிசளித்திருக்கிறார்கள். தன்னிடம் இருக்கும் உடைகளை வைத்துக்கொள்ள சிறிய பெட்டியே போதுமென்று சொல்லி, அதை மறுத்துவிட்டாராம் பூங்கனி.

பூங்கனியின் பாட்டு மட்டுமல்ல, அவரது ஒவ்வொரு அசைவுமே மக்களிடம் பேசுபொருளாக இருந்தது. இளம்பெண்கள் பலரும் பூங்கனி உடுத்தியிருக்கிற உடை போலவும் அணிந்திருக்கிற நகை போலவும் வாங்கி அணிந்திருக்கிறார்கள். நதியா கம்மல் வருவதற்கு முன்னாலேயே பூங்கனி கம்மல் தென் தமிழகத்தில் பிரபலமாக இருந்திருக்கிறது. “நிறைய பேர் இதை எங்கே வாங்கினீங்க, அதை எங்கே செஞ்சீங்கன்னு என்கிட்டேயே கேட்பாங்க” என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார்.

வில்லிசைப் பாடல்கள் அனைத்தையும் காதால் கேட்டு மனதுக்குள் குறித்துவைத்திருக்கிறார் பூங்கனி. இசக்கியம்மன், மாரியம்மன், பத்ரகாளி, முத்தாரம்மன், உச்சிமாகாளி, சுடலை, சாஸ்தா, பெருமாள், கருங்கிடாய்க்காரன், செங்கிடாய்க்காரன், மாசானம், காளஸ்வாமி, மார்க்கண்டேயன் ஆகிய கதைகளோடு புராண கதைகள், பக்தி கதைகள் அத்தனையும் பூங்கனிக்கு அத்துப்படி. நூற்றுக்கணக்கான பாடல்களை மூப்பின் மறதியிலிருந்து காப்பாற்றிவைத்திருக்கிறார் பூங்கனி.

கோரிக்கையற்றுக் கிடக்கும் கலை

ஒரு காலத்தில் வில்லிசைக் கலையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பூங்கனி, கணவருடைய இறப்புக்குப் பிறகு பாடுவதைக் குறைத்து, பிறகு மொத்தமாக நிறுத்தியும் விட்டார். குழந்தைகள், உறவுகள் யாருமற்று தனியொரு குடிசையில் ஏழ்மையில் வாடுகிறார். பூங்கனியை கவுரவிக்கும் பாக்கியம் இதுவரை எந்தவொரு அரசாங்க விருதுக்கும் கிடைக்கவில்லை என்பது தேர்ந்த கலைஞர்களுக்கு நாம் எப்போதும் தருகிற மரியாதையைப் பறைசாற்றுகிறது.

“நான் அந்தக் காலத்து ஆளு. எனக்குப் பிறகு பாட வந்தவங்க எல்லாம் ஏதேதோ விருது எல்லாம் வாங்கியிருக்காங்களாம். எனக்கு அதைப் பத்தி எல்லாம் எதுவும் தெரியாது. நான் பாடினதைக் கேட்டு ஆயிரக்கணக்கான ஜனங்க ரசிச்சாங்களே, அதைவிடவா விருது பெருசு?” என்று நிறைவாக வந்துவிழுகின்றன வார்த்தைகள்.

பூங்கனியை குருவாக வரித்துக்கொண்ட பலர், இன்று தனியாகக் கச்சேரி செய்கிறார்கள். தன் மாணவர்களில் ஒருவரான அய்யப்பன் தற்போது குடம் வாசிக்கும் கலைஞராக இருப்பது குறித்து பூங்கனிக்கு மகிழ்ச்சி. தன்னால் நிறையப் பேருக்கு பயிற்சி தர முடியவில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. பலரும் இன்று நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைத்துப் பாட, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் மூளைக்குள் பதிந்துவைத்த வார்த்தைகளுக்கு ஒலிவடிவம் கொடுக்கிறார் பூங்கனி. தன் மாணவிகளில் ஒருவரான வசந்தியின் பாடலைக் கேட்டு ரசிக்கும் பூங்கனி, “இன்னும் கொஞ்சம் இழுத்துப் பாடு” என்று சொல்லிவிட்டு உடன் சேர்ந்து இசைக்கிறார். அந்தச் சிற்றறையின் சுவர்களில் பட்டுத் தெறிக்கிற ஒவ்வொரு வார்த்தையும் பூங்கனியின் வில்லிசைத் திறத்தை எதிரொலிக்கிறது!

படம்: ம.பிரபு, எம்.கருணாகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x