கணவனே தோழன்: பரிசு பெற வைத்தார்

கணவனே தோழன்: பரிசு பெற வைத்தார்
Updated on
1 min read

என்னுடைய கணவர் கதை, கட்டுரை, துணுக்குகள், கவிதைகள், எழுதி பல பரிசுகளைப் பெற்றுள்ளார். திருமணமான புதிதில் என்னிடம் பத்திரிகையில் எழுதும் பழக்கம் உண்டா எனக் கேட்க, “அது சுத்த வேஸ்ட். மண்டையை போட்டு குழப்பி நேரம் செலவழித்து எழுதிப் பிரசுரமாகவில்லை என்றால், ஏமாற்றம்தானே மிச்சம்? ” என்றேன்.

வருடங்கள் ஓடின. மகள் பிறந்து பள்ளியில் நடக்கும் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளச் செய்து என்னிடம் வெற்றிக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் காண்பிப்பாள். மகளை வற்புறுத்தி பரிசு பெற வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒரு முறையில் பத்திரிகை ஒன்று நடத்திய மகளிர் கொண்டாட்டப் போட்டிக்கு எனது பெயரையும் கணவர் சேர்த்துவிட்டார். அம்மா-மகள் கலந்து கொள்ளும் போட்டி. எனக்குத் தெரியாமல் என்னை ஏன் போட்டியில் சேர்த்தீங்க என்று கேட்டு அவரிடம் சண்டை போட்டேன்.உங்களை மாதிரி திறமை, புத்திக்கூர்மை எல்லாம் என்னிடம் இல்லை என்றேன். நீ சும்மா கலந்து கொள், யோசிச்சு சொல், மகளும் உடனிருக்கிறாள். எல்லாமே வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்றார்.

என்னதான் மாயமோ, அன்றைய போட்டியில் பரிசு வாங்கினேன். பலரின் முன்னிலையில் சந்தோஷமும் ஆர்வமும் துளிர்விட்டது. அதைத் தொடர்ந்து ஒரு பிரபல நகைக்கடை நடத்திய ஸ்லோகன் போட்டியில் பரிசு பெற்றேன். மாபெரும் கூட்டத்தில் பரிசு பெற்றபோது சந்தோஷத்தில் மிதந்தேன். இது தவிர பல பரிசுகள், பாராட்டுகள் குவிந்தன. தமிழ் மீது என்னை அறியாமல் காதல் கொண்டேன்.

இப்போது எல்லா பத்திரிகைகளையும் விடாமல் வாசிக்கிறேன். இலக்கியக் கூட்டங்களுக்கு சென்று வருகிறேன். தின, வார மற்றும் மாத இதழ்களில் அறிவிக்கப்படும் போட்டிகளுக்குக் கண்கள் தேடுதல் வேட்டை நடத்தும். அதில் வெல்வதும் சுற்றத்தார் கூறும் பாராட்டு மழையில் நனைவதும் சுகமானதாக மாறியது. என்னவர் தோழனாகி என்னுள் புதைந்திருந்த இலக்கிய ஆர்வத்தைத் தூண்டினார். எனது தமிழ் இதுவரை தோற்கவில்லை.

- லெட்சுமி சுந்தரம், திருநெல்வேலி.

உங்க வீட்டில் எப்படி?

தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in