ஒரு கிராஃபிக் நாவல் - சிந்தையைக் கிளறும் சித்திரங்கள்

ஒரு கிராஃபிக் நாவல் - சிந்தையைக் கிளறும் சித்திரங்கள்
Updated on
3 min read

ஈரான் – நெடிய பண்பாட்டுத் தொடர்ச்சி, இலக்கிய வளம், மரபறிவைக் கொண்ட ஒரு நாடு. இன்றைக்கு அந்நாட்டுத் திரைப்படங்களின் வழியாக அந்த நிலத்தை நம்மால் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.

உலகுக்கு உத்வேகமூட்டும் ஈரான் திரைப்படங்கள் கடுமையான கெடுபிடி களுக்கு மத்தியில் எடுக்கப்படுகின்றன. இந்த 21-ம் நூற்றாண்டிலும் பல்வேறு பழமைவாதக் கட்டுப்பாடுகளை வலிந்து சுமத்தும் அந்த நாட்டில், மக்கள் குறிப்பாகக் கலைஞர்கள் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.

35 ஆண்டுகளுக்கு முன் இதைவிடக் கடுமையான ஒடுக்குமுறைகளைக் குழந்தையாக இருந்தபோதே எதிர்கொண்டவர் மர்ஜானே சத்ரபி. அவர் ஒரு பெண், இஸ்லாமியக் குடியரசில் வாழ்ந்த பெண் என்பதே அதற்குக் காரணம்.

ஆஸ்திரியாவுக்குத் தனியாக

1979-ல் ஈரானின் முடியாட் சிக்கு எதிராகக் கம்யூனிஸ்ட்கள் புரட்சி நடத்தினார்கள். அவர் களது நடவடிக்கைகளுக்கு வரவேற்பு இருந்தாலும், ஆட்சி யைப் பிடித்தது என்னவோ இஸ்லாமிய அடிப்படைவாதிகளே. அப்போது மர்ஜானேவுக்கு 10 வயது.

அடுத்த சில ஆண்டுகளிலேயே ஈரானுக்கும் ஈராக்குக்கும் எதிராகப் போர் மூள, 14 வயதில் தனியாளாக ஆஸ்திரியாவுக்குப் புறப்படுகிறாள் சத்ரபி. கம்யூனிச, முற்போக்குச் சிந்தனை கொண்ட அவளுடைய பெற்றோர் சிறு வயதிலிருந்தே சுதந்திரமாகவும் அரசியல் அறிவுடனும் அவளை வளர்த்திருந்தார்கள். அவளது படிப்பு கெடக் கூடாது என்று ஆஸ்திரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

பதின் பருவத்தின் உச்சத்தை நோக்கி நகரும் அவளைத் தைரியமாக அவர்கள் அனுப்புவதும், நிலைமையைப் புரிந்து கொண்டு அடுத்த நான்கு ஆண்டுகளை அவள் தனிமையில் கழிப்பதும் சாதாரண விஷயமில்லை.

ஏற்ற இறக்கங்கள்

எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மர்ஜானே, வாழ்க்கையின் பல்வேறு எல்லைகளுக்குப் பயணித்துத் திரும்புகிறாள். அவள் மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்தவள், அவளுடைய தாய்மொழி ஐரோப்பிய மொழியல்ல, தன் மரபு சார்ந்த உணவைச் சுவைக்க முடியாது, ரத்த உறவுகளோ நண்பர்களோ அந்த மண்ணில் அவளுக்கு இல்லை. இந்தக் காரணங்களால் ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் அவ ளுக்கு, ஆதரவுக் கரங்களும் அவ்வப்போது நீளுகின்றன.

ஒரு வளர்ந்த நாட்டில் பதின்பருவப் பெண்ணுக்கு உரிய ஏற்ற இறக்கங்களை மர்ஜானேயும் சந்திக்கிறாள். புரட்சியில் தன் உறவினர்களைப் பலிகொடுத்த, போரின் காரணமாகத் தன் பெற்றோரைப் பிரிந்த மர்ஜானே, அந்நிய மண்ணில் காதல் தோல்வியால் விரக்தியின் எல்லைக்குச் சென்றாள். நான்கு ஆண்டுகளுக்குப் பின், சொந்த நாட்டுக்கே திரும்ப செல்ல முடிவெடுத்தாள்.

சிறைபட்ட பெண்மை

வெளிநாடுகளில் அனுபவித்த தனிமனிதச் சுதந்திரம் ஈரானில் அவருக்குக் கிடைக்க வில்லை. வெளிநாடுகளில் மூன்றாம் உலகப் பெண்ணாக ஒடுக்கப்பட்ட அவர், தன் சொந்த நாட்டில் பெண்ணாகப் பிறந்ததாலேயே மிக மோசமான ஒடுக்கு முறைகளை எதிர்கொண்டார்.

பெண்கள் உடல் முழுக்க மறைக்கும் கறுப்பு உடையணிந்தே பொது இடத்துக்கு வர வேண்டும்; முடி வெளியே தெரியாத வகையில் தலையை மறைக்கும் பட்டியை அணிந்துகொள்ள வேண்டும்; ஒரு ஆண் விரும்பினால் விவாகரத்து செய்யலாம். ஆனால், திருமணம் ஆகும்போது ஆண் அனுமதித்தால் மட்டுமே பெண் விவாகரத்து கோர முடியும் - இப்படிப் பெண்களுக்கு எதிராகப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் ஈரானில் அன்றைக்கு நிலவின.

பொது இடத்தில் மர்ஜானேயால் சுதந்திரமாக எதையும் செய்ய முடிய வில்லை. நகப்பூச்சு, உதட்டுச் சாயம் போட்டிருந்தால் கைது செய்யப்படுவது, காதலனுடன் பொது இடத்தில் நடந்து செல்ல முடியாது, வெளிநாட்டு இசைப் பேழைகள் வைத்திருக்கக் கூடாது என விநோதமான தடைகளுடன் மர்ஜானேயின் காலம் கழிந்தது.

அவருடைய சக மாணவிகள் வெளித் தோற்றத்துக்கு நவீனத்தையும் மாற்றத்தையும் விரும்புபவர்களாக இருந்தாலும், உள்ளூர அவர்களும் அடிப்படைவாதிகளாகவும் பிற்போக்குவாதிகளாகவும் இருந்தார்கள். சில வகைகளில் தனிமனிதச் சுதந்திரத்தை அரசு ஒடுக்குவது சரியானது என்று ஏற்றுக்கொண்டார்கள்.

சுதந்திரக் காற்று

அரசுக் கட்டுப்பாடுகளையும், பிற்போக்கு நண்பர்களையும் ஜீரணித்துக்கொள்ள முடியாத மர்ஜானே சுதந்திரத்தையும் மாற்றத்தையும் விரும்புபவர்களுடன் இணைந்தார். இடையில் தன் காதலனை இளம் வயதிலேயே மர்ஜானே திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணமும் சொந்த நாட்டில் அவரது வாழ்க்கையும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

சுதந்திரமாகவும் அறிவுத் தெளிவுடனும் வளர்ந்த, கலையறிவும் படைப்பாற்றலும் மிகுந்த ஒரு பெண் ஈரான் போன்ற ஒரு நாட்டுக்குள் இருப்பது கிட்டத்தட்ட சுயமாகச் சிறை வைத்துக்கொள்வதைப் போன்றது. 25 வயதில் அந்தக் கூட்டிலிருந்து விடுதலை பெற்று, மர்ஜானே ஃபிரான்ஸுக்குப் பறந்தார்.

அவரே வரைந்து, எழுதிய உலகப் புகழ்பெற்ற கிராஃபிக் நாவலில் இருந்து இந்தக் கதையை அறியமுடிகிறது. இந்தக் கிராஃபிக் நாவல் புது வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. அதிலும் மர்ஜானேயின் கோட்டோவியப் பாணி படைப்பூக்கம் நிறைந்தது. உணர்வுகளைக் கடத்தும் சித்திரங்களாக, கோடுகளுக்கு உயிர்கொடுத்துவிடுகிறார் மர்ஜானே.

இந்தத் தன்வரலாற்று நூல் ‘ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை’, ‘ஈரான்: திரும்பும் காலம்’ என இரண்டு பாகங்களாகத் தமிழில் விடியல் பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. தமிழில் தந்தவர் எஸ். பாலச்சந்திரன்.

மாறாத ஒடுக்குமுறைகள்

இன்றைக்கு உலகின் பிரபல கிராஃபிக் நாவலாசிரியர், ஓவியர், விருதுகள் வென்ற திரைப்பட இயக்குநர் எனப் பன்முகக் கலைஞராக மர்ஜானே திகழ்கிறார். இதற்கு அடிப்படைக் காரணம் அவருடைய பெற்றோர் சுதந்திரமாக வளர்த்தது, சிறு வயதிலேயே படிக்க வெளிநாட்டுக்கு அனுப்பியது, வாழ்க்கையில் முக்கியத் தவறுகளைச் செய்து பார்த்துத் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பை மறுக்காதது போன்றவற்றைச் சொல்லலாம்.

நம்மைப் போன்ற மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த உத்வேகமூட்டும் ஒரு பெண்ணின் கதை, நாம் அவசியம் படிக்க வேண்டியது. மர்ஜானே வளர்ந்த காலம் இன்றைக்கு மாறிவிட்டது என்னவோ உண்மை. ஆனால், அந்தக் காலத்தில் நிலவிய பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் இன்னும் மாறவில்லை. அதனால் இந்தப் புத்தகம் மிகவும் கவனத்துக்குரியதாக இருக்கிறது.

விடியல் பதிப்பகம், தொடர்புக்கு: 0422 2576772

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in