

என் முதல் சுற்றுலாப் பயணம், சென்னையிலி ருந்து அமெரிக்காவிலுள்ள டென்வருக்குச் சென்றதுதான். அதுவும் தனியாக, ஆங்கிலம் பேசத் தெரியாமல். அரைகுறை ‘பட்லர் இங்கிலிஷ்‘ மட்டுமே அறிந்திருந்தேன். ஆனால், நான் நினைத்ததுபோல் பயமாக இல்லை. இருபத்தியாறு மணி நேரம் பயணித்து, என் மகன் வசிக்கும் இடத்தைச் சென்றடைந்தேன். எங்கும் புதிய முகங்கள், புதிய சூழ்நிலை, தட்பவெப்பமும் வேறு ஆனால், நம்முடைய நாட்டைச் சேர்ந்த வெவ்வேறு மாநிலத்தவர்களைப் பார்க்க முடிந்தது.
எனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியில் அவர்களுடன் பேசினேன். சட்டத்தை மதிக்கும் அமெரிக்க நாட்டு மக்களைக் கண்டு பிரமித்தேன். சாலை விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறார்கள். சாப்பாடு விஷயத்தில் பிரச்சினையில்லை. எல்லாப் பெரிய நகர்களிலும் இந்திய மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உண்டு.
உச்சிப் பாலம்
டென்வரிலிருந்து கொலராடோ மாகாணாத் துக்குச் சென்றோம். அது வடஅமெரிக்காவின் நடுவிலுள்ள மாநிலம். அந்தப் பகுதியில் மலைகள் அதிகம். இரு புறமும் உயரமான மலைகளின் நடுவில் ஆறு ஓடுகிறது. இரு மலைகளை இணைக்கத் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ராயல் கார்ஜ் பிரிட்ஜ்’ என்று பெயர். இந்தப் பாலம் உலகிலேயே மிகவும் பெரியது. அதனுடைய நீளம் 1,260 அடியும், 384 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தப் பாலத்தை இணைத்துள்ள கம்பிகளின் எடை மட்டும் 300 டன் (1 டன் = 1,000 கிலோ). பாலத்தின் அடிப்பாகம் மட்டும் ஆயிரம் டன் இரும்பாலானது.
இந்தப் பாலத்திலி ருந்து பார்த்தால் இரண்டு மலைகளின் நடுவே ஓடும் அர்கன்சாஸ் ஆற்றின் அழகை ரசிக்க முடிகிறது. இதே பகுதியில் உலகிலேயே அதிக தூரம் மலையில் பயணிக்கிற டிராம் உள்ளது. அதனுடைய நீளம் 2,200 அடி. அர்கன்சாஸ் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் இந்த டிராம் செல்கிறது. இந்த உயரத்தில் இருந்து பார்க்கும்போது மனிதர்கள், ஒரு சிறு புள்ளியைப் போல் தெரிகிறார்கள்.
அர்கன்சாஸ் நதியை அருகில் சென்று காண, இங்கு செங்குத்தான (incline train) ரயில் உள்ளது. இந்த ரயில் இரண்டு மாலைகளை ஐந்து நிமிடங்களில் கடக்கிறது.
பிசாசு நகரம்
இந்தப் பகுதியில் உள்ள ‘கோஸ்ட் டவுன்’ என்ற இடம் 18-ம் நூற்றாண்டை அழகாகக் கண் முன்னே காட்டுகிறது. அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சாரட் வண்டி, கொல்லன் பட்டறை, குதிரைச் சேணம், சாரட் வண்டி ஓட்டும் சாட்டின் கவுன், கண்ணாடிப் பாத்திரங்கள், இசைக்கும் நிலையில் உள்ள பியானோ, தாமஸ் ஆல்வா எடிசன் கையெழுத்திட்ட காசோலை, தொலைபேசி, அச்சகம், அகல வீடுகள் என அந்தக்கால மனிதர்களின் வாழ்க்கை முறையைக் கண் முன்னே நிறுத்துகிறது.
- கலைவாணி, மேட்டூர் அணை.