பெண் திரை: மாற்றத்துக்கு வித்திட்ட ‘மறைக்கப்பட்ட பெண்கள்’

பெண் திரை: மாற்றத்துக்கு வித்திட்ட ‘மறைக்கப்பட்ட பெண்கள்’
Updated on
2 min read

சமீபத்தில் நடந்த 89-வது ஆஸ்கர் விருது விழாவில், விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ஒன்று Hidden Figures. தியடோர் மெல்ஃபியின் இயக்கத்தில் உருவான இந்தப் படம், சொல்லப்படாத உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

1960-களில் நடைபெறும் சம்பவங்களே கதைக்களம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களான மூன்று பெண்கள் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் நுழைந்து, அதன் வெற்றிகரமான விண்வெளிப் பயணங்களின் மூளையாகச் செயல்பட்டவர்கள். அது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் இருந்த காலகட்டம். தனி பள்ளி, கல்லூரி, கழிப்பறை, தேநீர் அருந்தும் பகுதி, பேருந்தின் பின்பகுதி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. அப்போது அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் விண்வெளி ஆய்வுத் துறையில் போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

ரஷ்யா 1957-ல் ஸ்புட்னிக் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது அமெரிக்காவுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இது நாசா மையத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. தனது ஆய்வை விரிவுபடுத்த நினைத்த நாசா, அறிவியல், கணிதம், பொறியியல் பட்டதாரிகளைப் புதிதாக வேலைக்குச் சேர்த்தது. இந்த வாய்ப்பை ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். அவர்களுக்கு கலர்டு கம்ப்யூட்டர் என்ற தனி அறை ஒதுக்கப்பட்டது. அந்தப் பெண்களின் மேற்பார்வையாளராகத் தன்னிச்சையாகப் பொறுப்பெடுத்துக்கொண்டார் டாரத்தி வேகன் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண். அவரின் மேலதிகாரி அமெரிக்கப் பெண்.

எதிர்ப்பை வென்ற திறமை

கணிதம், அல்ஜீப்ரா நன்கு தெரிந்தவர்களை நாசாவின் விண்வெளிப் பயணத் திட்டக் குழு தேடுகிறது என்றவுடன் டாரத்தி, தனது தோழியான கேத்தரின் ஜான்சன் அலரை அடையாளம் காட்டுகிறார். சிறு வயது முதலே கணிதத்தில் அதீதமான அறிவு கொண்ட கேத்தரின் கதையின் மையப் புள்ளி. வெள்ளை அமெரிக்க ஆண்களும் ஓர் அமெரிக்கப் பெண்ணும் உள்ள அறையில் அரை மணி நேரம் நிற்கிறார் அலர். ஆனால் அவரைக் கண்டுகொள்ளும் மனநிலையில் யாரும் இல்லை. முதலில் குப்பை சேகரிக்க வந்த பெண்ணாகவே அலரைப் பார்த்தனர். சிலர் குப்பைகளை எடுத்து அவர் கையில் தந்தனர். பிறகு கறுப்பு மையால் சில வரிகளை மறைத்துவிட்டு, பல கோப்புகளை அலர் மேசையில் போட்டனர். அதற்கெல்லாம் அலரால் விடை காண முடியாது என்று நினைக்கிறார்கள்.

காபி மெஷினைப் பயன்படுத்தி அலர் காபி அருந்துவதைப் பொறுக்க முடியாமல், உங்களுக் கென்று தனியான காபி மெஷின், கழிவறை உள்ளது என்று ஒரு பெண் ஊழியர் சொல்ல, பல கட்டிடங்களைத் தாண்டி அலர் ஓடுவது இனவெறுப்பு செயல்பாடுகளின் உச்சமான விளைவு.

எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, கடமையே கண்ணாக அலர் செயல்படுவது மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஓர் ஏணியில் ஏறி, பெரிய கரும்பலகையில் விறுவிறுவென்று அலர் கணக்குப் போடுவது பின்னால் அவர் எட்டவிருந்த உயரத்தைக் காட்டியது. தலைமை அதிகாரியான ஹாரிசனை அணுக இயலாது தடுக்கும் ஆண் ஊழியரைத் தள்ளிக்கொண்டு தனது கருத்தைத் தெரிவிப்பதும், விண்வெளி வீரர்களுக்கான கூட்டத்தில் பெண்களை அனுமதிப்பது மரபு இல்லை எனத் தடுக்கும்போது, ‘மனிதன் பூமியைச் சுற்றி வருவது கூடத்தான் மரபு அல்ல’என்று அலர் பதிலளிப்பதும் சிறப்பு!

பெண்களின் வானம்

ஐ.பி.எம். மெஷின் போடும் கணக்கை நம்பாமல் அலரைக் கணக்குப் போடச் சொல்லி சரிபார்க்கும் அளவுக்கு அறிவுஜீவியாகத் திகழ்கிறார் அலர். அமெரிக்காவின் முதல் விண்வெளிப் பயணத்தில் அலரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மற்றொரு பாத்திரமான மேரி ஜாக்சன் கணிதத்திலும் இயற்பியலிலும் சிறந்து விளங்குகிறார். அவருக்கு விண்வெளி ஊர்தியை வடிவமைக்கும் பணி கொடுக்கப்படுகிறது. ஆனால் அதற்குப் பொறியியல் அறிவு தேவைப்படுகிறது. பொறியியல் கல்லூரியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் படிக்க இயலாது என்ற நிலை. இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார் மேரி. அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கிறது. பகலில் நாசாவில் வேலை, இரவில் பொறியியல் படிப்பு என நாசாவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் பொறியாளராக ஆகிறார் மேரி ஜாக்சன்.

தலைமைப் பண்பு கொண்ட தைரியமான கதாபாத்திரம் டாரத்தி வேகனுடையது. தனது தோழி கேத்தனின் மதிப்பு மிக்க பதவி உயர்வு குறித்து, எந்த உயர்வாக இருந்தாலும் அது நம் அனைவருக்குமான உயர்வு என அவர் சொல்வது தோழிகளின் ஒற்றுமையையும் இன உணர்வையும் வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவின் வெற்றி கரமான விண்வெளிப் பயணத்தில் இந்தப் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அறிவின் ஆற்றல் மிகப் பெரியது. அது தனி மனித வெற்றியைக் கடந்து, சமூக மாற்றத்தையும் கொண்டுவரும் என்ற கருத்தைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறது இந்தப் படம். திரைப்படத்தை உருவாக்கிய மர்கோட் லீ ஷெட்டர்லி ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்.

“இந்தப் படத்தைப் பார்த்த ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் குழந்தை, தன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது நான் ஒரு விஞ்ஞானி போல் இருக்கிறேன் என்று பரவசத்துடன் சொன்னால், அதுதான் என் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி” என்கிறார் மர்கோட். ஆசை ஆசையாகப் படித்து, திருமணத்துக்குப் பிறகு வீட்டில் முடங்கிப் போகும் பெண்களும், அதுவே பெண்களுக்குரிய வாழ்வு என நம்பும் ஆண்களும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in