அறிவோம் தெளிவோம்: காலணியில் ஒரு பாதுகாப்புக் கருவி

அறிவோம் தெளிவோம்: காலணியில் ஒரு பாதுகாப்புக் கருவி
Updated on
2 min read

உண்மையில் பெண்கள் பலவீனமானவர்களா? அல்ல, பலவீனமாக்கப்பட்டவர்கள். பெண்களுக்கான வாழ்வியல் ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் என வளர்ப்பிலேயே மனதளவில் பெண்கள் பலவீனப்படுத்தப்படுகிறார்கள். அந்தக் கற்பித ஒழுக்கங்களுள் முக்கியமானது ‘கற்பு’. இதை வைத்துத்தான் பெண்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் தலைநகர் டெல்லியில் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த நிர்பயா சம்பவம்.

சமூகத்தில் பல தரப்பிலும் இந்தச் சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியது. தங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களுக்குப் பயம் உண்டானது. இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களும் இதனால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டனர். இதெல்லாம் மறைமுகமான பாதிப்பு என்றாலும், சில சாதகமான அம்சங்களும் உள்ளன. பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இதனால் முன்பைவிடப் பரவலானது. நிர்பயா என்னும் பெயரிலேயே பெண்கள் பாதுகாப்புக்கான பல திட்டங்கள் மத்திய அரசாலும் மாநில அரசாலும் தொடங்கப்பட்டன. சமீபத்தில் சில ரயில்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டது நிர்பயா திட்டத்தின் ஒரு பகுதிதான்.

எலக்ட்ரோ ஷூ

நிர்பயா சம்பவம் தந்த பாதிப்பால் நிகழ்ந்திருக்கும் மற்றொரு சாதகமான விஷயம் எலக்ட்ரோ ஷூ (ElectroShoe). இது காலணி மட்டுமல்ல; பாலியல் கொடுமைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கக்கூடிய கருவி. இதைக் கண்டுபிடித்திருப்பது 17 வயதுப் பள்ளி மாணவன் சித்தார்த் மண்டலா. தனது பள்ளித் தோழன் அபிஷேக்குடன் இணைந்து அவர் இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.

சமூகப் போராளியான தன் தாயுடன் பல போராட்டங்களில் சிறுவனாகக் கலந்துகொண்ட அனுபவம் சித்தார்த்துக்கு உண்டு. அதுபோல நிர்பயா சம்பவத்தையொட்டி அன்றைய ஆந்திர மாநிலத்தில் நடந்த பேரணியிலும் 12 வயதிலேயே சித்தார்த் கலந்துகொண்டார். பெண்கள் பாதுகாப்பு குறித்த முழக்கங்கள் அந்தப் பேரணியில் எழுப்பப்பட்டன. அவருடைய தாயும் பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர். இந்த வீட்டுச் சூழலும் நாட்டுச் சூழலும் சிறுவனான சித்தார்த்தைப் பாதித்தன. பெண்கள் பாதுகாப்புக்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது.

நீதியமைப்புக் சவாலான காரியமான இதை சித்தார்த் தன் தலைச்சுமை எனக் கொண்டார். அப்போதே அதற்கான வேலைகளைத் தொடங்கினார். அதற்காகத் தன் பள்ளித் தோழன் அபிஷேக்கைத் துணைக்கு அழைத்துக்கொண்டார். இந்த முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் பாலியல் வன்முறைத் தடுப்புக் கருவி.

அழுத்த மின்சாரக் கருவி

சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் காலணி போன்றதுதான் இது. ஆனால், அத்துடன் சிறிய அளவிலான மின்னணுவியல் சர்க்யூட் இணைக்கப்பட்டுள்ளது. பைசோ எலக்ரிட் (piezoelectric) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த சர்க்யூட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அழுத்த மின்சாரம் எனத் தமிழில் அழைக்கலாம். அதாவது இந்தக் கருவியின் மீது நாம் ஒர் அழுத்தத்தைக் (Mechanical energy-இயந்திர சக்தி) கொடுக்கும்போது இந்த சர்க்யூட்டின் வழியாக ஒரு மின் சக்தி உற்பத்தியாகும். இந்தத் தத்துவத்தைத் தனது பள்ளிக்கூடப் பாடத்தில் படித்துள்ள சித்தார்த் இதைத் தனது புதிய கண்டுப்புக்குப் பயன்படுத்த முடிவுசெய்தார்.

இந்தக் கருவியைக் காலணியுடன் இணைத்து உருவாக்க வேண்டும். ஆபத்துக் காலத்தில் காலணியில் இந்த சர்க்யூட் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் அழுத்த வேண்டும். உடனடியாக இந்த அழுத்தம் தரும் ஆற்றலால் 0.1 ஆம்பியர் மின்சாரம் உற்பத்தியாகி கருவி வேலையைத் தொடங்கும். கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள பெண்ணின் பெற்றோருக்கு அல்லது காவல் துறைக்கு அபாய அறிவிப்பைக் கடத்தும்.

இந்தக் கருவியில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த அபாய அறிவிப்பு எப்படி அளிக்கப்படும், தொலைபேசி வழியிலா, தனி அபாய ஒலியெகுழுப்பும் வழியிலா என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. மேலும், இதைச் சோதனை முறையில் பயன்படுத்த முயன்றபோது காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் துறைசார் பொறியாளர்களின் உதவியைச் சித்தார்த் நாடியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு உரிமம் வாங்கி வைத்துள்ள சித்தார்த் இதைப் பயன்படுத்தும் அளவுக்கு மாற்றங்கள் செய்து விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in