

தஜிகிஸ்தானில், கொஜண்டி நகரில் 1960-களில் பிறந்தவர் ஃபர்ஸானே கொஜண்டி. தஜிகிஸ்தானில் இனோயத் ஹொஜீவா என்ற பெயராலும் அறியப்படுகிறார். தஜிக் மொழியில் (பாரசிக மொழியின் தஜிகிஸ்தானிய வடிவம் இது) புகழ்பெற்ற கவிஞர் இவர். ஈரானியப் பெண் கவிஞர் ஃபரூக் ஃபரூக்ஸாதின் கவிதைகளால் மிகவும் தாக்கம் பெற்றவர் என்று கருதப்படுகிறார். ஃபிர்தௌஸி, ரூமி போன்ற பாரசிகக் கவிஞர்களிடமிருந்தும் நிறைய தாக்கம் பெற்றவராகவும் கருதப்படுகிறார். பாரசிக மொழி பேசும் நாடுகளில் ஃபர்ஸானே மிகுந்த புகழ் பெற்றவராக இருந்தாலும் வெளியுலகில் அவரைப் பற்றி அதிகம் யாரும் தெரிந்திருக்கவில்லை. வாழும் கவிஞராக இருந்தாலும் அவரைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன.
‘பொயட்ரி டிரான்ஸ்லேஷன்ஸ் சென்டர்’ என்ற அமைப்பால் வெளியிடப்பட்ட சிறு கவிதைத் தொகுப்பின் (Poems by Farzaneh Khojandi) மூலமே ஆங்கிலம் பேசும் உலகில் ஃபர்ஸானே அறியக் கிடைக்கிறார். நர்கீஸ் ஃபர்ஸாத் என்பவர் பாரசிகத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க அவற்றை ஆங்கிலத்தின் இயல்புக்கு ஏற்ப செம்மைப்படுத்தியவர் பிரிட்டிஷ் கவிஞர் ஜோ ஷேப்காட். இந்தத் தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகள் இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
குழலூதுபவன்
மெய்யான பஜார் எங்கே?
கண்ணளவு கருணை வாங்க வேண்டும் நான்.
மிகைகளால் உடுத்த வேண்டும் என் ஆன்மாவை.
விருப்பங்களின் நகரத்திலிருந்து
துள்ளும் வண்ணத்தின் ஒட்டுமொத்த நிறமாலையையும்
எனக்காகக் கொண்டுவரும் வியாபாரி ஒருவன் உண்டு.
ஆயினும் இங்கே, கொஜந்த் நகரின் பஜாரில்
கசந்த முகங்களும் வெம்மையுமிழும் பேச்சுகளும்தான்
நானோ டப்ரீஸின் குளுமையான இனிப்புகளுக்கு
ஏங்குகிறேன்.
மெய்யான பஜார் எங்கே?
குழலூதுபவன் சொல்கிறான் என்னிடம்:
அவமதிப்புகளுக்குப் பழகிய செவிகளுடன் வந்து
இருளிடம் ஒளி பிரார்த்திப்பதைக் கேள்.
பலவீனமான அவமானத்துக்குப் பழகிய
உன் கண்களைத் திறந்து
மெய்மையின் அழகைக் காண்.
மெய்யான பஜார் எங்கே?
அதோ இருக்கிறான் குழலூதி
என் இதயத்தை இழுக்கிறான்
பழைய சில்லறைகளால் நிரம்பிய
தனது குல்லா நோக்கி, ஒற்றை முத்துகூட இல்லாத குல்லா,
கண்ணீர்த் துளியின் ஆபரணம் நான் என்பதால்
போயாக வேண்டும் நான்.
தப்பித்தாக வேண்டும்
ஒருவழியாக ‘ஓலமிடுத’லைக் குறிக்கும் சொல் என் நோட்டுப்புத்தகத்தில் வெடித்து நுழைகிறது.
நிழல்கள் தாங்கள்
எவ்வளவு பெரியதாக இருக்கிறோம் என்று தம்பட்டமடித்துக்கொள்ளும்
இந்தக் கேவலமான சமூகம்
நாசமாகப் போகட்டும்.
சூரியன் இல்லாததை யாருமே புரிந்துகொள்வதில்லை.
விடியலைப் போல் தன்னைக் காட்டிக்கொள்கிறது
இந்தப் பிரகாசம் என்பது யாருக்கும் தெரியாது.
அந்தப் பச்சோந்தியின் மாறுவேடங்களில்
அர்த்தத்தின் இன்மையை யாரும் புரிந்துகொள்வதில்லை.
உள்ளீடற்ற இந்த ஆவிகள்
அவற்றின் பகட்டான உடைகளுடன்
ஜொலிக்கும் பதக்கம் வைத்த நீண்ட சங்கிலிகளுடன்
ஐரோப்பாவின் வாசனைத்திரவியத்தால் மணமூட்டப்பட்ட மூச்சுக்காற்றுடன்
காலத்தின் பிரசங்க பீடத்திலிருந்து ஜால வார்த்தைகளில்
பேசுகின்றன பொய்மையை உண்மையைப் போல.
அவற்றால் என் மனம் புண்படுகிறது:
அவற்றுள் சிறியனவற்றின் பாசாங்கைக் கண்டு மனம் புண்படுகிறேன்.
என்னாலே என் மனம்கூட புண்படுகிறது:
உருவங்களின் பலவீனத்தையும்
அர்த்தத்தின் துணிவையும்
போதுமான அளவுக்கு நான் புரிந்துகொள்ளவேயில்லை.
இன்மையுடன் நான் ஏன் உரையாடல் நிகழ்த்துகிறேன்.
பக்க ஓரத்தில் எழுதும் பிரார்த்தனைகளையும் அடிக்குறிப்புகளையும்போல
சராசரித்தனத்தின் விளிம்பில் என் சொற்களை ஏன் தைக்கிறேன்.
தப்பித்தாக வேண்டும்,
எளிமையை நோக்கி ஓட வேண்டும்,
மேன்மையை மேலே கொண்டுவர வேண்டும்,
சூரியனின் மற்றுமொரு உதாரணமாய் ஆக வேண்டும்,
அன்பே, என்ன சொல்வேன் நான், உனக்கும் கூட, பகல்வெளிச்சத்துக்குப் பதிலாக
மங்கலான குமிழ் மின்விளக்கைத் தேர்ந்துகொள்,
ஆழமான பார்வையைக் கொண்ட நீயும்கூட,
இனி சூரியனின் இன்மையை உணர மாட்டாய்.
- கவிதைகள் ஆங்கிலம் வழி தமிழில்: ஆசை