

தனியார் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இடம்பெற வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டெலாயிட் எல்எல்பி ஆலோசக நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளில் மலேசியாதான் பெண்களை நிர்வாகக் குழுவில் நியமிப்பதில் 13.7 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது. இந்தியா 12.4 சதவீதத்துடன் இரண்டாம் நிலையில் உள்ளது. இந்தியத் தனியார் பெருநிறுவனங்களின் பெண் இயக்குநர்களில் 60 சதவீதத்துக்கும் மேலானோர் நிறுவன உரிமையாளர்களின் உறவினர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பெண் ஊழியரைத் தாக்கிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிந்தானூர் நகராட்சிப் பெண் ஊழியர் பணிக்குத் தாமதமாக வந்ததால் கணினி ஆபரேட்டர் சரணப்பாவால் தாக்கப்பட்டார். அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கேமராவில் சரணப்பா, பெண் ஊழியர் நஸ்ரினை உதைத்துத் தாக்கிய காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் தாக்குதல் தொடர்பாக காவல்துறையில் நஸ்ரின் புகார் அளித்ததையடுத்து சரணப்பா கைது செய்யப்பட்டார். நகராட்சி நிர்வாகம் அவரைப் பணி நீக்கம் செய்துள்ளது. தாக்குதலுக்குள்ளான நஸ்ரின் ரம்ஜான் நோன்பைக் கடைப்பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பாடல்கள் பத்தாயிரம்
புனேயைச் சேர்ந்த கூட்டுறவு சமூக அறிவியல் ஆய்வு மையம், கிராமப்புறப் பெண்கள் கல் அரவையில் மாவரைக்கும்போது பாடும் பாடல்களை ‘கிரைண்ட்மில் சாங்க்ஸ் புராஜெக்ட்’ என்ற பெயரில் 1996-ம் ஆண்டிலிருந்து தொகுத்துவருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 1,107 கிராமங்களைச் சேர்ந்த 3,302 பெண்களின் பாடல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தற்போது பாடல்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை எட்டியுள்ளது. இந்தப் பாடல்கள் அனைத்தும் வேளாண்மை ஊடகவியலாளர் பி. சாய்நாத்தின் ‘பீப்பிள்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியா’வின் இணையதளத்தில் கிடைக்கின்றன. சாதியச் சூழல், அரசியல், புராணம், மதம் ஆகியவை சார்ந்த விஷயங்கள் குறித்த பெண்களின் கருத்து வெளிப்பாடுகளாக இந்தப் பாடல்கள் உள்ளன.
முகநூல் குழுமத்தில் பத்து லட்சம் பெண்கள்
நைஜீரியாவைச் சேர்ந்த லோலா ஓமலோலா உருவாக்கிய ‘ஃபீமேல் இன்’ (Female IN or Fin) என்ற முகநூல் குழுமத்தில் தற்போது பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். ஃபின் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த முகநூல் குழுமத்தில் பெண்கள் தாங்கள் பேச விரும்பும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளலாம். குடும்ப வன்முறை, குழந்தை வன்முறை, பாலியல் வல்லுறவு என இங்கு பகிரப்படும் வாக்குமூலங்கள் ஏராளம்.
பெரும்பாலான பெண் உறுப்பினர்கள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தக் குழுமத்தின் நிறுவனர் ஓமலோலா, ஒரு பத்திரிகையாளர். அமெரிக்காவிலிருந்து 2000-ம் ஆண்டில் நைஜீரியா திரும்பிய இவர், பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசுவதற்காக ஆரம்பித்த முகநூல் குழுமம் இது. இந்த முகநூல் குழுமத்தில் பங்கேற்கும் பெண்கள், வாய்ப்பு கிடைக்கும்போது பொது இடங்களில் சந்தித்துக்கொள்கிறார்கள். லோலா ஓமலோலா ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்த்து வியந்துபோன ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் இவரைச் சந்திக்க விரும்பியது சமீபத்திய ஆச்சரியம்.