இருளென்பது குறைந்த ஒளி

இருளென்பது குறைந்த ஒளி
Updated on
3 min read

ஐடி துறையில் பணி புரிந்த உமா மகேஸ்வரி சமீபத்தில் கொலை செய்யப்பட்ட பிறகு ஒரு கட்சி எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படி ஒரு நிலைத்தகவலை பகிர்ந்திருந்தார்: “பெண்களுக்கு இரவுப் பணிகளை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும். அவர்களது வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இருக்க வேண்டும்.” வலையுலகில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது இந்த நிலைத்தகவல். ஒரு பக்கம் பகல்களில் எந்த ‘தப்பும்’ நடைபெறுவதில்லை என்று நிலைநாட்டுவதுடன் இரவுகளைப் பெண்களின் கைகளிலிருந்து முழுமையாகப் பறித்துவிடும் ஆபத்து இந்தக் கருத்தில் இருக்கிறது.

இந்தக் கருத்து, பரவலாக பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு முறையும் பெண் மீது வன்முறை செலுத்தப்படும்போது உணர முடியும். இரவில் நடமாடும் பெண்கள் அவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளுக்கான கலாச்சார நீதிமன்றங்களில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவார்கள். பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இரவை ஆண்களுக்கான ஒன்றாக மட்டும் மாற்ற எத்தனிக்கும் முயற்சிகளும் அதே வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த முயற்சியை முறியடிக்கவும் இரவைப் பெண்களுக்கான வெளியாக மாற்றவும் ‘இரவை மீட்டெடுப்போம்’ என்கிற கோஷத்துடன் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட இடத்தில் பெண்களையும் ஆண்களையும் திரட்டிப் பேரணி நடத்தினார்கள் சேவ் தமிழ் அமைப்பினர். பிப்ரவரி 28ஆம் தேதி அன்று இரவு நடந்த இந்த ஊர்வலத்தில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் ஆர்வலர்கள் தவிர ஐ.டி. துறையில் பணிபுரியும் ஆண்களும் பெண்களும் கணிசமான அளவில் கலந்துகொண்டது குறிப்பிடத் தகுந்த விஷயம். உமா மகேஸ்வரியின் கொலை நிறைய பேரை அழுத்தமாகப் பாதித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

வெற்று கோஷங்களாக இல்லாமல் சமூகத்தின் எல்லாத் தரப்புப் பெண்களின் சுதந்திரத்தையும் வலியுறுத்தும் உயிர்ப்பான கோஷங்களை எழுப்பிக்கொண்டே எழுத்தாளரும் ஆர்வலருமான ப்ரேமா ரேவதி முன்னெடுக்க, வழக்கமான ஊர்வலமாக இல்லாமல் உமா மகேஸ்வரிக்காகப் பங்கு கொண்ட பல இளைஞர்களை அதையும் தாண்டிச் சிந்திக்க வைத்த ஒரு ஊர்வலமாக அது இருந்தது. உமா மகேஸ்வரியின் நினைவை ஒரு மெழுகுவர்த்தியாக ஏந்தி நடந்த இளைஞர்கள் இரவு குறித்த அச்சத்தை வேரறுக்கும் தீப்பந்தமாகவும் அதை உயர்த்திப் பிடித்தார்கள். சேவ்தமிழ்ஸ் அமைப்பைச் சேர்ந்த பரிமளா, தமிழ் மக்கள் கட்சியைச் சேர்ந்த செல்வி ஆகியோர் கூடியிருந்தவர்களிடையே பேசினார்கள்.

ஒரு பரபரப்பான சாலையில் பரபரப்பான நேரத்தில் நடந்த அந்த ஊர்வலம் கலந்துகொண்டவர்களுக்கானதாக மட்டுமல்லாமல், அந்த வழியில் பயணித்தவர்களில் பெரும்பாலானவர்களையும் ஒரு நொடியாவது சிந்திக்க வைத்திருக்கும் என்பதே அதன் வெற்றி.

பொதுவெளியில் இருந்து துரத்திவிடாதீர்கள் - கீதா நாராயணன்

சில விமரிசனஙகளைப் பார்த்துத் தவிர்க்க முடியாமல் எழுதுகிறேன். முன்பு போல் செவிலியர்கள், மருத்துவர்கள், காவலர்கள் என்று சில துறைகள் சார்ந்த பெண்கள் மட்டும் இரவு நேரத்தில் நேரம் சென்று வீடு திரும்புவதில்லை. அனைத்துப் பெண்களும், ஒருங்கிணைக்கப்படாத துறையையும் சேர்த்து, 6 மணிக்கு வீடு திரும்ப முடியாதவர்கள்தான். அனைத்துப் பெண்களும் பணி நிமித்தம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்தான்.

தெரியாத ஊர்களுக்கு இரவு நேரங்களில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம், ஹோட்டல்களில் தனியாகத் தங்க வேண்டிய கட்டாயம் என் வாழ்வில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அப்போதெல்லாம் சொல்லிலும் செயலிலும் சந்தித்த ஆண் ஏதேச்சதிகாரத்தைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையே எழுதலாம்.

சில கடமைகளைத் தவிர்க்க முடியாது. “Oh these women are too fussy” என்று எள்ளி நகையாடுவதற்கு எல்லா நிறுவனங்களிலும் ஆட்கள் உண்டு. உங்கள் உழைப்பை, திறமையை ஒற்றை வார்த்தையில் உதறிவிடுவார்கள். இப்போதுதான் வீடு தாண்டி ஒரு உலகத்தில் பிரவேசித்திருக்கிறோம். மறுபடி பெண் பாதுகாப்பு என்ற பெயரில் எங்களைப் பொதுவெளியில் இருந்து துரத்திவிடாதீர்கள். வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்று கூட்டு வன்புணர்வு செய்த நாடுதான் இது. கால்களுக்கிடையே ரத்தம் வழியக் கிடந்த அந்தக் குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்தும் பெண்ணின் உடை, பெண் இரவு நேரத்தில் வெளியே செல்வது தவறு என்று வியாக்கியானம் பேசுபவர்களை என்ன செய்வது?

பணியிடப் பாதுகாப்புச் சட்டங்கள், பாலியல் வன்முறைச் சட்டங்கள், அலுவலகப் போக்குவரத்து வசதிகள், ஒருங்கிணைக்கப்படாத துறை சார்ந்த பெண்களுக்கான பாதுகாப்பு தவிர, வெறும் பாலியல் பண்டமாக பெண்கள் பார்க்கப்படாமலிருப்பதற்கு ஊடகம் மற்றும் கல்வித்துறைக்குப் பெரும் பங்கு உண்டு. இதையெல்லாம் தாண்டி, இது என் சமூகம். இதை நான் நம்பலாம் என்ற உணர்வை ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்க வேண்டிய கடமை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உண்டு. இல்லையா? - https://www.facebook.com/geetha.narayanan.980

இரவு வாழ்க்கையின் இன்பம்- குட்டி ரேவதி

‘இரவு வாழ்க்கை' என்பதுதான் பெண்களுக்கு ஓர் அற்புதமான வரமாக இருக்க முடியும். பல நாட்கள், இரவு ஒரு மணிக்கு மேல் நண்பர்களுடன் கிளம்பி, இரவுச் சென்னையை ஒரு வலம் பார்த்து வரும் வழக்கம் உண்டு.

நகர் காட்டும் பகலின் அவல முகத்தை இரவின் மர்மங்களும், அமைதியும் கொண்டு தான் கழுவ முடியும். அப்படியான ஓர் அழகைக் காட்டும், சென்னையின் இரவு.

பல ஆசைகள் உண்டு. இரவில் தோழியர் சேர்ந்து கவிதை வாசித்துவிட்டு, அவர்களுடன் காலாற சாலை மருங்கில் நடந்து வீடு சென்று சேருவது, விடிய விடிய வேலை செய்வது, பின் இசை கேட்டபடி அப்படியே உறங்கிப் போவது என்று வாழ்வது என்று இருந்தால் அது ஈடி இணையில்லாத ஓர் இரவாகத்தான் இருக்கும்.

ஒருமுகப்பட்டு எழுதவும், புலன்களின் திசைகளை அறிந்து கூர்மை காணவும் இரவை விட்டால் வேறு வழியில்லை.

இரவின் சுவையை, முழுமையாக ருசித்தது, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுடன் வேலை புரியும் நாட்களில்தான். நடுநிசியில் வேலை தொடங்கி அதிகாலையில் உற்சாகம் கொந்தளிக்க இயங்கிக்கொண்டிருக்கையில் நினைத்த வேலைகள் எல்லாம் சாத்தியமாகியிருக்கும். பொழுது புலரும்போது, இந்தப் பூமி சத்தியமாய் அலுக்காத ஓர் இடமாகி இருக்கும். காலை ஏழு மணி போல் கண் மங்கலாகித் தூக்கம் செருகும். அப்பொழுது வீடு சென்று, உறங்க சுகமாக இருக்கும். ஒரு பொழுதும் மண்ணுலகத்தில் இருந்த உணர்வே இருந்ததில்லை. படைப்பாற்றலின் ஊக்கம் தரும் களிப்பு, தூக்கத்தை உடலிலிருந்து எட்ட நிறுத்தும்.

எனக்கு அது என்றென்றும் வாய்க்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்காக தினந்தோறும் முயல்கிறேன். என் இல்லா இரவுகளையும் நான் மட்டுமே அபகரித்துக்கொள்ள விரும்புகிறேன். அது எத்தகையதோர் அருமையான உணர்வு என்று அறிய, எல்லாப் பெண்களுக்கும்கூட அது வாய்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில், இரவு வாழ்க்கையின் இன்பம், அது சொல்லி மாளாதது. எழுதித் தீராதது.

இரவு என்பது, வீட்டிலும் வெளியிலும் பெண் ஆணுக்கு இடையே சிக்கலை ஏற்படுத்தாத ஒரு பொழுதாக, வெளியாக இருந்தால் தான், இந்த உலகம் எத்தகைய அருமையான, அழிவில்லாத வாழ்வனுபவம் மிக்க இடமாக இருக்கும்!

ஆனால், நாம் எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்கள்! - https://www.facebook.com/kutti.revathi.1?fref=t

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in