

குழந்தைப் பருவத்தில் இருந்தே தாழ்வு மனப்பான்மையோடு வளர்ந்தவள் நான். யாரையும் நிமிர்ந்து பார்க்கவும், முகம் பார்த்து நாலு வார்த்தை பேசவும் முடியாமல் அச்சமும் கூச்சமும் நிறைந்த பெண்ணாகவே வளர்ந்தேன். சிறு வயதிலேயே திருமணமாகிப் புகுந்த வீடு வந்த போதும் எனது பயந்த சுபாவம் மாறவில்லை. இதனால் நான் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், அவற்றைப் பற்றி என் கணவரிடம்கூட மனம் திறந்து பேசும் தைரியம் இல்லாமல் காலம் கடந்தது.
எனது இந்தத் தனிமையும் ஒதுங்கலும் என் கணவரை யோசிக்கவைத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏதாவது செய்து என்னை மாற்ற விரும்பினார் போல. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த என்னைக் கோயில், சினிமா, உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகள் என்று அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். அப்படிச் செல்லும் போது நான் நன்றாக உடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார். அதை நான் ஆடம்பரம், நம் சக்திக்கு மீறியது என்று நினைத்தேன். வெளியில் செல்லும்போது கொஞ்சம் நல்ல புடவைகளை அணிவது ஆடம்பரம் அல்ல, என்று எனக்குப் புரியவைத்தார். தோற்றம் முக்கியம் என்பார்.
கைவேலைகள் கற்றுக்கொள்ளச் செய்தார்.. நான் ஓவியம் வரைவதோடு கவிதை, கதை என்று எதையாவது எழுதிக்கொண்டே இருப்பதைப் பார்த்து என்னை உற்சாகப்படுத்தினார். நான் எழுதியவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்பச் செல்வார்.
எனது பல படைப்புகள் பத்திரிகைகளில் பிரசுரமாயிருக்கின்றன. அதற்காகப் பரிசுகளையும் வென்றிருக்கிறேன். எனது சமையல் ஆர்வத்தைப் புரிந்துகொண்டவர், பத்திரிகைகளுக்கு சமையல் குறிப்புகள் எழுதி அனுப்பச் சொன்னார். பல சமையல் போட்டிகளில் கலந்துகொள்ளவும், பரிசுகள் பெறவும் எனக்கு உதவிக்கொண்டும், உற்சாகப்படுத்திக்கொண்டும் இருக்கிறார்.
தாழ்வு மனப்பான்மையில் குறுகிக் கிடந்த நான் இன்று நிமிர்ந்து நிற்கிறேன், எனது கணவரது அன்பினால்.
- லலிதா சண்முகம், திருச்சி.
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |