

உலக வரலாற்றில் பெண்களுடைய இருப்பு பெரும்பாலும் போராட்டங்களாலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அடிப்படை உரிமைகளைக்கூடப் பெண்கள் போராடிப் பெற வேண்டிய நிலை இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போராட்டம், அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு எதிரான பேரணி, இந்தியாவில் நடைபெற்ற ‘ஐ வில் கோ அவுட்’ பேரணி ஆகிய மூன்று போராட்டங்களும் பெண்களின் போராட்ட உணர்வு வேறு தளத்துக்குச் சென்றிருப்பதை உணர்த்தியிருக்கின்றன.
பெண்களுக்கு எதிரான குரல்
கடந்த ஜனவரி 21-ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்புக்கு எதிராக உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பேரணியில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டனர். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்களைப் பற்றி ட்ரம்ப் தெரிவித்த கருத்துகள், பெரும் சர்ச்சைகளை உருவாக்கி யிருந்தன. இதுபோன்ற கருத்துகளால் அவர் பெண் வாக்காளர்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றார்.
சிஸ்டர் மார்ச்
ட்ரம்பின் இந்த வெற்றியைக் கொண்டாடப் பெரும்பாலான அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. அதிலும், குறிப்பாகப் பெண்கள். அதனால், அவர் அதிபராகப் பதவியேற்ற நாளில் அதை எதிர்க்கும் விதமாக பெண்கள் பேரணி தலைநகர் வாஷிங்கடனில் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும்விதத்தில், ‘சிஸ்டர் மார்ச்’என்ற அமைப்பினர் உலகம் முழுவதும் 670 இடங்களில் அதே மாதிரியான பேரணிகளை ஒருங்கிணைத்திருந்தனர். பாரிஸ், பெர்லின், சிட்னி உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களிலிருந்து சுமார் 46 லட்சம் பெண்கள் இந்தப் பேரணிகளில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கிறது இந்த அமைப்பு.
‘பெண்களின் உரிமைகளும் மனித உரிமைதான்’, ‘என் உடல் என் உரிமை’ போன்ற வாசகங்களுடன் இந்தப் பேரணி களில் பெண்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையிலோ, அமெரிக்காவின் பன்முகத்தன்மையைப் பாதிக்கும் வகையிலோ ட்ரம்ப்பின் செயல்பாடுகள் இருப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று உலகப் பெண்கள் இந்தப் பேரணிமூலம் எச்சரித்திருக்கின்றனர்.
நான் வெளியே போவேன்
பெங்களூரு நகரில் புத்தாண்டு இரவில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறலைக் கண்டித்து ‘ஐ வில் கோ அவுட்’ (#Iwillgoout) என்ற பேரணி இந்தியாவின் முப்பது நகரங்களில் நடைபெற்றது. ஜனவரி 21-ம் தேதி, டெல்லி, மும்பை, ஹைதராபாத், நாக்பூர், ராஞ்சி, திருச்சூர், போபால் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.
சமூக ஊடகங்களில் ஒருங்கிணைக்கப் பட்ட ‘நான் வெளியே போவேன்’என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்தப் பேரணி நடைபெற்றது. பெங்களூரு நிகழ்வைப் பற்றி கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு ஆஸ்மி, “பெண்கள் சூரிய அஸ்தமனத்துக்குப்பிறகு, வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது” என்று சொல்லி யிருந்தார். இது மாதிரி கருத்துகளை எதிர்க்கும் விதமாக, இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பெண்கள் பகலும் நமதே, இரவும் நமதே, இரவை ஆக்கிரமியுங்கள், அமைதியை உடையுங்கள், வன்முறையை நிறுத்துங்கள் போன்ற வாசகங்களுடன் பங்கேற்றனர். பெண்களுக்குப் பொதுவெளியில் எந்த நேரத்திலும் புழங்குவதற்கு உரிமையிருக்கிறது என்பதை இந்தப் பேரணி வலியுறுத்தியிருக்கிறது.
போராட்ட வெளியில் பாதுகாப்பு
ஜனவரி 17-ம் தேதியிலிருந்து 23-ம் தேதிவரை தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். முதல் ஆறு நாட்கள் அறவழியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பகல்-இரவு பார்க்காமல் பெண்கள் பங்கெடுத்தனர். அன்றாடம் பொதுவெளியில் சந்திக்கும் எந்தவிதமான பாலியல் சீண்டகளையும் இந்தப் போராட்டக் களத்தில் பெண்கள் சந்திக்கவில்லை. இந்த அம்சம் போராட்ட வெளியில் நிலைபெற்றிருந்த பாலின சமத்துவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது.
போராடுவதற்கு ஆண்-பெண் வித்தியாசமெல்லாம் தேவையில்லை என்பதற்கு முன்மாதிரியாக இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் திகழ்ந்தது. போராட்டத்தின் கடைசிநாள் காவல்துறை தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தது. அப்போது நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், ரூதர்புரத்தைச் சேர்ந்த பெண்கள், மாணவர்களுக்கு அரணாக நின்று அவர்களைக் காப்பதில் காட்டிய உறுதி, பெண்களின் போராட்ட குணத்துக்குச் சான்று!
தங்களுக்கு அநீதி நேரும்போதெல்லாம் பெண்கள் அவற்றைத் தட்டிக் கேட்கவும் தங்கள் எதிர்ப்பைக் காட்டவும் போராடத் தயங்குவதில்லை என்பதை இந்தப் போராட்டங்கள் நிரூபித்திருக்கின்றன.