தீபிகா படுகோனின் ஓயாத விளையாட்டு!

தீபிகா படுகோனின் ஓயாத விளையாட்டு!
Updated on
1 min read

விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், நைக் நிறுவனம் தயாரித்த ‘டா டா டிங்’ (Da Da Ding) வீடியோவில் தீபிகா படுகோன் பேட்மிண்டன் விளையாடுபவராகத் தோன்றியுள்ளார். இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் விளையாட்டு வீரர் ப்ரகாஷ் படுகோனின் மகள்தான் தீபிகா படுகோன். இந்த வீடியோவில் பங்கேற்றது குறித்து தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார் தீபிகா. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது, விளையாட்டு மூலமே அதிலிருந்து மீண்டதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

“ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தளராத உறுதி மூன்றும்தான் ஒரு மனிதனை சிறந்தவனாக்கும் என்று என் அப்பா சொல்வார். எதன் மீது தீராத ஆர்வம் இருக்கிறதோ அதைச் செய், இதயம் சொல்வதைக் கேள் என்பதுதான் அவரது தாரக மந்திரம்.

விளையாட்டுதான் எனக்கு ஏற்படும் தோல்விகளைக் கையாள்வதற்குக் கற்றுத் தந்தது. வெற்றியைக் கையாள்வதற்கும் அதுதான் சொல்லித் தந்தது. வெற்றியைத் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இயல்பாக இருப்பதற்குக் காரணம் விளையாட்டுதான்.

இரண்டாண்டுகளுக்கு முன், நான் மன அழுத்தத்துடன் போராடிக்கொண்டிருந்தேன். நான் கிட்டத்தட்ட ஓய்ந்துவிட்டேன். ஆனால் எனக்குள் இருந்த தடகள வீராங்கனைதான், வீழ்ந்துவிடாமல் போராடும் பலத்தை எனக்குத் தந்து என்னை மீட்டாள். அதனால் பெண்கள் ஆண்கள் எல்லாரும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். ஏனெனில் விளையாட்டு என் வாழ்க்கையை மாற்றியது. உங்களது வாழ்வையும் மாற்றும்.

உயிர் தரிப்பது எப்படி என்பதை எனக்கு விளையாட்டுதான் கற்றுத் தந்தது. போராடுவதை விளையாட்டுதான் கற்றுக்கொடுத்தது. ஒருபோதும் என்னைத் தடுத்துவைக்க முடியாதவளாக ஆக்கியதும் விளையாட்டுதான்” என்று தீபிகா படுகோன் தனது முகநூலில் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்துக் கூறியுள்ளார்.

‘டா டா டிங்’ மியூசிக் வீடியோவில் தீபிகா படுகோனுடன் இந்திய ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால், கால்பந்தாட்ட வீராங்கனை ஜோதி ஆன் பர்ரட் உள்ளிட்ட இந்திய விளையாட்டு வீராங்கனைகள் நடித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in