வானவில் பெண்கள்: நெருக்கடியால் கிடைத்த புது வாழ்வு
வாழ்க்கையில் நெருக்கடிகள் எழும்போது அதை சவாலாக எதிர்கொள்பவர்கள் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதோடு, அதில் கிட்டும் அனுபவங்களையே தங்கள் வருங்கால வாழ்க்கைக்கான பாதையாகவும் படிப்பினையாகவும் மாற்றிக்கொள்கிறார்கள். கரூரைச் சேர்ந்த இல்லத்தரசி வெங்கடலஷ்மியின் வாழ்க்கையும் அப்படியான அனுபவங்களில்தான் புடம் போட்டிருக்கிறது. அதைப் பற்றி அவரே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
கலைந்த இரட்டைக் கனவால் இருண்ட வாழ்க்கை
“சென்னை எனக்கு பூர்வீகம். பட்டப் படிப்பு, தங்கைகளுடன் விளையாட்டு, கோடைப் பயிற்சியாக ஒருசில கைவினைப்பொருட்கள் தயாரிப்பைக் கற்றுக்கொண்டது ஆகியவற்றைத் தவிர்த்து வெளியுலகம் தெரியாது. பெற்றோர் பார்த்து வைத்த திருமணத்தில் குறை சொல்ல முடியாத அளவில் புகுந்த வீட்டு உறவுகள் கிடைத்தன. கணவருக்கு கரூர் அருகே புகளூர் தனியார் நிறுவனத்தில் பணி. அங்கேயே நிறுவனம் ஒதுக்கிய குடியிருப்பில் எங்கள் இல்வாழ்க்கை தொடங்கியது. நகரச் சந்தடி இல்லாததும், அருகில் போதுமான குடித்தனங்கள் இல்லாத தனிமையும் சற்று ஏமாற்றமாக இருந்தது. அப்போது நான் கருவுற்றதால் எனக்குத் துணையாகப் புதிய உயிரைக் கடவுள் அனுப்பியதாக மகிழ்ந்தேன். அதுவும் இரட்டை குழந்தைகள் என தெரிய வந்ததும் மகிழ்ச்சியும் இரட்டிப்பானது. இலகுவாய் சென்ற வாழ்க்கையில் இடி விழுந்தாற்போல அந்த சம்பவம் நடந்தது. ஆறு மாத அளவில் வளர்ந்திருந்த இரண்டு சிசுக்களும் மருத்துவர் ஒருவரின் அலட்சியத்தால் பரிதாபமாய் வயிற்றிலேயே இறந்தன. எங்களது முதல் திருமண நாளன்று ஒரு கொடூர நிகழ்வாக, சிசுவில் ஒன்று என் கண் முன்பாகவே கழிவறை குழியில் நழுவி விழுந்தது. கடவுளாக நம்பிய மருத்துவரின் கழுத்தறுப்பும், என் வாழ்வின் வரமாக நான் காத்திருந்த இரட்டையர் இறப்பும் என்னைச் சாய்த்துப் போட்டன.
மடை மாற்றிய கணவர்
குடும்பத்தாரால் எனது வேதனையை உணர முடிந்தாலும், அதிலிருந்து என்னை மீட்க முடியவில்லை. அதிலும் அலுவலகக் குடியிருப்பு இருந்த இடமும், அங்கே கணவரைப் பணிக்கு அனுப்பிவிட்டுத் தனிமையில் நான் முடங்கியதும் என் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்த நேரத்தில் சமயோசிதமாய் எனது கணவர் சில வேலைகளைச் செய்தார். கல்லூரிப் பருவத்தில் நான் கற்றிருந்த கைவினைப்பொருள் பயிற்சியைக் கொண்டு வீட்டில் ஓவியங்கள், பொம்மைகள், அலங்காரங்கள் செய்து வைத்திருந்தேன். அந்த வகையில் எனது ஈடுபாட்டை அறிந்திருந்த அவர் நைச்சியமாய்ப் பேசி அவற்றின் பக்கம் எனது கவனத்தை மடைமாற்றினார்.
எனக்கும் ஏதோ ஒரு தப்பித்தல் உணர்வு தேவைப்பட்டதால், மன அழுத்தத்துக்கு மாற்றாக அந்த கலைகளுக்குள் மூழ்கிக் கரைந்து போக ஆரம்பித்தேன். ஓவியம் மட்டுமல்லாது பொம்மைகள் செய்தல், கிளாஸ் பெயிண்டிங், உள்ளலங்காரக் கலை, செயற்கை ஆபரணங்கள் தயாரிப்பு என்று வழிபாட்டில் சரணாகதி அடைவது போல கலைகளுக்குள் அடைக்கலமானேன். அவை என்னை மீட்டு ஆற்றுப்படுத்தின. அருகில் இருந்த பள்ளிகளில் மாணவர்களுக்கான கலைப் பயிற்சிப் பயிலரங்கங்களுக்கு அழைத்தார்கள். இல்லத்தரசிகள் எங்கிருந்தோ விசாரித்து வந்து பயிற்சி பெற்றார்கள். இதனையடுத்து கரூர் நகருக்குக் குடிபெயர்ந்தோம். வளரும் நகரான கரூரில் கலைப்பொருள் பயிற்சியாளருக்கான வெற்றிடத்தை உணர்ந்து என்னை அதற்குத் தயார் செய்துகொள்ள ஆரம்பித்தேன்.
தேடித்தேடிக் கற்றேன்
ஒரு ஆறுதலுக்காகவும் பிடிப்புக்காகவும் கலைப்பொருள் உருவாக்கத்தில் இறங்கிய எனக்கு, பிற்பாடு அதுவே உலகமாகிப்போனது. கணவர் மற்றும் உறவினர்களின் ஆதரவும், அடுத்தடுத்துப் பிறந்த மகள்களின் முகங்களும் பழைய சோகங்களை ஆற்றின. ஆனால், அப்போதைய நெருக்கடி மனநிலையும் அதிலிருந்து மீள்வதற்கான போராட்டங்களும் வாழ்க்கையில் அதுவரை கிட்டாத அனுபவங்களைத் தந்தன. ஒருபுறம் எனது படைப்புகளை மார்க்கெட்டிங் செய்தவாறே, மறுபுறம் பயிற்சிக்கு வந்த பெண்களுக்கும் முழு மனதோடு கற்றுத்தர ஆரம்பித்தேன். ‘உன்னிடம் கற்றுக்கொண்ட பெண்கள் களமிறங்கினால் உனது வருமானம் போய்விடாதா?’ என்று பலரும் கேட்டார்கள். எனக்கு ஏனோ அப்படி தோன்றவில்லை. அந்த இல்லத்தரசிகள் பின்னாலும் நான் கடந்துவந்தது போன்று ஒரு நெருக்கடியோ வேதனைச் சூழலோ இருக்குமே என்ற பரிதவிப்பில் மேலும் பரிவோடு பயிற்சிகளைத் தந்தேன். கலைப் படைப்புகளைப் பொறுத்தவரை தனித்திறமை தரும் முத்திரைகளுக்கு முன்னால் போட்டிகள் எடுபடாது என்ற தன்னம்பிக்கையையும் பக்குவத்தையும் அப்போது அடைந்திருந்தேன். மேலும், புதிதாகக் கற்றுக்கொள்வதையும் நான் நிறுத்தவில்லை. சில தனிப்பட்ட பயிற்சிகளுக்காக மும்பை, கொச்சி எனப் பல ஊர்களுக்கு சென்று வந்தேன். அதே போல பயிற்சிகள் அளிப்பதற்காகப் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்றேன். எனது குடும்பம் எனக்குத் துணைநின்றது.
தொட்டவை துலங்கின
கரூரில் கைவினைப் பயிற்சிகள் அளிப்பதற்காக ஒரு பயிற்சி நிலையம் ஆரம்பித்தேன். அது அளித்த உந்துதலில் சற்றே அகலக்காலாய், பங்குதாரர்கள் சேர்ந்து காபி ஷாப் ஆரம்பித்தோம். அந்தத் தொழிலில் எனது தனித்துவத்துக்கு இடமில்லாததால் இடையில் விலக வேண்டியதானது. ரூ. 5 லட்சம் வரை இழப்பு. குடும்பச் சூழலையும் மீறி எனக்காகக் கணவர் புரட்டிய தொகை போச்சு என்பதைவிட, என் திறமை மீது குடும்பத்தினர் வைத்திருந்த நம்பிக்கையில் அடி விழுந்ததாகத் தோன்றியது. இழந்த அவை இரண்டையும் மீட்பதற்காகப் புதிய பயிற்சி வகுப்புகளையும், தொழில் முயற்சிகளையும் மேற்கொண்டேன். அதில் ஒன்றாகத் திருமணம், வரவேற்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளின் சடங்கு வைபவங்களை அர்த்தமுள்ளதாகவும் முழுமையானதாகவும் மாற்றும் ஏற்பாடுகளில் இறங்கினேன். வரவேற்பு மேஜை, சீர்தட்டு, ஆரத்தித் தட்டு, சாக்கலேட், பீடா என்று தொடங்கி எத்தனை சிறிய பணியாக இருந்தாலும் பரிசோதனை முயற்சியாய் அவற்றிலும் படைப்புத் திறனைப் பரிசீலித்து பார்ப்பேன். சின்னச் சின்ன வேலைகளிலும் பல்வேறு நகாசுகள் மூலம் அவற்றுக்கு நியாயம் சேர்ப்போம். இவற்றால் எந்திரத்தனமான சடங்குகளுக்கு ஆன்மா கிடைக்க, அந்த நிகழ்வின் சூழலே மாறிவிடும். வாழ்த்தும், வாய்மொழிப் பரிந்துரையுமாக எனக்கான ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன. திருமணத்துக்கு முன்போ அதன் பின்னரோ சுயமாக சம்பாதிப்பது பற்றி யோசித்திராத எனக்கு இப்போது எனது நேரத்தைக் கொண்டு வருமானத்தைத் தீர்மானிக்க முடிகிறது. 5 பெண்களுக்கு வேலை கொடுக்க முடிந்திருக்கிறது. உபரி வருமானத்தால் எனது குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சிகள், நடனம் போன்றவற்றைக் கற்றுத்தர முடிகிறது.
இப்போதும் கழிவறையைக் கடக்கும்போதெல்லாம், முதுகு சில்லிட, அடிவயிற்றைப் பிசையும். இந்த பூமியையும் அதில் தங்களது தாயையும் பார்க்கும் முன்னரே இறந்துப்போன அந்த இரட்டையர்கள் எனது படைப்புகளில் உயிர் பெறுவதாக நம்புகிறேன். அவர்களுடன் தொடங்கிய குழந்தைகள் குறித்த எனது கனவுகள், அவர்களுக்கான கற்றுத்தரும் ஆசைகள் ஆகியவற்றுக்காகத் தற்போது தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்தவாறே புதிதாக ஒரு பள்ளி தொடங்கி நிர்வகிக்கும் ஏற்பாடுகளில் முனைப்பாக இருக்கிறேன்” என்று முடித்தார் வெங்கடலஷ்மி. இரவு பகல் பாராது வீடு முழுக்கக் கலைப் படைப்புகளுடன் இயங்கிவரும் வெங்கடலெஷ்மிக்கு, அவரது கணவர் பிரபாகரனும், மகள்களான 9-ம் வகுப்பு படிக்கும் அக்ஷயா, 4-ம் வகுப்பு படிக்கும் அம்ருதா ஆகியோர் உறுதுணை புரிகின்றனர்.”
