Published : 08 Jan 2017 03:37 PM
Last Updated : 08 Jan 2017 03:37 PM

திரைக்குப் பின்னால்: சோதனையைக் கடந்தால் சாதனை

திரைப்படங்களுக்கு டப்பிங் பேசுவது விலாசினியின் அடையாளமாக இருந்துவந்தது. சமீபகாலமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பணிகளிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்புத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

மற்றவர்கள் செய்யும் நிகழ்ச்சி ஒருங் கிணைப்பைப் பார்த்துதான் அதைப் பற்றித் தெரிந்துகொண்டேன். எனக்கு இருக்கும் தொடர்புகள் மூலம் வரும் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்டவற்றைத் தொகுத்து வழங்கிவருகிறேன். கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு நடிகர்களைத் தேர்வுசெய்து அனுப்புவது உள்ளிட்டவற்றையும் செய்துவருகிறேன். எனக்கு நெருக்கமான நடிகைகளுக்கு ஆடைகள் வடிவமைப்புச் செய்துகொடுக்கும் எண்ணமும் இருக்கிறது. அதற்காகப் படித்துவருகிறேன்.

‘எனக்குள் ஒருவன்’ இசை வெளியீட்டு விழா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் 100-வது நாள் விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். இசை விழாக்களைத் தொகுத்து வழங்குவதில் ஆர்வம் அதிகம்.

திரையுலகில் பாடகியாக வேண்டும் என்றுதானே வந்தீர்கள்?

உண்மைதான். பலரிடமும் வாய்ப்பு கேட்டுவிட்டேன். கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கிடைக்கிற வாய்ப்புகளை ஏற்று நிகழ்ச்சி தொகுப்பு செய்துவருகிறேன். என் நண்பர்களுக்கு மட்டும் நான் எப்படிப் பாடுவேன் என்று தெரியும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவும் முயற்சி செய்துவருகிறேன்.

போட்டிகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

சோதனைகளைக் கடந்தால் மட்டுமே சாதனை. சோதனை வந்துவிட்டதே என்று நான் எப்போதும் சோர்ந்து போனதில்லை, அதை எப்படிக் கையாள்வது என்றுதான் சிந்திப்பேன்.

மண வாழ்க்கை எப்படி இருக்கிறது?

முழுமையாக ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொண்டுதான் திருமணம் செய்து கொண்டோம். நிகழ்ச்சிகளுக்கு இந்த மாதிரி உடையணிந்து செல் என்று ஆலோசனை சொல்வார். புதிதாக ஏதாவது செய் என்று ஊக்குவிப்பார். வாழ்க்கை இனிமையாக செல்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x