

நான் சிறுமியாக இருந்தபோதே என் அப்பா மறைந்து விட்டார். அப்பா இல்லையே என்ற ஏக்கத்தைத் தன் அன்பால் தீர்த்தார் என் கணவர். பாசமிகு அப்பாவாகவும் உயிர்த் தோழனாகவும் இருந்து என் வளர்ச்சிக்கு உரமூட்டுகிறார். நான் அரசு உதவிபெறும் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். இதற்கும் என் கணவரே காரணம்.
திருமணத்துக்குப் பிறகு என் கணவரின் ஒத்துழைப்போடு நான் முனைவர் பட்டம் பெற்றேன். கல்லூரிப் பேராசிரியர் ஆவதுதான் என் லட்சியம் என்பதைத் தெரிந்துகொண்டவர், அதை நான் எட்ட வேண்டும் என்பதற்காகத் தனது தொழில்களில்கூட முழு கவனம் செலுத்தாமல் எனக்கு உறுதுணையாக இருந்தார். ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, மனம் தளரவிடாமல் எனது சாதனைக்குக் கைகொடுக்கிறார்.
நம் மனைவியின் லட்சியம்தான் நிறைவேறிவிட்டதே என்று ஒதுங்கிக்கொள்ளாமல் எனது பணி மேம்படுவதற்கான ஆலோசனைகளையும் சொல்வார்.
என் வெற்றிக்குப் பின்னால் மறைந்துள்ள பொக்கிஷம் அவர். குடத்துக்குள் இருந்த விளக்காக இருந்த என்னை குன்றின் மேல் இட்ட விளக்காக மாற்றிப் பிரகாசிக்கச் செய்த அன்பு அவருடையது!
- ரேவதி பழனிச்சாமி, ஈரோடு.
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |