முகம் நூறு: எதைச் சாப்பிடுவது என்பது என் உரிமை

முகம் நூறு: எதைச் சாப்பிடுவது என்பது என் உரிமை
Updated on
3 min read

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்து மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து வட மாநிலங்களிலும் தெற்கே கேரளத்திலும் பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப், டிவிட்டர் ஆகியவற்றில் மத்திய அரசின் தடைக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்ய, மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, பொது நல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அவர் தாக்கல் செய்த மனுவில், “இந்தத் தடை உத்தரவு தொடர்பாக மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் இல்லை. மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்தவும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மனு மீதான விசாரணையின் முடிவில், மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

வாசிப்பால் விரிந்த சிறகு

தனி மனித உரிமை நசுக்கப்படுகிறபோது தன் எதிர்ப்பைச் சொல்லோடு நிறுத்திக்கொள்ளாமல், அதற்குச் செயல் வடிவம் கொடுத்திருக்கிறார் செல்வகோமதி. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைச் செயல்பாட்டாளராக அறியப்பட்டுவருகிறார். மக்கள் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் வங்கிப் பணி காரணமாகத் தமிழகத்தின் பல ஊர்களிலும் வசிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. வீட்டில் மூன்று பெண்கள். ஆனால், மூன்றுமே பெண்ணாகப் பிறந்துவிட்டதே என்ற பேச்சு ஒரு நாளும் அவர்கள் வீட்டில் எழுந்ததே இல்லை.

“எங்க அப்பாவும் அம்மாவும்தான் அதுக்குக் காரணம். எங்களை சுதந்திரமா வளர்த்தாங்க. யாரு தப்பு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கிற உரிமை எங்களுக்கு இருந்தது” என்று சொல்லும் செல்வகோமதிக்குச் சிறு வயது முதலே வாசிக்கும் பழக்கம் இருந்தது. மூன்றாம் வகுப்பு படித்தபோது கதைப் புத்தகம் படித்ததற்காக அத்தையிடம் திட்டு வாங்கியதைப் புன்னகையோடு நினைவுகூர்கிறார். ஆனால், செல்வகோமதியின் வீட்டில் படிப்புக்கு ஒரு போதும் தடையிருந்ததில்லை. வாசிப்பின் வாசல் விசாலமாக, அறிவும் சிந்தனையும் முதிர்ச்சியடைந்தன.

“காந்தியின் சத்திய சோதனையைப் படிச்சப்போ, அவர் சட்டம் படிச்சதாலதான் அவ்வளவு உறுதியா அறப்போராட்டம் நடத்த முடிஞ்சுதுன்னு தோணுச்சு. அதனால எனக்கும் சட்டப் படிப்பின் மேல ஆர்வம் வந்தது” என்று சொல்லும் செல்வகோமதி, சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். படித்து முடித்ததும் வழக்கறிஞராகப்

பயிற்சியைத் தொடங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு நிகழ்வு, அவரது வாழ்வின் திசையை மாற்றியது.

திசை மாற்றிய மீட்புப் பணி

நீதியரசர் கிருஷ்ணய்யர் புரவலராக இருந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் (Society for community organisation Trust) அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. எளியவர்களுக்குச் சட்ட உதவி வழங்குவதும் அந்த நிறுவனப் பணிகளில் ஒன்று என்பதால் செல்வகோமதி விருப்பத்துடன் அதில் இணைந்தார். அப்போது திருவேங்கடம் பகுதியில் ஒரு செங்கல் சூளையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக இருக்கும் தகவல் கிடைத்து, அவர்களை மீட்பதற்காகத் தொண்டு நிறுவனம் சார்பில் தன்னார்வலர்கள் கிளம்பினார்கள்.

“பிரச்சினை சிக்கல் நிறைந்தது என்பதால் என்னை வர வேண்டாம் என்றனர். ஆனால், நான் ஆர்வத்தோடு கிளம்பினேன். கர்ப்பிணிப் பெண்ணை இரும்புச் சங்கிலியால் கட்டிப்போட்டிருப்பதாகச் சொன்னார்கள். எட்டு வயது சிறுவனைக்கூட கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கினார்கள். அன்று காலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணிவரை இடைவிடாத பணி. அவர்களை மீட்டு விடுவித்தபோது, ‘இப்போதான் நாங்க சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம்’னு சொன்னாங்க. அந்த வாழ்த்துதான் என்னைத் தொடர்ந்து அந்த அறக்கட்டளையிலேயே இருக்க வைத்தது” என்று இருபது ஆண்டுகளுக்கு முந்தைய கதையைச் செல்வகோமதி பகிர்ந்துகொண்டார். அந்த அறக்கட்டளையில் உதவி செயலராகச் சேர்ந்த செல்வகோமதி தற்போது துணை இயக்குநராக உயர்ந்திருக்கிறார்.

தொண்ணூறுகளின் இறுதியில் குடும்ப வன்முறை குறித்த சட்ட வரைவு வெளியான போது அதன் சாதக, பாதகங்களை அறிந்துகொள்வதிலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டார். ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவது, கல்லூரி மாணவர்கள், கிராமப்புறப் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்களைச் சந்தித்து உரையாடுவது என்று தொடர்ந்து களப்பணியாற்றினார்.

எங்கே போவார்கள் பெண்கள்?

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பட்டீல் பெயரால் நடைபெறும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் செயல்படுகிறார். 2013-ம் ஆண்டு அமெரிக்கத் தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட தலைமைப்பண்பு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றார்.

“குடும்ப வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களை அந்த நாட்டில் எப்படி நடத்துகிறார்கள் என்று தெரிந்துகொள் வதற்கான வாய்ப்பாக அது அமைந்தது. அவர்களுக்கென்று தனி தங்கும் விடுதிகள் இருக்கின்றன. உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிற பெண்கள் காவல் நிலையம், நீதிமன்றம் என்று தனித்தனியாக அலையாமல் ஒரே மையத்திலேயே தங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஆனால், இந்தியாவிலோ பெண்கள் தங்கள் குறைகளைச் சொல்வதற்குக்கூட இடமில்லை” என்று சொல்லும் செல்வகோமதி, அனைத்துத் தரப்புப் பெண்களும் குடும்ப வன்முறைக்கு ஆளாவதாகச் சொல்கிறார். குறிப்பாக அடித்தட்டுப் பெண்களைவிட மேல்தட்டுப் பெண்கள் பல்வேறுவிதமான வன்முறை களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார். கிராமப்புறங்களில் குடிப்பழக்கமும் ஆணாதிக்கமும்தான் பெரும்பாலான குடும்ப வன்முறைக்குக் காரணங்களாக இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

இதுதான் மதச்சார்பின்மையா?

உணவு என்பது தனி மனித உரிமை, அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று அழுத்தமாகச் சொல்லும் செல்வகோமதி, இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிப்பது பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும் என்கிறார்.

“நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அந்தத் தனிமனித உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது. மாடுகளை வளர்க்கிறவர்கள், அவற்றை விற்பனை செய்கிறவர்கள், இறைச்சிக் கடை நடத்துகிறவர்கள் என்று இது சார்ந்த தொழிலில் இருக்கிறவர்களை இந்தத் தடை உத்தரவு நேரடியாகப் பாதிக்கும். தவிர மாட்டிறைச்சியை உண்ணும் பெரும்பான்மையான மக்களின் உரிமையில் மூக்கை நுழைக்கும் இதை எப்படி ஏற்றுக்கொள்வது? வழிபடுவதும் அதற்காக விலங்குகளைப் பலியிடுவதும் ஏற்கெனவே அனுமதிக்கபட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது அதற்கு முரணாகத் தடை விதித்து உத்தரவிடுவது எந்த வகையில் நியாயம்? இந்தியா மதச் சார்பற்ற நாடு என்கிறோம். ஆனால், அதற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து திணிக்கப்படும்போது அமைதி காப்பது நல்லதல்ல” என்று சொல்கிற செல்வகோமதியின் வார்த்தைகளில் ஆயிரம் உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in