Last Updated : 01 Oct, 2013 05:34 PM

 

Published : 01 Oct 2013 05:34 PM
Last Updated : 01 Oct 2013 05:34 PM

சௌம்யாவுடன் ஒரு காலைப்பொழுது

வெயில் இன்னமும் கீழ்வானிலிருந்து எழவில்லை. வாகனங்களின் ஓசை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கவில்லை. புள்ளினங்களின் சங்கீதம் இன்னமும் முடியவில்லை. இனிய காலை வேளை. ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிரில் இருக்கும் பாதுகா என்னும் அரங்கம். பாடகி சௌம்யா அமர்ந்திருக்கிறார். சுற்றிலும் ரசிகர்கள். அது கச்சேரி அல்ல, கலந்துரையாடல்.

ருசியும் மணமும் நிறைந்த காபி அனைவரையும் வரவேற்கிறது.

ரசிகர்கள் சௌம்யாவிடம் மெல்லப் பேசத் தொடங்குகிறார்கள். ஒரு கலைஞரை ரசிகர்கள் இயல்பான முறையில் சந்தித்துப் பேசுவதற்கான முயற்சி இது.

இசைப் பேரொளி சௌம்யா பாடுவதில் மட்டுமின்றி, பாடல்களின் ரிஷிமூலம், நதிமூலம் பற்றி உரையாற்றுவதிலும் தனி இடம் பெற்றிருப்பவர். சங்கீதத்தில் ஆழமான ஞானம் பெற்றவர். இசையிலும், வேதியியலிலும் முனைவர் பட்டம் பெற்றவர். பிரபலமான ஜனரஞ்சகப் பாடல்களையும் மெருகேற்றித் தனித்தன்மையுடன் அளிப்பது இவரிடம் உள்ள சிறப்பு.

மார்கழி.ஆர்க் என்னும் இணையதளம் செப்டம்பர் 21ஆம் தேதியன்று நடத்திய இச்சந்திப்பு புகழ்பெற்ற காஞ்சிவரம் பட்டுப் புடவைக்கான தனியிடமான 'சாரங்கி' யின் துணையுடன் நடத்தப்பட்டது.

"சனிக்கிழமை காலையில் புறப்பட்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை" என்று ஆரம்பித்த சௌம்யா, தொடர்ந்து பேசப்பேச அவரது ஆளுமையின் பல வகைப் பரிமாணங்களும் வெளிப்பட்டன. “நான் உருவானது மூன்று சக்திகளால்தான் - எனது தந்தை (நிவாஸன்), எனது குருக்களான டாக்டர் எஸ்.ராமநாதன் (எஸ்.ஆர்.), மற்றும் விதூஷி முக்தாம்மா” என்றவர் அவர்களுடைய சிறப்புகளையும் விவரித்தார்.

தந்தையார் அபரிமிதமான சங்கீத ஞானம் கொண்டவர். என்னுடைய கச்சேரிகளை அலசித் தீர்த்துவிடுவார். அவரிடமிருந்து பாராட்டுப் பெறுவதென்பது பெரும்பாடு. அப்பா திண்டுக்கல் திரு எஸ்.பி. நடராஜனிடம் பயின்றவர். நடராஜன் புல்லாங்குழல் கலைஞர், இசை மேதை திரு. மாலியின் பிரத்யேக சீடர்.

குரு எஸ்.ஆர். அவர்கள் 22 சுருதி க்ரமங்கள் பற்றியும், சிலப்பதிகாரம் குறித்தும் நிறைய ஆராய்ச்சி செய்தவர். அவரிடம் குருகுல வாசம் செய்யும் பாக்கியம் பெற்றேன். அவரிடம் அமர்ந்திருந்தாலே, அந்தச் சூழலே நமக்கு ஞானத்தைப் போதித்துவிடும். அவருடைய உயிர் பிரிந்தபோது எனக்குப் பதினெட்டு வயதுதான். அவருடன் கச்சேரிகளுக்குப் போவேன். உடன் அமர்ந்து நிறைய பாடியிருக்கிறேன்.

முக்தாம்மா பாவ சங்கீதத்தின் உரு. நிறைய பாடகர்கள் உருவாவதற்குக் காரணமாயிருந்தவர். சிரமம் பாராமல் பாடுபட்டு நமது இசைப் பாரம்பரியத்தையும் சில இன்றியமையாத பழைய கோட்பாடுகளையும் நிலைநாட்டிய பிரதிநிதி. இவற்றைப் பாதுகாத்ததே அவரது அரும்பணி.

ஃபியூஷன் மற்றும் இதர சங்கீதங்கள் பற்றி சௌம்யா என்ன நினைக்கிறார்? - ஒரு ரசிகர் கேட்டார்.

(சற்று யோசித்து) கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை, ஏன் சினிமா இசையும்தான், ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொன்றிலும் சிறந்து விளங்க, பின்பற்ற வேண்டிய அப்பியாச முறைகளே மாறுபடும். வெவ்வேறு இசைகளில் சிலவற்றை நானே முயற்சி செய்து பாடலாம். சினிமாவில் எனக்கேற்ற ஸ்ருதி அமையவில்லை. (சிரித்துக் கொண்டே) சொல்லப் போனால் என் குரல் சில்க் ஸ்மிதாவுக்கு சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. ஜானகி அம்மா போலெல்லாம் எனக்கு பாட வராது.

உங்கள் இசை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுந்தது.

சௌம்யா: எனது இசைப் பதிவுகளை, நான் அவ்வளவாகக் கேட்பது இல்லை. ஆனால், நான் அன்றைய கச்சேரியில் என்ன செய்தேன், என்ன செய்யத் தவறிவிட்டேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு முறை நான் மேல் ஸ்தாயியில் மட்டும் பாடுவதாகவும், இவர் கச்சேரியில் மந்த்ர ஸ்தாயியே உபயோகிப்பது இல்லை என்றும் விமர்சனம் எழுந்தது. இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு நிறைய பயிற்சி செய்தேன். ஏதோ கையைக் கீழே காண்பித்து பாதாளத்தைக் காட்டினால், கீழ் ஸ்தாயியில் பாடியதாக அர்த்தமாகிவிடுமா? அப்பா என்னை விடாமல் பயிற்சி செய்யச் சொன்னார். கடைசியில் ஏதோ கிடைத்தது. நன்றாக இருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

பேச்சு சங்கீதத்திலிருந்து வாசிப்புக்குத் திரும்பியது. விரும்பிப் படிப்பது எது என்னும் கேள்வி எழுந்தது.

சௌம்யா: பழையதை விரும்பிப் படிப்பதுண்டு. ஷேக்ஸ்பியரையோ அல்லது பொன்னியின் செல்வனையோ ஏன் படிக்கிறோம்? படிப்பதால் ஒரு சந்தோஷம். அந்தக் காலங்களில் விளங்கிய மொழிப் பிரயோகங்கள், படிப்பவரைப் பழைய காலத்துக்கு இட்டுச் செல்லும் தன்மை... இவற்றுக்காகவே இந்தப் பொக்கிஷங்களைப் படிப்பேன்.

ரசிகர்களின் ரசனை பற்றி...

சௌம்யா: என் மனதுக்குப் பிடித்ததைத்தான் பாட முயற்சி செய்வேன். ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்ற ஆராய்ச்சியில் எல்லாம் நான் இறங்கியது இல்லை. ஆனால் பரவலான, பல தரப்பட்ட ரசிகர்களும் திருப்தியடையும் வகையிலேயே பாடிவருகிறேன். பொதுவாகக் கச்சேரிகளுக்கு வருபவர்கள் திறந்த மனதுடனும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலும் வருவது நல்லது.

பாடுவது, பயிற்சி செய்வது ஆகியவற்றைத் தவிர மற்ற நேரங்களில் சௌம்யாவின் செயல்கள் என்னவாக இருக்கும்?

சௌம்யா: (புன்னகை) சமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவேன். பல வகையான உணவு வகைகள் தயாரிக்கத் தெரியும். தோட்டக் கலையிலும் ஆர்வம் உண்டு. அடுக்குமாடிக் கட்டடமாக இருந்தாலும் எங்கள் வீட்டில் தோட்டம் உண்டு. செடிகளுடன் சம்பாஷணையும் உண்டு. தோட்டத்துக்கு வரும் காக்கைகள் என்னைப் படுத்தியெடுத்து தண்ணீர் கொடுக்கச் சொல்லும். இதிலெல்லாம் கிடைக்கும் ஆனந்தம் மிகவும் அலாதியானது.

பேசினால் போதுமா? பாடாமல் விட்டுவிடுவார்களா ரசிகர்கள்? பாடும்படி கேட்டார்கள். சௌம்யாவும் தட்டாமல் பாடினார்.

விவர்த்தினி ராகத்தில் அமைந்த "வினவே ஓ மனஸா" என்ற தியாகராஜ கீர்த்தனையையும், ஸ்வாகதம் கிருஷ்ணா என்ற மோகன ராகப் பாடலையும் பாடி ரசிகர்களைக் குளிர்ச்சியடையச் செய்த பின்னர் விடைபெற்றார் சௌம்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x