

சின்னத்திரை தொகுப்பாளினி சரண்யா ரவிச்சந்திரன் குறும்பட நடிப்பு, தியேட்டர் ஆர்டிஸ்ட், சினிமா நடிப்பு என்று பரபரப்பாக சுற்றிவருகிறார்.
“சினிமாவுக்குள்ள பயணிக்க ஒரு அடித்தளம் தேவை. நான் என்னோட தொகுப்பாளினி அவதாரத்தை சினிமாவுக்காகப் பயன்படுத்திக்கிட்டிருக்கேன். நயன்தாராவோட பெரிய ரசிகை நான். போன வருஷம் இதே நேரத்துல அவங்ககூட நடிக்கணும்னு ஆசை பூத்தது. இதோ இப்போ அவங்க நடிச்சிக்கிட்டிருக்குற ‘வேலைக்காரன்’ படத்துல அவங்க கூடசேர்ந்து நடிச்சுட்டேன். அடுத்தடுத்து ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘செம’, ‘ஐங்கரன்’னு சினிமா பட்டியல் நீளுது. அதேபோல 40-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடிச்சாச்சு. ‘இதுலதான் பிஸியாயிட்டியே, தொகுப்பாளினி அவதாரத்துக்கு குட் பை சொல்லிட வேண்டியது தானே’ன்னு ஃபிரெண்ட்ஸ் கேட்பாங்க. ஆனா, எப்பவுமே நான் அதை மிஸ் பண்ண மாட்டேன். தொகுப்பாளினியா இருக்கறது பெரும் நம்பிக்கை!’’ என்கிறார் சரண்யா ரவிச்சந்திரன்.
மனதுக்கு நிறைவு!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் ‘லேடிஸ் ஸ்பெஷல்’, ‘ஃபீரியா விடு’, ‘வாழ்த்துகள்’ என்று அடுக்கடுக்காக நிகழ்ச்சிகளை வழங்கிய திவ்யபானு தற்போது வேந்தர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
“போன வருஷம் நண்பர்கள் தினம் வந்தபோது சின்னத்திரைக்குள்ள தொகுப் பாளினியா வந்தேன். திரும்பவும் அடுத்த நண்பர்கள் தினம் வரப்போகுது. இந்தக் குறுகிய காலத்துல மீடியாவுக்குள்ளேயும் வெளியேயும் ஏகப்பட்ட நண்பர்கள் கிடைச்சுட்டாங்க. இப்போ வேந்தர் டிவியில ‘உப்பு புளி மிளகா’ன்னு புதுசா ஒரு சமையல் நிகழ்ச்சியையும் கையில எடுத்துட்டேன். ஃபேஸ்புக் லைவ் ஷோ, இணையதள சேனல் நிகழ்ச்சின்னு அப்பப்போ சிறகு விரிப்பேன். எப்படியோ என்னோட வேலையை அழகா முடிச்சு, ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புது விஷயம் பண்றோம்னு நினைக்கும்போது மனசுக்கு நிறைவா இருக்கு!’’ என்கிறார் திவ்ய பானு.