

பாஸ்ட் புட் சாப்பிடுவது போல வேகமாக மணமுறிவுகள் இக் காலத்தில் அதிகரித்துவருகின்றன. காதல் திருமணங்களும் இதற்கு விலக்கல்ல. ஏன் இப்படி நடக்கிறது? மிகுந்த கனவுகளுடனும் எதிர்பார்ப்புடனும் இறுதிவரை துணையிருப்பேன் என்ற சங்கல்பத்துடனும் சேர்ந்த ஆணும் பெண்ணும் அவர்கள் குடும்பங்களும் பிரியும் நிலை ஏன் உருவாகிறது?
குடும்ப நல ஆலோசகர் ப்ரீத்தி மனோகரிடம் கேட்டபோது முதலில் பெரிய காரணங்களைப் பட்டியலிட்டார். “பெரிய நகரத்தில் யாருடைய தலையீடும் இன்றி வாழலாம் . கிராமங்களைப் போல் கேள்வி கேட்பார்களே என்ற பயம் இல்லை. பணத் தேவையில்லை. கணவன் சம்பாதித்துத்தான் வருமானம் என்ற நிலை இல்லை. உடனடியாக மறுமணமும் சாத்தியம்தான். பெண்களின் வேலையும், சுயசம்பாத்தியமும் அவர்களுக்குத் தன்னிறைவை அளித்துள்ளது. அபரிமிதமான வருமானமும், குழந்தை இன்மையும் கூட முக்கிய காரணமாகவே அமைகிறது” என்கிறார்.
தன்னிடம் ஆலோசனை பெற வந்தவர்கள் கூறிய காரணங்கள் அதிர்ச்சி அளித்ததாகத் தெரிவித்தார் ப்ரீத்தி. எனக்கு அவனை பிடிக்கலை என்று எளிமையாகச் சொல்லிவிடுகிறார்கள். திருமணமான தம்பதியினருக்கு இடையே பேசிப் பொழுபோக்க பொதுவாக எந்த விஷயமும் இருப்பதில்லை என்பதையும் காரணமாகக் கூறுகிறார். ஏசி கார் வாங்கணும், மூணு வருடத்திற்குள் வீடு கட்டணும் என்ற ஆசையுடன் சம்பாத்தியத்தை நோக்கி ஓடுபவர்களிடையே பாசப் பிணைப்பை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று கவலையுடன் கேட்கிறார்.
மனப்பொருத்தம் இன்றி செய்யப்படும் திருமணங்களால் உடனடிப் பிரிவுகள் ஏற்படுகின்றன. பதினாறு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தவர்கள் கூட, இனி பிரிந்துவிடலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
பெற்றோர்களுக்கும் இப்பிரச்னையில் சம அளவில் பொறுப்புகள் உள்ளன. சம்பளம், குடும்ப அந்தஸ்து, வாய்ப்பு வசதிகளைப் பார்க்கிறார்களே தவிர குழந்தைகளின் அபிலாஷைகளைப் பற்றி எந்தக் கவனத்தையும் செலுத்துவதில்லை. திருமணம் முடிந்துசெல்லும் பெண்கள் பெற்றோரை விட்டுப் பிரியமுடியாமல் ஏற்படும் பிரச்னைகள் காரணமாகவும் விவாகரத்துகள் நடக்கின்றன. திருமணத்துக்கு முன் குடும்ப நல ஆலோசனை பெறுவதின் மூலம் பெரும்பாலான விவாகரத்துகளைத் தவிர்க்கமுடியும் என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.
ஒரு அபூர்வமான நிகழ்ச்சி
``ஒன்றரை வருடம் இணைந்து வாழ்ந்த இளம் தம்பதி அவர்கள். பிரிந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்தார்கள். பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்து வைத்த கல்யாணம்தான். இருபுறத்திலும் பெற்றோர்களிடையே சண்டை. இந்தச் சண்டையைப் பற்றிப் பேசிதான் இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வார்கள். இது முற்றிப் போய் விவாகரத்தில் முடிந்துவிட்டது. ஆனாலும் அடுத்து வந்த இரண்டு வருட காலத்தில் இருவரும் வேறு மணத்தில் விருப்பம் கொள்ளவில்லை. இப்போதும் மணிக்கணக்கில் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். என்னிடமும் அவ்வப்போது பேசுவார்கள். வேறு திருமணமாவது செய்து கொள்ள வேண்டியதுதானே என்று சொன்னால், இவ கூட மட்டும்தான் வாழ்வேன் என்று அவனும், அவன் கூட மட்டும்தான் வாழ்வேன் என்று அவளும் பிடிவாதமாக இருக்கிறார்கள், சட்டப்படி விவாகரத்தான இவர்கள் இருவரும். இதற்கு என்ன செய்வது? ”என்று கேட்கிறார் ப்ரித்தி. யோசிக்க வேண்டிய விஷயம்தான்.