

ஆணாதிக்கம் என்பது ஆணிடமிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. அந்தச் சிந்தனை பெண்ணிடமிருந்தும் வரலாம். இதைத்தான் பெண்களுக்குள் புகுந்திருக்கும் ஆணாதிக்க மனோபாவம் என்கிறோம். பெண்களிடம் காணப்படும் இதுபோன்ற ஆணாதிக்கச் சிந்தனைகள் முதலில் களையப்பட வேண்டும்.
ஆண், பெண் சமத்துவத்துக்காகத்தான் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். ‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஏழை, பணக்காரன் என்கிற வேறுபாடுகளைவிட ஆண், பெண் வேறுபாடுதான் மோசமானது’ என்று பாரதி சொல்லியிருக்கிறார்.
பேச்சாளராக நான் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற பயணங்களின் போது என்னுடைய வீட்டாரும், என்னை விழாவுக்கு அழைத்த அமைப்பினரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா, பயணத்தின்போது எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதா எனக் கேட்பது வழக்கம். ஆனால், இதுபோன்ற கேள்வி ஒரு ஆணிடம் கேட்கப்படுவதில்லை. குறிப்பாகப் பாதுகாப்பு குறித்துப் பெண்களிடம் மட்டுமே கேட்கப்படுகிறது. அந்த அளவுக்குத்தான் இருக்கிறது சமூகம்.
பெண்ணின் உடல் குறித்து இந்தச் சமூகம் ஏற்படுத்தியுள்ள தடைகளைக் கடக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால், பெண்கள் நினைத்தால் சுலபமாக இதைக் கடந்து போக முடியும். ஆனால், சமூகத்தின் துணையும் இதற்கு அவசியம். பெண்கள் மீதான சமூகத்தின் பார்வையில் ஏற்படுகிற மாற்றம், பெண் தன் உடலைக் கடந்துவர உதவும்.
பெண்ணுக்குத் தேவை மரியாதை
எனக்குத் தெரிந்த நண்பர்கள் என்னிடம் மரியாதையாக நடந்துகொள்கின்றனர். அதேபோல்தான் என்னைப் பற்றித் தெரியாதவர்களும் நடந்துகொள்ளக்கூடிய நிலை வரவேண்டும். இது என்னைப் பற்றியது மட்டுமல்ல. அனைத்துப் பெண்களிடமும் ஆண்கள் மரியாதையுடன்தான் நடந்துகொள்ள வேண்டும். பொதுவாகப் பெண்களை உடல்ரீதியாக மட்டும் பார்க்காமல், சக உயிராகப் பார்க்க வேண்டியது இந்தச் சமூகத்தின் முதன்மைக் கடமை.
உடன்பாட்டு முறை, முரண்பாட்டு முறை என்ற இரண்டு விதமாகப் பெண்களைப் பார்க்கலாம். என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், நான் பணிபுரியும் கல்லூரி என அனைத்துத் தரப்பினரும் எனக்கு உறுதுணையாக இருப்பது உடன்பாட்டு முறை.
இந்த இடத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடந்த விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு நிகழ்ச்சியில் என்னுடைய சக பேச்சாளர் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘சிறுபான்மையினர் கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டு, அந்தத் தடைகளைத் தாண்டி இவரால் தைரியமாகச் செயல்பட முடிகிறது’ என்று அவர் குறிப்பிட்டார். அவரது கருத்தை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். அவர் செல்வதுபோல் நான் சார்ந்துள்ள மதம், குடும்ப உறவு முறைகள், கல்வி நிறுவனம் ஆகியவற்றைத் தாண்டி வெளியே வரவில்லை. மாறாக அதற்குள் இருந்துகொண்டே, என் சுயமரியாதைக்கான போராட்டத்தை நடத்திக்கொண்டேதான், என்னால் இந்த இடத்துக்கு வர முடிந்திருக்கிறது. முரண்பாட்டு முறைக்கான உதாரணமாக இதைச் சொல்லலாம்.
வலியே வல்லமை
ஒரு விஷயத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்குத் தடையாக இருக்கிற இடத்திலிருந்து வெளிவருவது தீர்வல்ல. அதிலிருந்துகொண்டே முட்டி, மோதி சாதிப்பதில்தான் முழுமையான வெற்றி அடங்கியுள்ளது. புறச்சூழலில் வெற்றிபெற கஷ்டப்படத்தான் வேண்டும். அப்படியொரு விஷயத்தை எதிர்கொள்ளும்போது சில முரண்கள் வரவே செய்யும். ஆங்கிலத்தில் ‘Feel the pain, don’t suffer’ என்று சொல்வார்கள்.
வலி என்பது வேறு, வல்லமை என்பது வேறு. ஒரு மரம் நன்றாக வளர்ந்து செழிப்பாக இருக்கும். ஆனால், வேகமாகக் காற்றடித்தால் சாய்ந்துவிடும். ஆனால், சிறு புல் எவ்வளவு வேகமாகக் காற்றடித்தாலும் அதற்கேற்ப வளைந்துகொடுத்துத் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளும். அதுபோலத்தான் பெண்களும் சூழ்நிலைக்கேற்பச் செயல்பட வேண்டும். அதேநேரம் தங்களின் சுயத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தச் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களால், அவர்கள் தாழ்ந்து போவதில்லை. அவர்களின் சுயமரியாதையை மேலும் விரிவடையச் செய்வதற்காக ஆழமாகப் பயணிக்கிறார்கள்.
அன்பே ஆயுதம்
எல்லாப் பிரச்சினைகளையும் அன்பு என்ற வீழ்த்த முடியாத ஆயுதத்தால் வெல்ல முடியும். அந்த அன்பைப் பெண்களிடம் மட்டும்தான் காண முடியும். அதனால்தான் இந்தப் பிரபஞ்சத்தின் அழகை வெளிப்படுத்தும் இயற்கையைப் பெண் என்று சொல்கிறார்கள்.
பெண்கள் யானையைப் போன்றவர்கள். ஒரு யானையை நீங்கள் அடிக்கலாம், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம், அதன் மூலம் வரும் லாபத்தை அனுபவிக்கலாம். அதே வேளை அதற்கான எல்லை எது என்பதை அந்த யானைதான் முடிவு செய்யும். அதுபோலத்தான் பெண்களும், தங்களுக்கான எல்லைகளை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு விஷயத்தை தாங்கிக்கொள்ள முடியாது என்றால், பெண்கள் துணிந்து அதிலிருந்து வெளிவர வேண்டும்.
நாற்பது வயதுக்கு மேல் உள்ள இன்றைய பெண்களுக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம், அவர்களுடைய அம்மாவுக்கு அந்த வயதில் கிடைத்திருக்காது. ஆனால், அவர் தன்னுடைய பெண் சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் செயல்பட நினைத்ததுபோல், இன்றைய காலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்குக் கிடைத்த விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு எந்தக் குறைவும் இல்லாமல் கொண்டு போக வேண்டும். அதுவே பெண் இனத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு உத்வேகம் தரும்.
கட்டுரையாளர், பேராசிரியர்