

சன் தொலைக்காட்சியில் ‘முந்தானை முடிச்சு’, ‘அழகி’, ‘வள்ளி’ ஆகிய தொடர்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர் சோனியா. இவர் தற்போது மும்பை, அந்தமான், சென்னை என்று பயணம் செய்துவருகிறார்.
“அப்பா, அம்மா அந்தமான்ல இருக்காங்க. கணவர் வீடு மும்பை. சீரியல் நடிப்புக்கு சென்னை என்று ஓடிக்கிட்டே இருக்கேன். சின்னத்திரையில் இதுவரை அமைந்த சீரியல்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வகையில் என் கதாபாத்திரம் தனித்துத் தெரியும். அடுத்தடுத்து மே, ஜுன்ல தொடங்கும் சீரியல்களும் அப்படித்தான் இருக்கும். அதிலும் ‘முந்தானை முடிச்சு’ மாதிரி கிராமத்துப் பெண் அவதாரம் என்றால் உடனே சம்மதம் சொல்லிடுவேன். சினிமாவில் நடிக்கும்போது கிராமத்து கலாசாரம் சூழ்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தைத்தான் ஏற்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கேன். மூணு மாசத்துக்கு ஒரு முறை அப்பா, அம்மாவைப் பார்க்காம இருக்கவே முடியாது!’’ என்று பாச மழை பொழிகிறார் சோனியா.
மகிழ்ச்சி!
வேந்தர் தொலைக்காட்சியின் ‘ஏழாம் உயிர்’ திகில் தொடரில் நாயகியாக நடித்த லக் ஷ்மி விஸ்வநாத் சீரியல் நடிப்புக்கு சின்ன இடைவேளை விட்டுவிட்டு, கல்லூரி மாணவி அவதாரம் எடுத்திருக்கிறார்.
“நடிப்பு எந்த அளவுக்கு இஷ்டமோ, அந்த அளவுக்குப் படிப்பும் பிடிக்கும். திருமணம் முடிந்ததும் சீரியல் நடிப்புக்கு குட் பை சொன்னேன். அதுக்காக வீட்டில் சும்மா இருக்க முடியுமா? அதனால எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கலாம்னு என் சொந்த ஊரான கேரளா எர்ணாகுளம் கல்லூரிக்கு ஓடிவந்துட்டேன். அடுத்து நடிப்பேனா, இல்லையான்னு இப்போதைக்குச் சொல்ல முடியாத அளவுக்கு வீடு, கல்லூரின்னு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” என்கிறார் லக் ஷ்மி விஸ்வநாத்.