Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM

என் பாதை கலையின் பாதை

நமக்கு விருப்பம் இருக்கிற துறையைவிட கைவருகிற துறையைத் தேர்ந்தெடுப்பதுதான் வெற்றிக்கான வழி. அந்த ரகசியத்தை அறிந்துகொண்டதுடன் அதைச் செயல்படுத்தியும் வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த ரமா ராஜேஷ். எம்.சி.ஏ. படித்தவர், வேலை தேடிப் போகாமல் ஒரு கலைக்கூடத்துக்கு உரிமையாளராகிவிட்டார். கலைகளும் அவை தருகிற மனநிறைவும்தான் அதற்குக் காரணம் என்கிறார் ரமா.

“கைவினைக் கலையில் சிறந்து விளங்கும் பலர், தங்களுக்கு சிறுவயதில் இருந்தே கலைகள் மீது ஆர்வம் இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், நான் அப்படியில்லை. எனக்குப் படம் வரைவது என்றாலே பாகற்காய் சாப்பிடுவது போல. அதனாலேயே அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுக்காமல் வணிகவியல் படித்தேன். ஆனால் பள்ளி இறுதியாண்டு விடுமுறைதான் என் பாதையை மாற்றியது. கல்கி புத்தகத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் தொடரைப் படிப்பதைவிட, அதில் வெளியாகியிருக்கும் படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்திருந்தது. ஏதோ ஒரு உந்துதலில் அந்தப் படங்களை நானும் வரைய முயற்சி செய்தேன். அதுதான் என் முதல் படி. எதையுமே முழுமையாகக் கற்றுக்கொண்டு செயல்படுத்தும்போதுதான் அதன் முழுப் பரிமாணத்தையும் உணரமுடியும். அதனால் ஒவ்வொரு கலையையும் தேர்ந்தெடுத்த கலைஞர்களிடம் பயின்றேன்” என்று கலைக்கும் தனக்குமான அறிமுகத்தைச் சொல்கிறார் ரமா. ஓவியங்கள் வரைவதில் தொடங்கி, சிலைகள் வடிவமைப்பது வரை பல கலைகளைக் கற்று வைத்திருக்கிறார். ஆடை வடிவமைப்பிலும் தடம் பதித்திருக்கிறார்.

ஆர்வம்தான் ஆக்கும் சக்தி

“கல்லூரி முடித்ததும் ஹோம் மேனேஜ்மெண்ட் படிப்பையும் முடித்தேன். நான் படித்த படிப்பு வீணாகக்கூடாது என்பதில் என் புகுந்த வீட்டினர் உறுதியாக இருந்தனர். அந்த அன்பும் அக்கறையும்தான் என்னை, எனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. அலுவலகமா, கலைத் துறையா என்று யோசித்ததில் கைவினைக் கலைதான் என்னை ஆக்கிரமித்தது. திருமணமான நான்கே மாதத்தில் ‘பேலட்ஸ்’ எனப்படும் கலைக்கூடத்தைத் தொடங்கினேன். 15 ஆண்டுகள் அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன், படம் வரைவதும், கலைகளைக் கற்பதும் மேல்தட்டு மக்கள் மட்டுமே அறிந்துகொள்ளக்கூடிய கலைகள் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால், கலை என்பது அனைவருக்கும் பொதுவான சொத்து என்பதை என் பயிற்சிப் பள்ளி நிரூபித்தது. சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளில் ஆடை வடிவமைப்பில் பலர் ஆர்வம் காட்டாத நிலையில் என் ஆடை வடிவமைப்புக்கும், தயாரிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. வீட்டு உள் அலங்காரத்திலும் கவனம் செலுத்தி வருகிறேன். வீட்டு உரிமையாளர்களின் மதிப்பீட்டுக்குள் அனைத்தையும் செய்து முடிப்பதால் எனக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்” என்கிற ரமா, சின்னச் சின்ன கலைப்பொருட்களையும் ரசித்துச் செய்கிறார். அந்த ரசனைதான் அவரை முன்னேற்றப் பாதையில் முன்நிறுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x