

ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய முதல் படத்திலேயே (பரதேசி) தேசிய விருதைத் தட்டிச் சென்றவர் பூர்ணிமா. தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘பவர் பாண்டி’, ‘விஐபி 2, ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்துவருகிறார்.
மேலாண்மைப் படிப்பு முடித்துவிட்டு ஆடை வடிவமைப்பின் மீது ஏன் ஆசை வந்தது?
சிறு வயதிலிருந்து வளர்ந்தது, விளையாடியது அனைத்துமே ஆடைகளுடன்தான். எங்கள் வீட்டில் அனைவருமே ஜவுளி வணிகத்தில்தான் இருக்கிறோம். அப்போது எங்கள் வீட்டு முன் பகுதியில் துணி தைக்கும் வேலைகள் நடக்கும். அதைத் தாண்டித்தான் வீட்டுக்குள் போக முடியும். துணிகள் இருக்கும் குடோன், தைக்கும் இடங்கள் இவைதான் என் விளையாட்டுக் களம். அதனால் பள்ளிக் காலத்திலிருந்தே நானும் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டேன். சேலைகள், சல்வார் உள்ளிட்டவற்றின் வடிவமைப்பில் உதவினேன்.
‘பரதேசி’ பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
பாலா சார் எங்கள் குடும்ப நண்பர். ஆடை வடிவமைப்பில் அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே அந்தப் படத்தில் பணியாற்ற முடியும். அதனால், உடைகள் குறித்த தேர்வுக்கு என்னை அழைத்திருந்தார்கள். சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதை என்பதால், ஒவ்வோர் ஆடையையும் தனித்துவத்தோடு வடிவமைக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு படத்தில் பணிபுரிந்தது, பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவந்தது போல இருந்தது.
முன்னணி நடிகர்களோடு பணிபுரியும் அனுபவம்?
நான் கதாபாத்திரத்தைத்தான் பார்ப்பேன், நடிகராகப் பார்ப்பதில்லை. கதாபாத்திரம் என்ன செய்யும், எத்தனை வயது, எப்படிப்பட்ட வீட்டில் இருக்கிறார் உள்ளிட்ட விஷயங்களை வைத்துதான் ஆடைகளை வடிவமைப்பேன். பெரிய நடிகர்களுக்கு ஆடை வடிவமைக்கும்போது, அவர்களது கருத்தையும் சொல்வார்கள். நான் சொல்வதையும் ஏற்றுக்கொள்வார்கள். இப்படித்தான் ஆடைகள் வேண்டும் என்று யாரும் சொன்னதில்லை.
சினிமாத் துறையில் பெண்களுக்கு இடமிருக்கிறதா?
சினிமாத் துறைக்குப் பெண்கள் வரக் கூடாது என்று யாரும் தடுக்கவில்லையே. ஆண்களுக்குக் கொடுக்கும் மரியாதையைப் பெண்களுக்கும் கொடுக்கிறார்கள். என்னுடைய ஆடை வடிவமைப்புப் பிரிவிலும் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. திரையுலகில் அனைவருமே சமம்.