முகங்கள்: நிதித் தொழில்நுட்பத்தில் கலக்கும் லட்சுமி தீபா!

முகங்கள்: நிதித் தொழில்நுட்பத்தில் கலக்கும் லட்சுமி தீபா!
Updated on
2 min read

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான் பணமில்லாப் பரிவர்த்தனை பற்றிப் பெரும்பாலான மக்களுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனால் பணமில்லா அட்டை பயன்பாட்டைச் சில ஆண்டுகளுக்கு முன்னரே இல்லத்தரசிகளுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் லட்சுமி தீபா. நாட்டின் பெரு நகரங்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் யெல்டி நிறுவனத்தினை இவர் வழிநடத்திவருகிறார்.

பிரபல பொதுத்துறை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் இருந்தாலும் தொழில்நுட்பம், நிதி நிர்வாகத் தொழில்களில் பெண்களின் பங்களிப்பு சற்றுக் குறைவாகக் காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பு வகிக்கும் லட்சுமி தீபா, டிஜிட்டல் வாலட் ஸ்பேஸ் துறையில் முக்கியத் தொழில்முனைவோராக வலம்வருகிறார்.

”பொறியியல் படித்த பின், மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றேன். அப்பா தொலைத்தொடர்புத் தொழிலில் இருந்ததால் எனக்கும் அதிலேயே ஈடுபாடு. இங்கிலாந்து தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். அப்போதுதான் ஐரோப்பாவில் வீட்டுக்கு வீடு ஆய்ஸ்டர் என்ற வாலட்டைப் பயன்படுத்தினார்கள். அதுபோன்று ஒரு அட்டைத் திட்டத்தை, இந்தியாவுக்கு ஏற்றபடி மாற்றி, பயன்பாட்டை அதிகரிக்கலாம்னு அப்பாவும் நானும் முடிவெடுத்தோம். அதைத் தொடர்ந்து யெல்டி நிறுவனம் தொடங்கினோம்” என்ற லட்சுமி தீபா, சொந்த நிறுவனம் என்பதற்காக நேரடியாகச் சென்று பதவியில் அமர்ந்துவிடவில்லை.

சில நிறுவனங்களில் பயிற்சி பெற்று, சொந்த நிறுவனத்திலும் உரிய தொழிற்பயிற்சி பெற்ற பின்னரே பதவியை ஏற்றுள்ளார். பணப் பரிவர்த்தனையில் பல திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திவருகிறார்.

”எங்கள் நிறுவனத்தின் முதல் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போதுதான் எனக்குக் குழந்தை பிறந்தது. பிரசவ விடுமுறையில் கூட வீட்டில் இருந்தபடியே வேலை செய்தேன். எங்கள் நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கும் சிறு கடைகளுக்கும் அட்டைகள் கொடுக்கும். இதற்காகத் தனியார் வங்கியுடன் இணைந்திருக்கிறோம். மாதம் முதல் வாரத்தில் பணத்தை அந்த அட்டைக்குரிய கணக்கில் செலுத்தி

விட வேண்டும். அந்த அட்டையைக் கொடுத்தால் வணிகர்கள் ஏற்றுக்கொண்டு, பொருள்கள் வழங்குவார்கள். மாத இறுதியில் அவர்கள் வாங்கும் பொருட்களுக்குரிய சலுகைத் தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதனால் மாசக் கடைசியில் பணம் இல்லையே என்று கையைப் பிசைந்துகொண்டு நிற்கத் தேவை இல்லை. இந்த உத்தியைச் சென்னை முழுக்க நிறைய வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பித்துவிட்டோம். விரைவில் புதுச்சேரியிலும் தொடங்கவிருக்கிறோம்” என்பவர், தனது நிறுவனத்தில் அனைத்து நிலைப் பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறார்.

“வாடிக்கையாளர்களிடம் நமது பொருளைச் சேர்க்கவேண்டுமானால் கொஞ்சம் தைரியமாக ரிஸ்க் எடுக்க வேண்டும். சில வருஷங்களுக்கு முன்னால் இவ்வளவு பெரிய சென்னையில எங்களுக்கான வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டுகொள்வது கஷ்டமாகத்தான் இருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் கடினமாக உழைத்தோம். அது வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. தொழில்நுட்பத் துறையில் ஒரு பெண் இருக்கிறதை ஆச்சரியமாகப் பார்க்கிறாங்க. எந்தத் துறையும் விலக்கப்பட்டதல்ல. மென்பொருள் துறையைத் தாண்டி நிதித் தொழில்நுட்பத்தில் பெண்கள் வந்தால், சமூகப் பொருளாதாரம் கண்டிப்பாக உயரும்” என்று கூறும் லட்சுமி தீபா, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தங்கள் நிறுவனத்தின் கிளைகளைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in