

வரவேற்பறையில் பல்வேறு முகபாவங்களில் காட்சிதரும் நாய்க்குட்டி பொம்மைகளைப் பார்த்தாலே மனதின் பாரம் மாயமாக மறைந்துவிடுகிறது. ஒவ்வொன்றும் அத்தனை அழகு! “இந்தப் பொம்மைகளுக்குக் குழந்தைகளைவிட பெரியவர்கள்தான் ரசிகர்கள்” என்று சொல்லும் சரளா, புதுச்சேரியைச் சேர்ந்தவர்.
“ஒவ்வொருவரும் படிப்புடன் ஏதாவது ஒரு கைவினைக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்பது சரளாவின் தாரக மந்திரம்.
“சின்ன வயசிலேயே என் அப்பா இறந்துட்டார். அம்மா வீட்டிலேயே கூடை முடைந்து விற்பார்கள். அவர் விறுவிறுவென கூடை முடைவதைப் பார்த்து வளர்ந்த எனக்கு சிறு வயதிலேயே கலைப் பொருட்கள் மீது ஆர்வம் வந்தது” என்று சொல்லும் சரளா, பள்ளி விடுமுறை நாட்களில் தொழிலாளர் நலத் துறை சார்பில் நடந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு தையல் கற்றார்.
முதுகலை முடித்ததும் தன் தோழியின் சகோதரியிடமிருந்து பொம்மைகள் செய்யக் கற்றுக்கொண்டார்.
“பொம்மை செய்யக் கற்றுக்கொண்டதும் நானும் என் தம்பியும் சேர்ந்து பொம்மைகளை விற்க முடிவு செய்தோம். தம்பி சின்னதாக ஒரு கடை திறந்தார். அதற்கப்புறம்தான் பொறுப்பு அதிகமாச்சு. விளையாட்டுத்தனமாக கற்ற கலையைத் தொடர்ந்து பல்வேறு கலைகளைக் கற்றேன்” என்று புன்னகைக்கிறார் சரளா.
சிறியதே லாபம்!
பெரிய பொம்மையைவிட சின்னச் சின்ன பொம்மைகளில் லாபம் அதிகம் என்றும் சொல்லும் இவர், ஆர்வத்துடன் உழைப்பும் இருந்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய்வரை சம்பாதிக்கலாம் என்று நம்பிக்கை தருகிறார்.
“தொழிலாளர் நலத் துறை மூலம் பொம்மை செய்வதற்குப் பயிற்சியளிக்கிறேன். அங்கு பெயரை பதிவு செய்தால் ஐந்து நாள் பயிற்சியில் மூன்று விதமான பொம்மைகளைச் செய்யக் கற்றுத் தருகிறோம். சுயஉதவிக் குழுக்களுக்கும் பயிற்சி தருகிறோம்” என்கிறார் சரளா.
ஐம்பது வகையான பொம்மைகளையும் 300 வகையான வீட்டு அலங்காரப் பொருட்களையும் செய்கிறார் இவர்.
“நாம் செய்கிற கைவினைப் பொருட்களால் கிடைக்கிற வருமானத்தைவிட சொந்தக் காலில் நிற்க முடியும் என்பது பெருமிதமாக இருக்கிறது” என்று சிரிக்கும் சரளா, டெல்லி, குஜராத், ஏனாம் எனப் பல இடங்களிலும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்றிருக்கிறார்.
“மொழி தெரியாத பலரும் நம் படைப்புகளை ரசிப்பதைப் பார்ப்பது பேரானந்தமாக இருக்கும். திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என்று சுருங்கிவிடாமல், வீட்டிலிருந்தபடியே கைவினைக் கலைகள் செய்து சம்பாதிப்பது குடும்பத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்தும்” என்று சொல்கிறார் சரளா.
படங்கள்: எம். சாம்ராஜ்