Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

இந்தியாவின் நம்பிக்கைக் கரங்கள்!

அக்கா மால்யதாவுக்கு அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தில் வேலை. தங்கை ரம்யா, இந்திய விமானப்படையில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி. இருவருக்கும் கைநிறைய சம்பளம், மனம் நிறைய மகிழ்ச்சி. கருத்தொருமித்த கணவன்மார் அமைந்துவிட, இனிய பாதையில் இல்லறம். ஆனால் இதைவிடவும் வாழ்க்கையில் அடுத்தவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வேலைகள் எத்தனையோ இருக்கின்றன என்கிறார்கள் இந்தச் சகோதரிகள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிருந்தாவனைச் சேர்ந்த இவர்கள், இந்திய மாநிலங்களின் சிறந்த கலையம்சங்களை உள்ளடக்கிய ஆடைகளை, தேர்ந்த கைவினைக் கலைஞர்களைக் கொண்டு நெய்து விற்பனை செய்கிறார்கள், வலைதளம் வழியாக. www.handsofindia.com என்ற பெயரில் இருக்கும் அவர்களது வலைதள முகவரிக்கு தினம் தினம் புதுப்புது வாடிக்கையளர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களது முகநூல் பக்கத்துக்கு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 600 பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். இத்தனை பெரிய வெற்றிக்குப் பின்னால் இருக்கிறவர்கள் எளிய கலைஞர்களும், பள்ளிப்படிப்பைத் தாண்டாத வித்தகர்களும்தான்.

சென்னையில் நடக்க இருக்கும் இவர்களது ஆடை கண்காட்சிக்கான பணிகளில் இருந்த மால்யதா, தங்கள் முயற்சி குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

காஞ்சிபுரம் காட்டிய வழி

“எங்க அம்மாவோட ஊர் பட்டு நெசவுக்குப் பேர்போன காஞ்சிபுரம். பள்ளி விடுமுறை நாட்கள்ல காஞ்சிபுரத்துக்குப் படையெடுத்துடுவோம். தறியோட சத்தமும், பட்டுநூல்களை நனைக்கிற வண்ணங்களுமாதான் ஒவ்வொரு நாளும் விடியும், முடியும். இங்கே பிருந்தாவன்ல இருக்கற கோயிலுக்கு இந்தியாவோட அறியப்படாத பல கிராமங்களில் இருந்தும் மக்கள் வருவாங்க. அவங்க உடுத்தியிருக்கும் நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த துணிகளை ஆர்வமா பார்ப்போம். பக்தர்கள் கடவுளுக்காகத் தரும் புடவைகளையும், ஆடைகளையும் ‘வஸ்த்ரா கோத்ரி’ங்கற பாதுகாப்பு அறையில வைப்பாங்க. அதைக் கண்காணிக்கிற வேலைதான் எங்களோடது. அதனால ஆடைகள், அவற்றில் செய்யப்பட்டிருக்கும் விதவிமான வேலைப்பாடுகள் இவைதான் எங்களோட இளமைப் பருவம் முழுக்க ஆக்கிரமிச்சிருந்தது.

படிப்பு முடிஞ்சதும் நான் சாஃப்ட்வேர் நிறுவனத்துலயும் ரம்யா, விமானப்படையிலயும் வேலைக்குச் சேர்ந்தோம். ரம்யா அவளோட வேலைக்காக இந்தியாவின் பல கிராமங்களுக்கும் பயணம் செய்யவேண்டியிருந்தது. அப்போ அங்கிருக்கிற ஆடை வடிவமைப்புகளையும் அவற்றில் செய்யப்படும் விதவிதமான கலைகளையும் தெரிஞ்சுக்கிட்டு வருவா. ‘வெளியுலகுக்கு அடையாளமே தெரியாத அற்புதமான கலைஞர்கள் எல்லாம் குக்கிராமங்கள்லதான் இருக்காங்க. அவங்க திறமையை ஏன் நாம உலகறியச் செய்யக்கூடாது?’ன்னு ஒருநாள் ரம்யா கேட்டா. அந்தக் கேள்விக்கான பதிலாதான் ‘ஹேண்ட்ஸ் ஆஃப் இந்தியா’ 2003இல் முளைவிட்டது” என்று சொல்கிறார் மால்யதா.

சொந்தக்காலில் நிற்பதே சிறப்பு

தொழில்நுட்பம் எத்தனையோ வேகமாக வளர்ந்தாலும், அது சார்ந்த பலன் எதுவுமே கிடைக்காமல் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடையாளம் இழந்து போகிற கலைஞர்கள் குறித்த சிந்தனை, மால்யதாவை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தியது. இந்தத் தொழில்நுட்பத்தையே அதற்கு ஆதாரமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தூண்டியது. ரம்யா, தன் வேலையை விட்டுவிட்டு இந்தியா முழுவதும் கலைஞர்களுக்கான தேடலில் இருந்தபோது, தன் சம்பளத்தால் ஓரளவுக்குச் சமாளித்தார் மால்யதா. ஒருகட்டத்தில் அவரும் வேலையைவிட்டுவிட, இருவரின் கணவர்களும் உதவியிருக்கிறார்கள். செலவு செய்ய இன்னொருவர் இருக்கிறார் என்ற நினைப்பே, தம் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும் என்று நினைத்த சகோதரிகள் தங்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகப் போடுவது என முடிவெடுத்தார்கள். தங்கள் சேமிப்பு மற்றும் நகைகளை வைத்து 2008ஆம் ஆண்டு, தங்கள் வலைதளைத்தை ஒரு நிறுவனமாக விரிவாக்கினார்கள்.

“ஆரம்பத்துல எங்க ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவங்ககிட்ட எம்ப்ராய்டரி, ஆரி, குந்தன் வேலைப்பாடுகள் போன்றவற்றைச் செய்து வாங்கினோம்” என்று சொல்லும் மால்யதா, தங்கள் நிறுவனத்தின் பணியாளர்களே மிகப்பெரிய பலம் என்று குறிப்பிடுகிறார்.

துணை நிற்கும் தொழிலாளர்கள்

“எங்களோட பயணச் சுற்றுலாவை முடிச்சுகிட்டு 2011இல் 3 தையல் கலைஞர்களோடவும், ஒரு சூப்பர்வைசரோடவும் எங்க வொர்க்‌ஷாப்பைத் திறந்ததை மறக்கவே முடியாது. கைரேகை வைத்து சம்பளம் வாங்கும் கலைஞர்கள்தான் எங்க பணியாளர்கள். மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் போகாதவங்கதான் கூகிள்ல புதுப்புது டிசைன் தேடுறதும், உருவாக்கறதும். எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கும் அமித், எங்க ப்ரொடக்‌ஷன் கண்ட்ரோலர். அவருக்குத் தெரிஞ்ச ஆங்கிலத்துல வாடிக்கையாளர்கள்கிட்ட பேசறதுல துவங்கி, மெயில்களுக்கு பதில் அளிக்கறது, போட்டோவை அப்லோட் பண்றதுன்னு ஏகப்பட்ட வேலைகள் செய்வார். இத்தனைக்கும் இவங்களுக்கு வேலை நேரத்துல கிடைக்கிற சின்ன பிரேக்லதான் இந்த விஷயங்களைச் சொல்லித் தந்தோம்” என்று விளக்கம் கொடுக்கும் மால்யதா, மற்றவர்களிடம் இருந்து தாங்கள் எப்படி வேறுபடுகிறோம் என்பதையும் விளக்குகிறார்.

பொருளும் கலையும் எங்கள் பலம்

“பொதுவா ஆன்லைன் ஷாப்பிங் பிசினஸ் பண்றவங்க, இன்னொருத்தர்கிட்டே இருந்து வாங்கின பொருளைத்தான் விற்பாங்க. ஆனா நாங்க அப்படியில்லை. எங்களோட கலைஞர்கள் வடிவமைக்கிற டிசைனை, எங்க நெசவாளர்களே நெய்து தருவாங்க. இதனால ஒரு பொருளோட லாபம், அதை உருவாக்கின கலைஞர்களுக்கு நேரடியா போய்சேருவதுதான் எங்க முதல் வெற்றி.

இடைத்தரகர்களால வீணாகற பணம் சம்பந்தப்பட்டவங்களுக்குப் போய் சேர்றதுதானே நியாயம்? ஆன் லைன் ஷாப்பிங் தவிர இந்தியாவின் பெருநகரங்களில் கண்காட்சியும் வைப்போம். சென்னையில கண்காட்சி நடத்தினப்போ ஒரு அம்மா தினமும் சாயந்திரம் டிபன் கொண்டு வந்து தருவாங்க. நாங்க சாப்பிட்டோமா இல்லையான்னு அன்போட விசாரிப்பாங்க. இந்த அன்பு வேற எங்கேயும் காணக்கிடைக்காத அனுபவம். இந்த மாதிரி மனுஷங்கதான் எங்களை இன்னும் உணர்வுப்பூர்வமா வேலை செய்ய வைக்கிறாங்க. எங்க சில்லறை வர்த்தகத்தை அதிகரிக்கறதுக்கான வேலைகள் முழுமூச்சா நடக்குது. அதை நோக்கிதான் ஒவ்வொரு அடியா எடுத்துவைக்கிறோம், எங்க கலைஞர்கள் துணையோடு” - தெளிவாகத் திட்டம் போட்டு செயல்படுகிறார் மால்யதா.

நேர்த்தியான படைப்புகள்

எந்தக் காலத்திலும் தோற்காது. நாட்டின் சிறந்த கலைஞர்களைக் கொண்டு இவர்கள் உருவாக்கும் ஆடைகளும் அப்படித்தான் வெற்றியின் வாசலை எளிதாக எட்டிப் பிடித்துவிடுகின்றன. இந்தப் பெண்களின் வெற்றி, நேர்த்தியின் வெற்றி!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x