

சூழலுக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்காத தொழில் மூலம் வருமானம் பெறுவதே நிறைவு என்று ஒருமித்த குரலில் சொல்கிறார்கள் புதுக்கோட்டை மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள்.
இன்று சிறுதானியங்களில் செய்யப்படும் சிற்றுண்டி, இனிப்பு, நொறுக்குத் தீனி வகைகளுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும்கூடச் சிறுதானியப் பலகாரங்களுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது.
பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதி விஜயா, “கடைகளில் வாங்கும் பலகாரங்கள், மாவு வகைகளில் உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் சேர்க்கப்படுவதால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடை பலகாரங்கள் விரைவில் கெட்டுப்போகும் என்பதால் ஓரிரு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. நாங்கள் அரசின் ஒத்துழைப்போடு சிறுதானியங்களிலிருந்து பலவிதமான பலகாரங்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறோம்” என்கிறார்.
நபார்டு வங்கி மூலம் 90 பெண்களுக்குச் சிறுதானியங்களில் பலகாரங்கள் உள்ளிட்ட மதிப்புக்கூட்டி பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற பெண்கள் சேர்ந்து சிறுதானியங்களி வைத்து பலகாரங்களைச் செய்து விற்பனை செய்கிறார்கள். இதற்குத் தேவையான மூலப்பொருட்களை, புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனத்திலிருந்து வாங்குகிறார்கள்.
தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களின்போது சிறுதானிய வகைகளில் அதிரசம், மிக்சர், ரிப்பன் பக்கோடா, முறுக்கு, லட்டு ஆகியவற்றைத் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார்கள். இந்தப் பலகார வகைகள் பல நாட்கள் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாது என்பதால் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் செல்வோரும் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய், எள், கடலைப் பருப்புகளிலிருந்து எண்ணெய் எடுத்து, அவற்றில் பலகாரம் செய்கிறார்கள்.
உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலமே இன்று பல நோய்களிலிருந்து தப்பித்துவிடலாம். இதை மக்கள் நன்கு அறிந்திருப்பதால், பாரம்பரிய உணவுகளை நாடிச் செல்லத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் எங்கும் கூழ், சிறுதானிய பிரியாணி, சிறுதானிய இட்லி போன்றவற்றின் விற்பனை அதிகரித்துவருகிறது. அதைத் தங்கள் தொழிலுக்கான ஆதரமாகப் பயன்படுத்தி சாதித்துவருகிறார்கள் இந்த மகளிர் குழுவினர்!