மொழியின் பெயர் பெண் - நெல்லி சாக்ஸ்: துயரத்தின் செவ்வந்திக்கல்

மொழியின் பெயர் பெண் - நெல்லி சாக்ஸ்: துயரத்தின் செவ்வந்திக்கல்
Updated on
2 min read

நெல்லி லியோனி சாக்ஸ் (Nelly Leonie Sachs, 1891-1970) என்றழைக்கப்படும் நெல்லி சாக்ஸ் பெர்லினில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். வசதியான குடும்பம். சிறுவயதில் இசையும் நடனமும் கற்ற நெல்லி சாக்ஸுக்கு நடனக் கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசை. அவரது பெற்றோர் அதற்கு அனுமதிக்காததால் எழுத்தின் பக்கம், குறிப்பாக, கவிதையின் பக்கம் திரும்பினார். ஸெல்மா லாகர்லாஃப், ஹில்டே டோமின் போன்ற இலக்கியவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்.

வதை முகாமிலிருந்து தப்பி…

ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்குப் பிறகு அங்கிருந்த எல்லா யூதக் குடும்பங்களைப் போலவும் நெல்லி சாக்ஸின் குடும்பமும் பெரும் இன்னலுக்குள்ளானது. சித்திரவதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும் அபாயத்தில் நெல்லியும் அவரது தாயும் இருந்த சமயத்தில் நாஜிகள் தரப்பிலிருந்த நெல்லியின் நண்பர் ஒருவர் அவரைத் தப்பிச்செல்ல வலியுறுத்தினார். 1940-ல் ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு இருவரும், கையில் ஒரு பெட்டியுடனும் சிறிதளவு பணத்துடனும் தப்பிச் சென்றார்கள். சுவீடனில் அவர்களுக்குத் தஞ்சம் கிடைப்பதற்கு ஸெல்மா லாகர்லாஃப் உள்ளிட்டோர் உதவி புரிந்தனர்.

சுவீடனுக்கு வந்த பிறகுதான் நெல்லியின் தீவிரமான இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. அதாவது, 50 வயதுக்குப் பிறகு. இளம் வயதில் கவிதைகள் எழுதினாலும் அவையெல்லாம் ரொமாண்டிசிஸக் கவிதைகள்தான். சுவீடனில்தான் தீவிரமான ஒரு கவிஞராக நெல்லி உருவெடுத்தார். கவிஞர் பால் செலானின் நட்பு நெல்லியின் கவிதைகளை வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றது.

மொழி ஏற்படுத்திய பதற்றம்

சுவீடன் மொழிக்கும் ஜெர்மானிய மொழிக்கும் இடையில் பல்வேறு மொழிபெயர்ப்புகளைச் செய்தவாறு சுவீடனில் நெல்லி வாழ்க்கை நடத்தினார். அவரது தாயைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு வேறு அவருக்கு இருந்தது. அவரது முதல் கவிதைத் தொகுப்பு ’மரண வீடுகளில்’ (In the Houses of Death) என்ற தலைப்பில் 1947-ல் வெளியானது.

ஹிட்லரின் நாஜிப் படையினரிடமிருந்து தப்பி வந்தாலும் அவர்களது சித்திரவதைகளின் நினைவிலிருந்து நெல்லி சாக்ஸ் தப்பவேயில்லை. நாஜிகளிடம் அகப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாவதுபோல் பிரமைநோயும் பீதிநோயும் அவரை அவ்வப்போது பீடிக்க, தீவிர மனநலச் சிக்கலுக்கு ஆளானார். சில ஆண்டுகள் மனநல மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். அதிலிருந்து மீண்டாலும் ஜெர்மானிய மொழியில் யாராவது பேசுவதைக் கேட்டாலே அஞ்சி நடுங்கும் அளவுக்கு, அவரது மனம் மிகவும் பாதிப்படைந்துதான் இருந்தது.

அவரது கவிதைகளுக்காகவும் நாடகங்களுக்காகவும் மொழிபெயர்ப்புகளுக்காகவும் நெல்லி சாக்ஸ் பரவலான கவனமும் அங்கீகாரமும் விருதுகளும் பெற்றார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது 1966-ல் அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு. இஸ்ரேலிய எழுத்தாளர் எஸ்.ஒய். அக்னானுடன் இந்தப் பரிசை அவர் பகிர்ந்துகொண்டார். 1970-ல் குடல் புற்றுநோயால் நெல்லி சாக்ஸ் மரணமடைந்தார்.

எனக்கு மட்டும் தெரிந்தால்…

உன் கடைசிப் பார்வை

எங்கே விழுந்தது என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால்.

ஒரு கல்லின் மீதா?

தன் பார்வையின்மைமீது

குருட்டுத்தனமாய் வீழ்ந்த

எத்தனையோ இறுதிப் பார்வைகளை உள்வாங்கிக்கொண்ட

பார்வையற்ற கல் மீதா?

காலணி கொள்ளும் அளவிலான

மண் மீதா?

எத்தனையோ பிரிதல்களாலும்

எத்தனையோ கொலைகளாலும்

ஏற்கெனவே கருத்துப்போன

காலணி கொள்ளும் அளவிலான

மண் மீதா?

அல்லது நீ முன்பு நடந்த

மற்றெல்லாச் சாலைகளிலிருந்தும்

உனக்குப் பிரியாவிடை கூறும்

உனது இறுதிச் சாலையின் மீதா?

சகதி மீதா? உலோகத்தின் ஜொலிப்பு மீதா?

எதிரியின் இடுப்பு வார்க்கொளுவின் மீதா?

இனி வரும் உலகின் ஏதோவொரு சகுனத்தின் மீதா?

அல்லது, நேசிக்காமல்

யாருக்கும் விடைகொடுக்காத

இந்தப் பூமி

பறந்துகொண்டிருக்கும் பறவையொன்றின் சகுனத்தை

உனக்கு அனுப்பியதா,

வதைத்துத் தீய்க்கப்பட்ட உடலுக்குள்

உனது ஆன்மாவும் அப்படியே வலியில் சுளித்துக்கொண்டது என்பதை உனது ஆன்மாவுக்கு நினைவுறுத்தும்விதத்தில்?

இந்தச் செவ்வந்திக்கல்லினுள்

நெடுங்காலத்தின் இரவுப்பொழுது

உறைந்திருக்கிறது இந்த: செவ்வந்திக்கல்லினுள்.

அப்போது என்றுமே பாய்ந்தவாறும்

அழுதவாறும் இருந்த துயரத்துக்கு எரியூட்டியது

ஒளியின் ஆதியறிவு.

இப்போதும் ஒளிர்கிறது உன் இறத்தல்-

முரட்டு ஊதாவே.

* செவ்வந்திக்கல் – Amethyst, ஊதா நிறக் கல்

அந்திக்குள்…

அந்திக்குள் பகல் தானே வடிந்து

தீரும்போது

உருவமற்ற காலம் தொடங்கும்போது,

தனிமைகொண்ட குரல்கள் ஒன்றுசேர்கின்றன வேட்டையாடுவதையும் வேட்டையாடப்படுவதையும் தவிர வேறொன்றுமில்லை விலங்குகளெல்லாம்

மணம் தவிர வேறொன்றுமில்லை மலர்கள் யாவும்

ஆதியில் இருந்ததைப் போல ஒவ்வொன்றும்

பெயரற்றவையாய் ஆகும்போது,

காலத்தின் நிலத்தடிக் கல்லறைகளுக்குள் போகிறாய்,

இறுதியை நெருங்கிவிட்டவர்களுக்குத் திறந்திருக்கும் அது--

இதயம் மொட்டு வைக்கும் இடம் அது

இருள்சூழ் உள்முகத்தன்மைக்குள்

ஆழ ஆழ அமிழ்கிறாய்

காற்று ஓலமிடும் இடைகழிப்பாதையான

மரணத்தை ஏற்கெனவே கடந்து

வெளியில் செல்வதால் உறைந்துபோய்

உன் கண்களைத் திறக்கிறாய் நீ

அவற்றில் புதிய விண்மீனொன்று

விட்டுச்சென்றிருக்கிறது

தன் பிரதிபிம்பத்தை.

இரவில் நீ…

இரவில் நீ

வெகு மும்முரமாய் இருந்தாய்

கற்ற இவ்வுலக அறிவைத் தொலைத்துக்கொள்வதில்:

வெகுதொலைவிலிருந்து

உனது விரல் வரைந்துகாட்டியது

அந்த உறைபனிக்குகையை.

கடல்களின் இசை வரைபடத்தை

எழுதினாய் நீ.

உன் செவியின் கூட்டில் அதன் ஸ்வரங்கள் இணைந்தன.

சொற்களைச் செங்கற்கள் போல் அடுக்கி- ஒரு பாலம்

புதிரைக் கடப்பதற்கு.

சொர்க்கமும் புவியும்

சேர்ந்துகட்டிய

பாலம்.

- கவிதைகள் மொழிபெயர்ப்பு: ஆசை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in