

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘வம்சம்’தொடரில் ஜோதிகா, வேதிகா என்ற இரட்டைக் கதாபாத்திரத்தில் நடித்துவந்த பிரியங்கா, நிகழ்ச்சித் தொகுப்பாளினி வேலையையும் விட்டுவைக்கவில்லை.
“வம்சம் தொடரில் இரட்டை வேடத்தில் நடிக்கும்போது கிடைத்த வரவேற்பு இப்பவும் குறையலை. கதைப்படி ஒரு கதாபாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதால் இன்னும் சில வாரங்களுக்கு ஒரு கதாபாத்திரத்தில்தான் வருவேன். சீரியலில் கிடைத்த இந்தச் சின்ன இடைவேளையைப் பயன்படுத்திப்போம்னு வானவில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பிச்சிருக்கேன். இப்போ ஃபிட்னஸ் விஷயத்திலும் கவனமா இருக்கேன். என் கணவர் அருண் பிஸிக்கல் டிரெய்னர். எனக்கும் அவர்தான் ஃபிட்னஸ் குரு. நிறைய டிப்ஸ் கொடுப்பார். அவருக்கே தெரியாமல் சில விஷயத்தை ஃபாலோ பண்ணாம விட்டுடுவேன்’’ என்று புன்னகைக்கிறார் பிரியங்கா.
மீண்டும் ஒரு ரவுண்டு
சின்னத்திரையில் ‘ஆண்டாள் அழகர்’உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துவந்த கல்யாணி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘ஜுனியர் சீனியர்’ நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக முகம் காட்டத் தொடங்கியுள்ளார்.
“கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்குப் பிறகு தொகுப்பாளினியாக வர்றேன். நடிப்புக்கு மாறினதுக்குப் பிறகு மீண்டும் தொகுப்பாளினியாக முதல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது உள்ளுக்குள்ள கொஞ்சம் திகிலாகவே இருந்தது. இப்போ படு ஜாலியாக நிகழ்ச்சியை வழங்க ஆரம்பிச்சிட்டேன். சின்ன இடைவேளைக்குப் பிறகு தொகுப்பாளினியாக வந்ததும், ‘இவ்ளோ நாளா எங்கே இருந்தீங்க’ என்று அக்கறையான விசாரிப்புகளோடு தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வர ஆரம்பித்துவிட்டன. நல்ல கதாபாத்திரம் உள்ள கதைகளைத் தேர்வு செய்வதற்காகக் காத்துக்கிட்டிருக்கேன்’’ என்கிறார் கல்யாணி.