

மண்தரையை வாரத்துக்கு ஒரு முறை பசுஞ்சாணத்தால் மேவி, மேவி உள்ளங்கை தேய்ந்துபோனவர்கள் என் முன்னோர்கள். அவர்கள் அப்பத்தாவாகவோ அம்மாவாகவோ சகோதரிகளாகவோ இருந்தார்கள்.
படிகளே இல்லாத ஆழ்கிணற்றில் குடிநீருக்காக இறங்கித் தலையிலும் இடுப்பிலும் பானை, குடங்களைச் சுமந்தபடி மூச்சிரைக்க மேலேறி வருவார்கள். இதில் கர்ப்பிணிப் பெண்களும் அடக்கம். கம்போ, சோளமோ உரலில் இட்டு உலக்கையால் குத்திப் புடைத்து விறகடுப்பில் வெந்து வியர்த்து, களியாக்கிக் குடும்பத்துக்குப் பரிமாறுவார்கள்.
கூட்டுக் குடும்பங்களில் ஆண்களுக்குள் வரும் சண்டை சச்சரவுக்கெல்லாம் அந்தப் பெண்கள்தான் அடியும் உதையும் வாங்குவார்கள். திண்ணைப் பிரசவத்தில் உள்ளூர் கிராம மூதாட்டியின் கைவைத்தியத்தில் மறுஉயிர் பெறுவார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களின் மரணம் அதிகம் நிலவியதற்கு ஊர் எல்லையில் நிறுத்தப்பட்ட சுமைதாங்கிக் கற்களே சாட்சி. எனது சிறு வயதில் இந்தக் கற்கள் இனம்புரியாத அச்சத்தை உருவாக்கின.
இத்தகைய கிராமப் பின்னணியில் பள்ளி சென்று கல்வி கற்றதே என் போன்றவர்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. சமூகம், குடும்பம் யாவும் ஆணாதிக்கப் பின்னணியில் இயங்கிவருகின்றன என்பதும் பெண்ணுரிமை குறித்த புரிதலும் ஜனநாயக மாதர் சங்க அமைப்புக்குள் வந்த பிறகே எனக்கு ஏற்பட்டன.
பெண்ணடிமைத்தனம் எப்படி உருவானது, அது எப்படி நிலைபெற்றது என்பதற்கான விளக்கங்களை எந்தக் கல்வி நிலையத்திலும் பெற முடியவில்லை. அப்போது மட்டுமல்ல இப்போதும் அதே நிலை நீடிக்கிறது. மார்க்ஸிய அரசியலைக் கற்ற பின்னரே தோழர் ஏங்கல்ஸ், தந்தை பெரியார் ஆகியோர் பெண்ணுரிமைக்கு ஆற்றிய பங்கை அறிய முடிந்தது.
தமிழக சட்டமன்றத்தில் 2004-ல் மீனவர்களுக்கான ஒரு விவாதம் எழுந்தது. புயல் காலமான ‘ரஃப் சீசன’ உதவித்தொகையை உயர்த்தி தரும்படி ஓர் உறுப்பினர் கேட்டார். இந்தத் தொகை ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது என்பதை அறிந்த நான், பெண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். உடனே அந்த உறுப்பினர் பெண்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கிறார்களா என்று கேலியாகக் கேட்க, சபை கொல்லென்று சிரித்தது. பதிலுக்கு நானும் எழுந்து ஏன் ஆண்கள் வலைபோட்டால்தான் மீன்கள் சிக்குமா, பெண்களின் வலைக்குள் சிக்காதா என்று கேட்க மீண்டும் சபை சிரிப்பலைக்குள் சென்றது.
பிறகு நான் அதை விளக்கினேன். மீன்பிடி காலங்களில் மீனவர்களிடமிருந்து மீன்களைப் பெற்று தெருக்களில் விற்பனை செய்து வாழும் குடும்பங்கள், புயல் காலங்களில் வருமானம் இன்றிச் சிரமப்படுகின்றன. ஆகவே மீன் விற்கும் பெண்களுக்கும் அந்த உதவித்தொகை வழங்குவது அவசியம் என்றேன். அதற்குப் பதிலளித்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா என் கோரிக்கையை ஏற்றதோடு ‘ரஃப் சீசன்’ உதவித்தொகை மீனவப் பெண்களுக்கும் வழங்கப்படும் என்றார். மேலும் மீனவர் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு மீன்பிடி பயிற்சி தர, அதற்கான நிலையங்கள் நிறுவப்படும் என்றார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அன்றைய விவாதத்தின் பலனாகக் கிடைத்தது.
ஆண், பெண் சமத்துவத்தை அரசு விதிகள் கடைபிடிப்பதில்லை. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். நலிந்த முதியோரும் விதவைப் பெண்களும் அரசின் உதவித்தொகையைப் பெறுவதற்கு மிக முக்கிய விதிகளில் ஒன்று ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்பது. இது குறித்து சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பபட்டது. ஆண்தான் வாரிசு என்ற முடிவோடு அரசே செயல்பட்டால் பெண் சிசுக் கொலையை ஆதரிப்பதாகவே அர்த்தம். காரணம் ஆண்தான் வாரிசு என்று பெற்றோர்கள் கருதுவதால்தான் பெண் சிசுக் கொலை நடக்கிறது.
ஆகவே, ஆண் வாரிசு என்பதை நீக்க வேண்டும். ஆண், பெண் வாரிசுகள் இருந்தாலும் அவர்களால் கவனிக்கப்படாத நலிந்த முதியோர்களுக்கு நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். அதை அரசு ஏற்றுக்கொண்டது. அனால் இப்போதும் அரசு விதியில் ஆண் வாரிசே தொடர்கிறது.
அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் திடீரென இறக்க நேரிட்டால் வாரிசு அடிப்படையில் இறந்தவரின் மனைவிக்கே அந்தப் பணி வழங்கப்படுகிறது. ஆனால், பணியேற்ற அந்தப் பெண் மறுமணம் புரிந்தால் அவர் பெற்ற பணி உரிமை பறிக்கப்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் விடாப்பிடியாகப் பின்பற்றிவருகின்றன. விதவை மறுமணத்தை அனுமதிக்கும் சட்டம், அவர்களின் வேலை உரிமையை ஏன் மறுக்கிறது?
அதைவிடவும் கொடுமையானது போதிய கல்வித் தகுதி இருந்தால் தந்தை இறப்புக்குப் பிறகு மகன் திருமணமாகி இருந்தாலும் வாரிசுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் மகளுக்குத் திருமணம் ஆகியிருந்தால், வாரிசுரிமை வேலை மறுக்கப்படுகிறது. இத்தகைய ஆண், பெண் பாரபட்சமான சட்ட விதிகள் இன்றுவரை நீக்கப்படாமல் இருப்பது சமத்துவத்தை முன்னெடுக்கப் பெரும் தடையாக உள்ளது.
அரசுத் துறைகளின் வேலை வாய்ப்புகளில் கூடப் பாலினப் பாரபட்சம் நீடிக்கிறது. இன்று ரயிலிலும் விமானத்திலும்கூடப் பெண் ஓட்டுநர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் அரசுத் துறையின் வாகனங்களுக்கு ஆண்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் நிறைந்திருக்கும் சுகாதார நிலையங்களில் உதவியாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கு மாதம் 600 ரூபாய்தான் கடைசி ஊதியமாக வழங்கப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிலகங்கள், வணிக நிறுவனங்களில் பெண்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. தனியார் உணவகங்களில் முன்பு குழந்தைகள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, அந்த இடத்தில் இப்போது பெண்களே அதிகம் வேலை பார்க்கின்றனர். காரணம் ஆண்களைக் காட்டிலும் இவர்களுக்கு ஊதியம் குறைவு.
அரசு விதிகளில் உள்ள பெண் என்ற பாரபட்சம், அசமத்துவத்தை வலியுறுத்தும் கருத்துகள், சொல்லாடல்கள், பணி நியமனங்கள், ஊதிய முரண்பாடுகள் இவற்றைக் களைவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காமல், உலக உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகளை அறிக்கையாக விடுவதால் மட்டுமே பெண் முன்னேற்றம் ஏற்படாது.
பெண்களுக்கென்று உருவாக்கப்பட்ட 33% இட ஒதுக்கீடு மசோதாவைச் சட்டமாக்காமல் 30 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டு வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு. இன்னும் மூன்றாண்டுகள் சென்றால், 33% இட ஒதுக்கீடு சட்டத்துக்காக 33 ஆண்டுகளாகப் போராடிவரும் பெண்கள் என்று உலக வரலாறு இந்தியாவைப் பற்றி பதிவு செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அதை மாற்றுவது நம் கையில்தான் உள்ளது.
கட்டுரையாளர்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: pmdgldc@gmail.com