

எனக்குக் கல்யாணம் ஆனதும் மாமியார் வீட்டுக்கு அழைத்துப் போக ஆறு மச்சினர்கள், மூன்று சின்ன மாமியார்கள் வந்திருந்தார்கள். எங்கள் கிராமத்தில் புதுமணத் தம்பதியை ஊரே திரண்டு வந்து வழியனுப்புவார்கள்.
அப்பா, அம்மாவைப் பிரிந்து வேறு இடம் போவதை நினைத்து நான் அழ, என்னைப் பார்த்த அப்பா, அம்மா, பாட்டிகள், அத்தைகள் என அனைவரும் அழ, அவர்களைப் பார்த்து ஊரே அழ, இதைப் பார்த்து என்னை அழைத்துப் போக வந்த மாமியார் வீட்டாரும் அழ… அந்த இடமே உணர்வுக் கலவையால் நிறைந்தது. இதையெல்லாம் பார்த்த என் மச்சினர்களில் ஒருவர், “நாம அண்ணியை வீட்டுக்குத்தானே கூட்டிட்டுப் போறோம்? ஏதோ வனவாசத்துக்குப் போற மாதிரி இப்படி அழறீங்களே” என்று கேலி பண்ண ஒரு வழியாக ஊர் போய்ச் சேர்ந்தோம். எனக்கு 17 வயதாக இருக்கும்போது இது நடந்தது. முப்பது ஆண்டுகள் கடந்த பிறகும் அந்த நாள் என் மனதில் பசுமையாகத் தங்கியிருக்கிறது.
ஆனால் இந்தக் காலத்தில் புதிதாகக் கல்யாணமாகும் தம்பதியைப் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பெரும்பாலும் வீட்டுப் பெரியவர்கள் வருவதில்லை. புதுமணத் தம்பதிகளே போய் வந்துவிடுகிறார்கள். ‘இதெல்லாம் வேண்டாத சடங்கு’ என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் உறவு சார்ந்த பிணைப்பைப் புறந்தள்ளிவிட முடியாது. தனிக் குடும்பங்கள் பெருகி, கூட்டுக் குடும்பங்கள் அழிந்துவரும் நிலையில் இதுபோன்ற தருணங்களிலாவது உறவினர்கள் தோளோடு தோள் சேர்த்து நிற்கலாமே. சில நாட்களுக்காவது பகை மறந்து உறவு பாராட்டினால், காலப் போக்கில் கசப்புகள் மறந்து, உறவு நிலைத்துவிடும் அல்லவா!
- ஆர். புவனேஸ்வரி, ராணிப்பேட்டை.