

கடந்த இருபது ஆண்டுகளாக இந்திப் படங்களில் நாயகன் மற்றும் நாயகியின் அன்புக்குரிய அம்மாவாக நடித்துப் புகழ்பெற்ற ரீமா லாகூ மே 18-ம் தேதி மாரடைப்பால் காலமானார். மைனே பியார் கியா, குச் குச் ஹோதா ஹை, கல் ஹோ நா ஹோ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தவர் இவர்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் சல்மான் கானின் அம்மாவாக நிறையப் படங்களில் நடித்திருக்கும் இவர், மராத்தி சினிமாவிலும் நாடகத்திலும் முக்கியமான நடிப்பு ஆளுமையாக விளங்கியவர். து து மேன் மேன், ஸ்ரீமான் ஸ்ரீமதி போன்ற தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் நடித்து இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர். ரீமா லாகூவின் இயற்பெயர் நயன் கட்படே.
தனியாகப் பயணிக்கும் இந்தியப் பெண்கள்
இந்தியாவுக்குள்ளும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் தனியாகப் பயணிக்கும் பெண்களின் சதவீதம் அதிகமாகியுள்ளதாக ட்ரிப் அட்வைசர் இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2013-ம் ஆண்டில் தனியாகப் பயணம் செய்த பெண்கள் 37 சதவீதம். இது அடுத்த ஆண்டில் 41 சதவீதமாக அதிகரித்தது. சுதந்திரம், சவால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் போன்றவை இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டுள்ளன.
மொபைல் தொலைபேசித் தொழில்நுட்பம் மூலம் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ள முடியுமென்பதால் பெண்கள் தனியாகப் பயணம் செய்வது குடும்பங்களில் ஏற்புடை சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்களாகச் சேர்ந்து ஃபேஸ்புக்கிங் குழு அமைத்து சுற்றுலா செல்லும் போக்கும் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மணமகனைக் கடத்திய காதலி
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்மிபுர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தன்னை ஏமாற்றிய காதலனின் திருமணத்தன்று துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் சென்றார். மணமகன் அசோக் ஜாதவ் பண்டாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தபோது இந்தக் காதல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தன் பெற்றோர் வற்புறுத்தலால் அசோக் ஜாதவ் தனது காதலியுடன் தொடர்பைத் துண்டித்து வேறு பெண்ணுடன் திருமணத்துக்குச் சம்மதித்ததாகவும் சொல்லப்படுகிறது. முகூர்த்தத்துக்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் காரில் மூன்று ஆட்களுடன் வந்த அந்த இளம்பெண், துப்பாக்கி முனையில் அசோக்கை அச்சுறுத்தி காரில் ஏற்றிச் சென்றார்.
கர்ப்பிணிகளுக்குச் சேதி சொல்லும் வளையல்
கர்ப்பவதிகளின் நலனுக்கான ஆலோ சனைகளைச் சொல்ல உயர் தொழில்நுட்ப வளையல் உருவாக்கப்பட்டுள்ளது. தெற்காசியப் பெண்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வளையல் இது. செல்போன் இல்லாத கிராமத்துப் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கான ஊட்டச்சத்து குறித்த குறிப்பையும் அவர்களது கணவர்களின் செல்போன் மூலம் இந்த வளையல் தெரிவிக்கிறது. இன்டெல் சோஷியல் பிசினஸ் நிறுவனம் இந்த வளையலைத் தயாரித்துள்ளது. உடையாத பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வளையல், தண்ணீர் பட்டாலும் சேதமுறாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு கர்ப்பவதியின் கர்ப்ப காலம் முழுக்க இந்த வளையலை ரீசார்ஜ் செய்யவேண்டியதும் இல்லை. இந்த வளையலுக்கு இணையத் தொடர்பு வேண்டுமென்ற அவசியமும் இல்லை. வீட்டில் விறகடுப்பில் சமைக்கும்போது வரும் புகையில் அதிகம் கார்பன் மோனாக்சைடு வந்தால் அது குறித்த எச்சரிக்கையையும் கர்ப்பவதிகளுக்கு இந்த வளையல் சொல்லும். உலகம் முழுவதும் கர்ப்பத்தின்போதோ பிரசவத்தின்போதோ நாள்தோறும் 830 பெண்கள் இறக்க நேரிடுகிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள்.