கேளாய் பெண்ணே: ஏன் வருகிறது மார்பகப் புற்றுநோய்?

கேளாய் பெண்ணே: ஏன் வருகிறது மார்பகப் புற்றுநோய்?
Updated on
2 min read

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள் என்ன?

- வள்ளிநாராயணன், கன்னியாகுமரி.

அசார் உசேன், வலி தணிப்பு நிபுணர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, சென்னை.

குடும்பத்தில் முந்தைய தலைமுறையினர் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் அல்லது வேறு புற்றுநோய்கள் இருந்தால் அதன் காரணமாகப் பொதுவாக மார்பகப் புற்றுநோய் வரலாம். இதனை மரபணு சார்ந்த புற்றுநோய் என்பார்கள். மற்றவர்களைவிட தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம். அதே நேரம் நிச்சயம் வரும் என்று சொல்லவும் முடியாது.

புகை, குட்கா, பாக்கு, புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அல்லது வேறு புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம். நாற்பது வயதைக் கடந்த பெண்கள் சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மார்பகத்தில் சிறு கட்டி வந்தால்கூட உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

புற்றுநோய் தாக்கியவர்களுக்கு மார்பகத்தில் கட்டிகள் வளரும். இந்தக் கட்டிகளால் வலி இருக்காது. வலி இருந்தாலும் இல்லையென்றாலும் அசட்டையாக இருக்காமல் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல மார்பகத்தைச் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம், வீக்கம், காம்பில் நீர்வடிதல், ரத்தக்கசிவு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் கண்டிப்பாக மார்பகப் புற்றுநோயை அறிந்துகொள்ளும் மமோகிராம் (mammogram) பரிசோதனையைக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். சுய பரிசோதனையிலேயே கட்டிகளைக் கண்டுபிடித்துவிடலாம். அதனால் மாதத்துக்கு இரண்டு முறை சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

நான் கல்லூரி மாணவி. என்னைக் பார்க்கிறவர்கள் நான் பலவீனமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நானும் சில நேரம் அப்படித்தான் உணர்கிறேன். நான் என்ன மாதிரியான உணவைச் சாப்பிட வேண்டும்?

- காயத்ரி, பொள்ளாச்சி.

பிரீத்தி ராஜ், ஊட்டச்சத்து நிபுணர், சென்னை.

பொதுவாகப் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்லும் போதுதான் பெரும்பாலான மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன் ஆகிவை ஏற்படும். இதற்குக் காரணம் பள்ளிக் காலத்தில் சரியான நேரத்தில் அவர்கள் சாப்பிடுவார்கள். கைச்செலவுக்குப் பணம் இருக்காது என்பதால் தேவையில்லாத நொறுக்குத்தீனியை வாங்கிக் கொறிக்க மாட்டார்கள். ஆனால் கல்லூரிக்குச் சென்றவுடன் கைச்செலவுக்குப் பெரும்பாலான வீடுகளில் பணம் கொடுப்பார்கள். மாணவர்களும் தங்களுக்கு விருப்பமானதைக் கடையில் வாங்கிச் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் அவை துரித உணவாகத்தான் இருக்கும். உணவு முறை மாற்றத்தால் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை, உடல் பருமன் ஏற்படலாம்.

கல்லூரி செல்லும் மாணவிகள் மட்டுமல்லாமல் அனைவரும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் சமமான அளவு உணவைச் சாப்பிட வேண்டும். தினமும் 400 மி.லி. பால் குடிக்க வேண்டும். அதேபோல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். காலை உணவை நான்கு வகைகளாகப் பிரித்து அதில் காய்கறி, பருப்பு, முட்டை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இட்லி, காய்கறிகள் போட்ட சாம்பார், பச்சைப் பயறு தோசை, கொண்டைக் கடலை, காய்கறி கூட்டு போன்றவற்றைக் காலையில் சாப்பிடலாம்.

மதியம் சாதத்தின் அளவுக்குக் காய்கறிகள் இருக்க வேண்டும். எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், புளி சாதம் போன்றவற்றைக் குறைவாக எடுத்துக்கொண்டு அவற்றுடன் மூன்று வகையான காய்களைச் சேர்த்துச் சாப்பிடுங்கள். அத்துடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம். குறிப்பாக அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிட வேண்டும். கூடவே தயிர் அல்லது மோர் குடிக்கலாம். சமையலில் எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். காரக் குழம்பில் பயறு வகை, முருங்கை, கத்திரிக்காய் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

மூன்று வேளையும் அரிசி உணவைச் சாப்பிடாமல் இரவில் கோதுமை, சம்பா ரவை, வரகு, சாமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் செய்த உணவைச் சாப்பிடலாம். வாரத்துக்கு மூன்று நாட்கள் கீரை சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடுகிறவர்கள் தினமும் ஒரு முட்டை, பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டன், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சிக்கன், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மீன் என்று வகைப்படுத்தி சாப்பிடலாம்.

காலை உணவைச் சாப்பிடவில்லையென்றால் உடல் எடை கூடும். சரியான நேரத்தில் முறையான உணவை எடுத்துக்கொண்டால் உடல் பருமன் ஏற்படாது.

உங்கள் கேள்வி என்ன?

‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600002.
மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in