

அரசியல் ஆண்களுக்கான தளம் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆண்களுக்கென்று முத்திரை குத்தப்பட்ட காவல் துறை, ஊடகத் துறை, நிர்வாகத் துறை, நீதித் துறை போன்றவற்றுள் ஆண்களின் ஆதிக்கத்தைப் புறம் தள்ளித் தடம் பதித்த பெண்கள், அரசியல் தளத்தை மட்டும் இன்னும் ஒதுக்கிக்கொண்டேதான் வருகின்றனர்.
பெண்களுக்கு அரசியல் புரியவில்லையா? அரசியல் செய்யத் தெரியவில்லையா? அரசியல் பிடிக்கவில்லையா? இப்படிக் கேள்விகளைத் தொடுத்துக்கொண்டே போகலாம்.
பெண்களின் முந்தைய அரசியல் வரலாற்றை முன்னிறுத்தி விடை காண முயல்வோம். இந்தியாவில் நவீன அரசியலில் பெண்களை ஈடுபடச் செய்தவர் காந்தி. விடுதலைப் போராட்டத்தில், பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்பதை உணர்த்தி, நாடெங்கும் ஏராளமான பெண்களைப் போராட்டக் களத்தில் குதிக்கச் செய்தவர். காந்தி வழியில் அறப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெண்களும் உண்டு. சுபாஷ் வழியில் மறப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் உண்டு. காந்தியால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள்தான் கவிக்குயில் சரோஜினி நாயுடு, சுதேசா கிருபளானி, அருணா ஆசப் அலி போன்றவர்கள்.
தமிழகத்தில் பெரியார், தான் முன்னெடுத்த போராட்டங்களிலும் மாநாடுகளிலும் பெண்களை முன்னிறுத்திச் சாதித்துள்ளார். கள்ளுக்கடை மறியலில்தான் கைதாகிச் சிறை சென்ற பின்னர், போராட்டத்தைத் தீவிரப்படுத்த மனைவி நாகம்மாளையும் சகோதரி கண்ணம்மாளையும் முன்னிறுத்தி, அவர்கள் மூலம் ஆங்கில அரசுக்குச் சவால் விட்டதை வரலாறு கூறும். தன்னிடம் சமரசம் பேச வந்த ஆங்கில அரசின் பிரதிநிதிகளிடம் காந்தி, “கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை.
ஈரோட்டில் இருக்கும் அந்த இரு பெண்களின் கைகளில்தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பெரியார் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் பெருமளவு கலந்துகொண்டு, கைக்குழந்தையுடன் சிறை சென்ற பெண்களைத் திராவிட இயக்க வரலாற்று நூல்கள் முன்னிறுத்தி யுள்ளன. அந்த அளவு வலிமையுடனும் ஆற்றலுடனும் அரசியல் களங்களில் முன் நின்ற பெண்கள் இப்பொழுது ஏன் அரசியலை ஒதுக்க வேண்டும்?
முன்பு அரசியலை வழிநடத்திச் செல்ல நல்ல பல தலைவர்கள் இருந்தார்கள். காந்தி, நேரு, சுபாஷ், பட்டேல், கோகலே, பெரியார் போன்றவர்கள் தலைமையில் பெண்களுக்கு நம்பிக்கையிருந்தது. தலைவர்கள் மட்டுமல்ல; தொண்டர்களும் பெண்களை மதித்துப் போற்றினார்கள்.
இன்றோ அரசியலின் முகம் மாறிவிட்டது. இன்றைய தலைவர்களிடம், எல்லோரையும், குறிப்பாகப் பெண்களை முன்னிறுத்தி அவர்களை அரவணைத்துச் செல்லும் போக்கு குறைந்துவிட்டது. பெண்களைக் கண்ணியமாக நடத்தும் போக்கும் குறைந்துவிட்டது. நேர்மையும் சுயநலமின்றியும் இருந்த அரசியலில் இன்று, தன்னலமும் அபகரிப்பும் ஆதிக்கமும் அடாவடித்தனங்களும் தலைதூக்கி நிற்கின்றன.
பொதுவாக, அரசியல்வாதிகளுக்கென்று சில பல குணங்கள் வேண்டும். தைரியம், தன்னம்பிக்கை, எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல், நேரம் காலம் பார்க்காத உழைப்பு, அனைவரையும் கவரும் இயல்பு, சாமர்த்தியம், ஆணித்தரமான பேச்சு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் தன்மை, வெற்றி தோல்விகளைச் சமமாகப் பாவித்துப் போற்றுதல், போராட்டக் களத்தில் முன் நிற்றல், தேவைப்பட்டால் போராட்டத்தை முன்னெடுத்தல் போன்ற பொதுவான குணநலன்களுடன், பெண் அரசியலாளருக்கு ஆணாதிக்கத்தை எதிர்கொள்ளும் அசுர சக்தியும் தேவையாக இருக்கிறது.
இதனையும் மீறி அரசியலுக்கு வரும் பெண்கள் தங்கள் கணவன், மகன், சகோதரன் இவர்களில் யாரோ ஒருவரின் பின்னணியில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். சுய இயக்கம் மிகவும் அருகிவிட்டது.
இன்றும் பெண்கள், சமூகம் எதிர்பார்க்கும் நடத்தைக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள்தான் வளைய வந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் மீது ஒழுக்க மீறல் என்ற கறுப்புச் சாயம் பூசப்பட்டுவிடக் கூடாது என்பதில் 99% பெண்கள் உஷாராகவே இருக்கிறார்கள். முன்பின் அறிமுகமில்லாத ஆண்களிடம், காலம் நேரம் கட்டுப்பாட்டு எல்லையை மீறிப் பழகப் பெண்கள் தயாராக இல்லை. ஆண்களும் தங்கள் மனைவி, சகோதரிகள் இல்ல எல்லைக்குள், தேவையானால் இல்லத்துக்கு வெளியே குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இயங்க விரும்புகின்றனர். இப்படிப்பட்ட பண்பாட்டுக் கட்டுமானங்களும் பெண்கள் அரசியல் என்ற எல்லையைத் தொடத் தடைக் கற்களாக இருக்கின்றன.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com